
அர்த்தநாரீசுவரர் திருக்கோயில்
சைவசமயக் குரவர்களின் வரலாற்றை ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு, அவர்கள் சமயப்பணி மட்டும் ஆற்றியதோடு நின்றுவிடவில்லை என்பது நன்கு புலனாகும். சமூதாயப் பணியையும் அப்பெருமக்கள் ஆற்றியதைப் பெரிய புராணம் முதலிய அருள்நூல்கள் எடுத்துரைக் கின்றன. திருஞானசம்பந்தப் பெருமான் வரலாற்றில் அவர் மக்களுக்கு செய்த பேருதவிகள் பலவற்றைக் காணலாம். அவரிடம் எப்போதும் ஒரு பெருந்தன்மை - வள்ளல்தன்மை விளங்கியதைப் பார்க்க முடிகின்றது.
சம்பந்தர் நிகழ்த்திய அற்புதம்
கொடிய பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் திருவீழிமிழலை எனும் திருத்தலத்தில் நாள்தோறும் இறைவனிடம் படிக்காசு பெற்று மக்கள் அனைவருக்கும் உணவளித்துப் பசிப்பிணியைத் தீர்த்தார். திருநல்லூர்ப் பெருமணத்தில் தாம் சிவசோதியில் புகுவதற்கு முன்னால் அங்குள்ள அனைவரும் நற்கதி பெறவேண்டுமென்று விரும்பினார். அங்கிருந்த எல்லோரையும் எந்த வேறுபாடும் பார்க்காமல் சிவசோதியில் சேர்த்துக் கிடைத்தற்கரிய வீடுபேற்றை எளிதில் பெற்றுத் தந்தார். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் சம்பந்தப்பெருமான். உடலுக்குச் சோறிட்டதோடு அவர் உயிருக்கும் சோறிட்ட (சோறு - முத்தி) அருளாளராகத் திகழ்கிறார். இத்தகைய கருணையாளரான சம்பந்தர் கொங்கு நாட்டிலும் ஒரு பெரும் சமுதாயப் பணியைச் செய்தருளினார்.
அவர் திருக்கொடிமாடச் செங்குன்றூர் எனப் போற்றப்பெறும் திருச்செங்கோட்டுக்கு எழுந்தருளி இருந்த காலத்தில் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கியிருந்தது. எங்கும் கடுமையான குளிர் நிலவியது. அவருடன் வந்திருந்த அடியார்கள் குளிரின் கடுமையால் வருந்தினர். நளிர்சுரம் எனும் குளிரும் காய்ச்சலும் அவர்களைப் பற்றி வாட்டியது. அடியார்கள் நோயின் கொடுமையைச் சம்பந்தப் பெருமானிடம் முறையிட்டு நின்றனர். அவர், இது இந்நிலத்தின் இயல்பு. இது நம்மை ஒன்றும் செய்யாது என்று கூறி. 'அவ்வினைக்கு இவ்வினை எனத் தொடங்கும் திருநீலகண்டப் பதிகம் பாடி இறைவனைப் போற்றினார். அவரது அருளாணை விளங்கும் அப்பதிகத்தின் ஆற்றலால் அடியார்களைப் பற்றியிருந்த நளிர்சுரம் நீங்கியது. அதுமட்டுமல்லாமல் அந்நோய் அக்காலத்தில் கொங்கு நாட்டை விட்டே அகன்றது. இங்கும் வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கும் சம்பந்தர் சமமாகக் கருணை காட்டினார். இது அவரது உயர்ந்த உள்ளத்திற்கு மேலும் ஒரு சான்றாக விளங்குகிறது. சம்பந்தப்பெருமானின் அளப்பருங்கருணை வெளிப்பட்ட திருத்தலமான திருச்செங்கோடு, கொங்குநாட்டு உட்பிரிவுகளுள் ஒன்றான கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் விளங்குகிறது. ஓரளவு பெரிய ஊராக அமைந்துள்ள திருச்செங்கோட்டிற்குப் பேருந்துகள் மூலம் எளிதில் செல்லலாம். இது ஈரோட்டிலிருந்து பதினெட்டுக் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சேலம், நாமக்கல் முதலிய ஊர்களிலிருந்தும் இங்கு எளிதில் சென்றடையலாம்.
பெயர்க்காரணமும் பெருமைகளும் பட்டம்
திருச்செங்கோடு என்பதற்கு சிவந்தமலை என்பது பொருள். திரு என்பது சிறப்பு அடைமொழி. இதன் மற்றொரு பெயரான திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்பதும் ஏறக்குறைய இதே பொருள் உடையதுதான். கொடிகள் விளங்கும் மாடங்களையுடைய, சிவந்த குன்றைச் சார்ந்த ஊர் என்பது இதன் நேர்பொருள். மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை சிவந்த நிறமுடைய நாகப்படம் போலக் காட்சியளிக்கிறது. சிலப்பதிகாரம் இம்மலையை முருகனுக்குரிய சிறந்த தலமாக குறிப்பிடுகின்றது. இது இத்தலத்தின் தொன்மைச் சிறப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலமான திருச்செங்கோட்டுக்கு அருணகிரிநாதரும் திருப்புகழ்ப் பாடி பெருமை சேர்த்துள்ளார். அருணகிரியார் இம்மலையை நாகமலை, நாககிரி, நாகாசலம், உரசுகிரி, உரகவெற்பு, கட்செவிவெற்பு, சர்ப்பவெற்பு, சர்ப்பகிரி, சர்ப்பகேந்திரம், சர்ப்பப்பொற்றை, காளகிரி முதலிய பெயர்களால் புகழ்ந்துள்ளார். திருச்செங்கோட்டில் செங்கோட்டு வேலர் கோயிலும் மாதிருக்கும்பாதியன் (அர்த்தநாரீசுவரர்) கோயிலும் ஒரே இடத்தில் சிறப்புடன் விளங்குகின்றன. அர்த்தநாரீசரைச் செங்கோட்டையன் என்றும் முருகனைச் செங்கோடன் என்றும் போற்றுவர்.
திருச்செங்கோட்டுத் தலத்தின் சிறப்புகளை வீர கவிராச பண்டிதர் பாடிய திருச்செங்கோட்டுப் புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது. இதில் ஆயிரத்து இருநூற்று இருபத்து மூன்று பாடல்கள் உள்ளன. திருச்செங்கோட்டை மனதில் நினைத்தவர்கள் எண்ணிய செயல்கள் எல்லாம் கைகூடும். இதைத் தரிசித்தவர்கள் வீடுபேற்றை அடைவர். உலகில் எங்கிருந்து நாகமலையை நினைத்து வணங்கினாலும் வணங்கியவர்கள் பிறவித்தளையிலிருந்து விடுபடுவர். கயிலை மலையைக் காண விரும்புவோர் நாகமலையை மனதில் சிந்தித்து வணங்கினால் அப்பேற்றைப் பெறுவர். இத்தலத்தின் பெயரைச் சொன்னவர்களும் இத்தலத்துக்குச் செல்ல வழிகாட்டியவர்களும் முப்பத்து முக்கோடி தீர்த்தங்களில் நீராடிய பலனையும் வேள்விகள் பல செய்த பலனையும் தவஞ்செய்த பலனையும் பெறுவார்கள். குடும்பத்தோடு இம்மலைக்கு வந்து வழிபடுவோர் தமது இருமரபிலும் ஏழுகோடி தலைமுறையினரின் பாவங்களைத் தீர்த்துஅவர்களைச் சிவபதம் அடையச்செய்த புண்ணியத்தைப் பெறுவர். மாபாவிகள் ஆனாலும் இம்மலையைக் கண்டு வணங்கினால் பாவங்களிலிருந்து நீங்கி நற்கதியடைவர். காலையில் நாக்கிரியைத் தரிசிப்போர் மீண்டும் பிறவியெடுக்க மாட்டார்கள். இவ்வாறு, திச்செங்கோட்டுத் தலத்தின் சிறப்புகள் இப்புராணத்தில் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.
அர்த்தநாரிப்பரமர் அசலம், முருகாசலம், கோதையசலம், முத்துமலை, கடகமலை, இடபமலை, துர்க்கைமலை, முத்திமலை, சித்தர்மலை, சுத்தகிரி, ஞானகிரி, இரத்தினகிரி, சோணகிரி, இரத்தகிரி, பிரமகிரி, தீர்த்தகிரி, தருமகிரி, கந்தகிரி, பத்மகிரி, தேனுகிரி, திருவேரகம், திருச்செங்கோடு, சேடமலை, தெய்வமலை, சிவமலை, சஞ்சீவிமலை, வாயுமலை, விண்டுமலை, இருவர்கூடுமலை, தாருகாசலம், வந்திமலை, அழகியமலை, தாருமலை, சூதமலை, தவமலை, அனந்தமலை, தங்கமலை, யோகமலை, மாமேருமலை, கயிலை மலை, சிவனாடும் மலை, முனிவர் விரதமலை, பொன்னார மலை, இருடிமலை, அமுதமலை, சுனைமலை, பினேசமலை, கூலமலை, கீரமலை, உபயமலை, இமயமலை, கங்கைமலை, சங்குமலை, கொங்குமலை எனப் பலபெயர்கள் இம்மலைக்கு இருப்பதாக இத்தலபுராணம் உரைக்கின்றது.
தீர்த்தங்கள்
இத்தலத்தில் கணபதிதீர்த்தம், விட்டுணு தீர்த்தம், பிரம தீர்த்தம், துர்க்கை தீர்த்தம், நாகதீர்த்தம், சிவதீர்த்தம், குமாரதீர்த்தம், பாவநாசதீர்த்தம், தன்மதீர்த்தம், இந்திரதீர்த்தம், வயிரவதீர்த்தம், வாணதீர்த்தம், தேனுதீர்த்தம், கீரதீர்த்தம், சண்முகதீர்த்தம், சருவ தீர்த்தம், எண்திசைக்காவலர் பெயர்களில் அமைந்த எட்டுத் தீர்த்தங்கள், சூரிய புட்கரணி, சந்திரபுட்கரணி, பதுமதீர்த்தம், திருத்தீர்த்தம், எழு முனிவர்தீர்த்தம், இராமதீர்த்தம், மயேந்திரதீர்த்தம், தேவதீர்த்தம், சாம்புவதீர்த்தம், கங்கை யமுனை சரசுவதி தீர்த்தங்கள், அம்பாநதித் தீர்த்தம், பாண்டவதீர்த்தம், பாண்டிய தீர்த்தம் முதலிய பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நீராடிச் சிவபிரானை வணங்குவோர் இம்மை மறுமைப் பேறுகளை எளிதில் அடைவர்.
புராண வரலாறுகள்
திருச்செங்கோடு மலை மகாமேருமலையின் சிகரங்களுள் ஒன்றாக விளங்கிய சிறப்புக்குரியது. ஒருமுறை காற்றுக் கடவுளுக்கும் (வாயு தேவன்) ஆயிரம் படங்களையுடைய ஆதிசேடன் எனும் நாகராசனுக்கும் இடையில் தங்களுள் யார் வலிமை மிக்கவர் என்னும் போட்டி எழுந்தது. அதைச் சோதித்தறிய இருவரும் ஒரு போட்டியை ஏற்பாடு செய்தனர். அதன்படி மகா மேருமலையை ஆதிசேடன் தன் ஆயிரம் படங்களை விரித்து மூடிக்கொள்ள வேண்டும். காற்று தன் ஆற்றலால் அப்படங்களை மலையிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும். பிரித்துவிட்டால் ஆதிசேடன் வென்றதாகவும், பிரிக்க முடியாவிட்டால் காற்று வென்றதாகவும் இருவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதன்படி போட்டி நடைபெற்றது. வாயுதேவன் எவ்வளவு முயன்றும் படங்களை மலையிலிருந்து பிரிக்க முடியவில்லை. காற்றின் வேகத்தால் உயிர்கள் துன்புற்றன. அதைக் காணப் பொறுக்காத தேவர்களும் முனிவர்களும் நாகராசனிடம் வேண்டிக்கொள்ள, அவன் ஆயிரம் படங்களில் ஒருபடத்தை மட்டும் எள்ளளவு தளர்த்தினான். அப்போது காற்றுக் கடவுள் விரைந்து உள்ளே நுழைந்து அந்தப் படத்தால் பற்றப்பட்டிருந்து ஒரு சிகரத்தைப் பெயர்த்து எறிந்தான். அச்சிகரத்தோடு ஒருபடமும் துண்டாகி இரண்டும் ஒட்டிக்கொண்டு கொங்கு நாட்டில் வந்து விழுந்தன. பாம்பின் படத்திலிருந்து பெருகிய குருதியால் அச்சிகரம் செந்நிறமாக மாறியது. அவையே திருச்செங்கோடு எனும் தெய்வமலையாக விளங்குகின்றன. குருதியால் சிவந்திருப்பதால் செங்கோடு, செங்குன்று எனும் திருப்பெயர்களும் நாகத்தின் தலையோடு விளங்கும் மலை என்பதால் நாகமலை எனும் திருப்பெயரும் இதற்கு ஏற்பட்டன. மேருவின் சிகரம் தெற்கே பறந்து வந்தபோது அதிலிருந்து உடைந்த இருதுண்டுகள் இலங்கைத் தீவாகவும் அங்குள்ள திருக்கோணமலையாகவும் மாறின என்றும் இப்புராணம் கூறுகின்றது. மேலும், காற்று சிகரத்தைப் பெயர்த்தெறிந்த போது நாகத்தின் தலையில் விளங்கிய மணிகளுள் ஐந்தும் சிதறித் தெற்கே விழுந்தன. அவை ஐந்தும் ஐந்து சிவத்தலங்களாக மாறின. அவை திருவண்ணாமலை, திருவீங்கோய்மலை, திருவாட்போக்கி எனும் சிவாயமலை, திருப்பாண்டிக் கொடுமுடி, பொதிகை மலை என்பன.
ஒருமுறை காமதேனு எனும் தெய்வப்பசு கயிலைமலைக்குச் சென்று சிவபெருமானைப் பணிந்து அடியேன் சிவவழிபாடு செய்ய ஒரு தலத்தை அருளவேண்டும் என வேண்டிக்கொண்டது. பெருமான், மகாமேரு மலையில் விளங்கும் மேன்மையான ஐந்து கொடுமுடிகளை (சிகரங்கள்) எடுத்துச்சென்று தென்னாட்டில் வைத்து நம்மை வழிபடுக! என்று அருள்புரிந்தார். முன்பு காற்றுக் கடவுள் பிரித்தெறிந்த, கொடுமுடி ஆண்நாகக் கொடுமுடியாகும். மேருமலையில் விளங்கிய பெண்நாகக் கொடுமுடி முதலிய ஐந்து கொடுமுடிகளைக் காமதேனு தென்னாட்டிற்குக் கொண்டுவந்தது. அவற்றுள் பெண்நாகக் கொடுமுடியைத் திருச்செங் கோட்டில் விளங்கும் நாகமலைக்கு அருகில் காமதேனு வைக்க அது நாகமலையோடு கூடி பிணைந்து நின்றது. ஆகவே, இம்மலை கீழ்ப்புறம் இருநாகப்படங்கள் இணைந்ததைப் போன்ற வடிவில் உயர்ந்தும் தென் மேற்கில் பாம்பின் உடல்போலச் சற்றுச் சிறுத்தும் காட்சியளிக்கிறது.
காமதேனு கொண்டுவந்து வைத்த மற்ற நான்கு சிகரங்களே கொல்லிமலையாகவும் வேதகிரியாகவும் புட்பகிரியாகவும், சங்ககிரியாகவும் விளங்குகின்றன. மகாமேருமலையில் விளங்கிய மற்றொரு புண்ணியக் கொடுமுடி வந்தியாபாடாணம் என்பது. அதைச் சிவபிரானிடம் நான்முகனும் திருமாலும் வேண்டிப் பெற்றுக் கொண்டனர். வந்தீசுவரர் எனும் பெயரில் அங்கு ஒரு இலிங்கத்தை நான்முகன் நிறுவிப் பூசித்தான். இச்சிகரம் பிள்ளைப் பேறில்லாதவர்களுக்கு அப்பேற்றை அருளும் சிறப்புடையது. இச்சிகரத்தைச்சூரபன்மன் அங்கிருந்து பெயர்த்துக் கொண்டு வந்து திருச்செங்கோட்டின் உச்சியில் பதித்து வைத்து வழிபாடு செய்தான். அதனால் அண்டங்களை எல்லாம் ஆளும் பேறு பெற்றான். இதற்கருகில் மோகினிகசம் எனும் சிகரம் ஒன்று உள்ளது. வந்தியா பாடாணம் வரடிகல் எனப்படுகிறது. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் இவ்விரு சிகரங்களையும் வலம் வந்து வணங்கினால் குழந்தைப்பேறு கிட்டும் என்ற நம்பிக்கை இங்கு நிலவுகிறது. ஆனால் அவ்வாறு வலம் வருவது எளிதல்ல. வரடிகல்லின் வடபுறம் ஆயிரத்து எண்ணூறு அடி ஆழமுள்ள பள்ளமுள்ளது. சிறிது தவறினாலும் பிழைப்பதரிது. அதனால் தடுப்புச்சுவர் கட்டி வைத்துள்ளனர். அதையும் தாண்டி சிலர் வலம் வருகிறார்கள். இங்கு பாண்டீசுவரர் எழுந்தருளியுள்ள சிறுகோயில் உள்ளது. இவ்வாறு நாகமலை பல்வேறு அரிய பெரிய சிறப்புகளைக் கொண்டு விளங்குவதை இத்தலபுராணம் விளக்கமாக எடுத்துரைத்துப் போற்றுகிறது.
ஒருமுறை உமையம்மை சிவபிரானுடைய திருக்கண்களை விளையாட்டாகத் தம் கைகளால் மூடினாள். அப்போது எங்கும் இருள் மூடியது. பின்னர் உமையவள் கைகளை எடுத்ததும் எங்கும் ஒளி பரவியது. இருள்மூடியபோது உயிர்கள் வருந்தின. அதனால் உமையவளும் வருந்தி அப்பிழை தீரவும் இறைவனது இடப்பாகம் பெறவும் தவம்புரிய விரும்பி இறைவனிடம் விண்ணப்பித்தாள். பெருமானும் கேதாரம், காசி முதலிய தலங்களில் வழிபாடு செய்து விட்டுக் காஞ்சியில் சென்று தவம் செய்யும்படி இறைவிக்கு அருள் புரிந்தார். இறைவியும் அவ்வாறே கேதாரம், காசி முதலிய தலங்களில் பெருமானை வழிபட்டுக் காஞ்சியை அடைந்தாள். காஞ்சியில் மாமரத்தின்கீழ் சிவவழிபாடு செய்தாள். அங்கு அம்மைக்குக் காட்சியளித்த இறைவன் இறைவி தமது கண்களைப் பொத்திய பாவம் நீங்க அருள்புரிந்தார். மேலும் இறைவியைத் திருவண்ணாமலைக்குச் சென்று தவம்புரியுமாறும் அங்கு இடப்பாகம் அளிப்பதாகவும் உரைத்தார்.
அவ்வாறே அம்மை அண்ணாமலையை அடைந்து கேதார விரதத்தை மேற்கொண்டு சிவபெருமானை வழிபட்டு வந்தாள். இறைவியின் வழிபாட்டுக்கு மகிழ்ந்த சிவபிரான் அவள் முன்தோன்றி, முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருச்செங்கோட்டுக்குச் சென்று அங்குள்ள தேவதீர்த்தத்தில் மலர்ந்திருக்கும் பொற்றாமரையில் இருந்து தவம்புரிய ஆணையிட்டார். அதன்படி இறைவி நாகமலையைச் சேர்ந்து தவம் செய்ய, சிவபரம்பொருள் அம்பிகையின் மூன்தோன்றி அவளுக்குத் தமது இடப்பாகத்தை அளித்தருளினார். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். இறைவன் மங்கைபங்கராகத் தேவதீர்த்தத்தின் மீது எழுந்தருளினார். இன்றும் அர்த்தநாரீசரது திருவடிகளுக்கிடையில் உள்ள குழியில் செம்பை விட்டு கீழேயுள்ள தீர்த்தநீரை எடுத்து அருச்சகர்கள் வழிபடுவோர்க்கு வழங்குகின்றனர். இதற்கு முனிதீர்த்தம் என்ற ஒரு பெயரும் உண்டு. திருச்செங்கோட்டுத் தலபுராணம் கூறும் இப்புராண வரலாறு வேறொரு வகையாகவும் இங்கு கூறப்பெறுகிறது.
முற்காலத்தில் பிருங்கி என்ற முனிவரொருவர் சிவபத்தியில் சிறந்து விளங்கினார். இவர் சிவபெருமானைத் தவிர யாரையும் வணங்காத கொள்கையுடையவர். இறைவியையும் வணங்காத இயல்பினராக இருந்தார். ஒருமுறை அம்பிகை இறைவனோடு நெருங்கிய நிலையில் வீற்றிருந்தாள். அப்போதும் இம்முனிவர் இருவரையும் சேர்த்து வலமாக வராமல், ஒரு வண்டாக மாறி இருவருக்குமிடையில் புகுந்து சிவபிரானை மட்டும் வலமாக வந்து வணங்கினார். பிருங்கி முனிவரது செயலால். சினமுற்ற பெருமாட்டி அவருக்கு உண்மையை உணர்த்த, முனிவரது உடலில் தனது கூறாக விளங்கும் சத்தியை எடுத்துக் கொண்டாள். சத்தியை இழந்த முனிவர் கீழே விழப் போனார். அப்போது சிவபிரான் அவர் விழாமல் இருக்க அவருக்கு மூன்றாவதாக ஒருகாலையும் ஓர் ஊன்றுகோலையும் அருளினார். அதனால் சிவமும் சத்தியும் ஒன்றே என்பதை உணர்ந்த முனிவர் தம்மை மன்னித்தருளும் படி அம்மையிடம் வேண்டிக் கொண்டார். இறைவி முனிவரை மன்னித்தருளினாலும் அந்நிகழ்ச்சியால் பெரிதும் வருத்தமுற்றாள். எனவே, இறைவனோடு என்றும் பிரிவின்றி விளங்க விரும்பிப் பெருந்தவம் செய்து திருச்செங்கோட்டில் இறைவனது இடப்பாகத்தைப் பெற்றாள். திருச்செங்கோட்டில் மாதிருக்கும் பாதியனுக்கு அருகில் பிருங்கிமுனிவர் சிலையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சூரபன்மன் முதலிய அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட பிரமகத்தி தோசம் நீங்க முருகப்பெருமான் நாகமலையில் சிவவழிபாடு செய்ததை இத்தலபுராணம் விரிவாக எடுத்துரைக்கிறது. முருகப் பெருமான் தமது வழிபாட்டிற்காக இங்கு இரு சிவலிங்கங்களைப் பிரதிட்டை செய்தார் அவை குமரேசர், முருகேசர் எனும் திருப்பெயர் களோடு விளங்குகின்றன. தலவரலாறுகளை அறிந்துகொண்ட நாம் இனி மலையேறத் தொடங்கலாம்.
மலைவழிக்காட்சிகள்
மலையடிவாரத்தில் படியேறத் தொடங்கும் இடத்தில் ஆறுமுகப்பெருமான் தம் தேவியரோடு எழுந்தருளியுள்ள கோயில் விளங்குகிறது. இவரைப் பணிந்து படியேறத் தொடங்குவது மரபாகும். இங்கு விநாயகர் சன்னிதிகள் சில உள்ளன. மலைமீது செல்ல சுமார் ஆயிரத்து இருநூறு படிகள் ஏறவேண்டும். ஊர்திகள் மூலமாகவும் மலைமீதுள்ள கோயிலை அடையலாம். அதற்குத் தனியாக வழி அமைக்கப் பெற்றுள்ளது. மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் பல மண்டபங்கள் காட்சி தருகின்றன. மலையேறும்போது இளைப்பாற இவை உதவுகின்றன. இம்மலையில் புண்ணிய தீர்த்தங்கள் பல விளங்குகின்றன. மலையேறும் வழியின் தொடக்கத்தில் விநாயகர், வீரபத்திரர், பெரிய திருமேனி கொண்ட நந்தியெம் பெருமான் ஆகியோர் காட்சி தருகின்றனர். வழியிலுள்ள பாறையில் ஐந்து தலை நாகத்தின் மிகப்பெரிய உருவம் ஒன்று செதுக்கப் பெற்றுள்ளது. இதன் தலையில் சிவலிங்கம் உள்ளது. அருகில் இதேபோலச் சிறிய அளவில் வடிக்கப்பெற்ற நாக உருவங்களும் உள்ளன. இன்னும் மேலே சென்றால்அறுபதாம்படி என்னும் சத்தியப் படிகளைக் காணலாம். இங்கு முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இங்கு நின்று ஒருவர் சத்தியம் செய்தால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. தீராத வழக்குகள் எல்லாம் இங்கு செய்யப்பெறும் சத்தியத்தால் தீர்ந்து விடுகின்றன. இதனால் இருதரப்பினரும் பகைநீங்கிச் சமாதானம் ஆகின்றனர்.
அடுத்து நாம் காண்பது பாபநாசதீர்த்தம். இங்கு சுரகண்டீசுவரர் எழுந்தருளியுள்ளார். இவரைச் சுரகரேசுவரர் என்றும் கூறுவர். நடராசப் பெருமான் போன்ற வடிவம் கொண்ட இவருக்கு மூன்று தலைகளும் மூன்று கைகளும் மூன்று கால்களும் விளங்குகின்றன. சுரம் தீர்க்கும் பரமனான இவரை வழிபட்டால் கொடிய சுரங்கள் முதலிய நோய்கள் நீங்கும். இவர் சிவபெருமானது மகேசுவர வடிவங்களில் ஒருவராவார். இவரை வணங்கிக் கொண்டு சென்றால் மலைக்கோயிலின் உயர்ந்த ஐந்து நிலை இராசகோபுர வாயிலை அடையலாம். இது வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது.
இக்கோயிலின் தெற்கிலும் மேற்கிலும் மூன்று நிலைகள் கொண்ட கோபுரவாயில்கள் உள்ளன. கிழக்குப் பகுதியில் மட்டும் சாதாரண வாயில் உள்ளது. ஊர்திகளில் வருவோர் மேற்குவாயில் வழியாகத் திருக்கோயிலுக்குள் செல்வர். நாற்புறமும் திருமதிலும் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் கோயில் கிழக்கு நோக்கியும் அர்த்தநாரீசர் கோயில் மேற்கு நோக்கியும் அமைந்துள்ளன. வடக்கு வாயிலின் முன்புறம் மூத்தபிள்ளையாரின் பெரிய திருவுருவம் விளங்குகிறது. இவ்வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் காட்சி தருகின்றனர்.
வேலவர் கோயில்
செங்கோட்டு வேலவர் திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் எனவிரிவாக அமைந்துள்ளது. முன்மண்டபம் வேளாளக் கவுண்டர் மண்டபம் எனப்படுகிறது. இம்மண்டபம் தென்வடலாக நீண்டுள்ளது. இங்குள்ள தூண்களில் பெரிய சிற்பங்களும் சிறிய சிற்பங்களும் நிறைந்துள்ளன. இவை யனைத்தும் அற்புதமான கலைப்படைப்புகளாகும். புராண வரலாறுகளை இவை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. இங்கு மேற்கூரையில் தாமரையும் எட்டுக் கற்சங்கிலிகளும் காட்சி தருகின்றன. பேரூர்க் கனகசபையிலும் இவ்வாறே அமைந்திருப்பதைக் காணலாம். இங்குள்ள சிற்பங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை. அத்தனை அழகுடன் வடிக்கப் பெற்றுள்ளன. இங்குள்ள வீரபத்திரர் சிற்பம் பெரிய அளவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இம்மண்டபத்தின் கிழக்கில் கதிரவன் காட்சி தருகிறார். இங்கு மயிலூர்தியும் கொடிமரமும் விளங்குகின்றன. தென்பால் குமரேசர் கோயில் உள்ளது. இம்மூன் மண்டப வாயிலின் இருபுறமும் கம்பீரமான வாயிற்காவலர்கள் காட்சிஅளிக்கின்றனர். அற்புதமான சிற்ப வேலைப் பாடுகளோடு இவர்களது திருமேனிகள் உருவாக்கப் பெற்றிருக்கின்றன. இவர்தம் அணிகலன்கள் மிகவும் அழகாக வடிக்கப்பெற்றுள்ளன. வாயிலின் வலப்பக்கம் இரண்டு விநாயகர் திருமேனிகள் விளங்கு கின்றன. வாயிலின் இடப்பக்கம் அருணகிரிநாதர் காட்சியளிக்கிறார். இவருக்குத் திருச்செங்கோட்டின் மீதும் இங்குள்ள வேலவர் மீதும் அளவற்ற ஈடுபாடு உண்டு. இவரது திருப்புகழ்ப் பாடல்களிலும் கந்தரனுபூதி, கந்தரலங்காரப் பாடல்களிலும் இதைக் காணலாம். மகாமண்டபத்தில் செங்கோட்டு வேலரின் எழுந்தருளும் அழகிய செப்புத்திருமேனி உள்ளது. அர்த்தமண்டப வாயிலின் இருபுறமும் விநாயகப் பெருமானும் நக்கீரரும் உள்ளனர்.
கருவறையில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் இரு திருக்கைகளுடன் அழகே திரண்டு நிற்பதைப்போலத் திருக்காட்சி வழங்குகிறார். வலக்கையில் வேலை ஏந்தியுள்ளார். 'பயந்ததனி வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!, 'சேலார் நி வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ, நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே!, 'கன்னிப்பூகமுடன் தருமாமருவும் செங்கோடனை வாழ்த்துகை சாலநன்றே' முதலிய கந்தரலங்கார அடிகள் நினைவுக்கு வருகின்றன. வேண்டியதை வழங்கும் வள்ளலான வேலனை மனங்குளிர வணங்கி மகிழ்கிறோம். மகாமண்டபத்தின் தென்பால் சண்டீசர் வீற்றிருக்கிறார். வேலவரின் மகாமண்டபமே அம்மையப்பரின் வடக்குச் சுற்றாகும். முருகனை வழிபட்டு வெளியே வந்து தெற்குப்புறம் வந்தால் நவகோள்கள் சன்னிதியைக் காணலாம். அடுத்து ஒரு சிவலிங்க சன்னிதி காட்சியளிக்கிறது. தெற்குச் சுற்றில் விநாயகப் பெருமானும் நால்வர் பெருமக்களும் எழுந்தருளியுள்ளனர்.
அர்த்தநாரீசர் கோயிலுக்குள் செல்லும் பொதுவழி அருகில் இப்பிள்ளையார் சன்னிதி உள்ளது. இங்கு ஆலங்காட்டுக்காளி சிற்பமும் ஊஊர்த்துவதாண்டவர் சிற்பமும் தூண்களில் பெரிய அளவில் வடிக்கப் பெற்றுள்ளன. அர்த்தநாரீசர் கருவறையின் கிழக்குப்புறம் அண்ணாமலை யாரும், தென்புறம் ஆலமர் கடவுளும் காட்சி தருகின்றனர். ஆலமர் செல்வருக்கு இருபுறமும் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. ஒரு சிவலிங்கத்திற்கு அருகில் அம்மையும் காட்சி தருகிறாள். அம்மையின் எழுந்தருளும் திருமேனி ஒன்றும் இங்கு உள்ளது. அர்த்தநாரீசர் கோயிலுக்கு முன்னால் கல்லாலான பலகணிவாயிலே உள்ளது. எனவே இதன் வழியாக உள்ளே செல்லமுடியாது. ஆனால் இறைவனை வெளியில் நின்று கண்டு வழிபடலாம். தெற்குச்சுற்றில் உள்ள பொதுவழி மூலமாகவோ அல்லது கிழக்குச்சுற்றில் உள்ள சிறப்புவழி மூலமாகவோ வடக்கே சென்று இறைவன் சன்னிதியை அடையலாம். முருகன் கோயிலிலிருந்தும் அர்த்தநாரீசர் சன்னிதிக்கு வரலாம். அவ்வாறு வரும்போது வடக்கிலிருந்து தெற்குநோக்கி வரவேண்டும். அர்த்தநாரீசர் கருவறைக்கு அருகே வடமேற்கில் வேலவர் கருவறை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாதிருக்கும் பாதியன் கோயில்
அர்த்தநாரீசர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் எனும் அமைப்பில் மேற்கு நோக்கி விளங்குகிறது. இதையடுத்து முன்பு குறிப்பிட்ட பலகணி வாயில் உள்ளது. மகாமண்டபத்தில் நந்திதேவர் வீற்றிருக்கிறார். இங்கு தெற்கு நோக்கிய நிலையில் அர்த்தநாரீசரின் அழகிய எழுந்தருளும் திருமேனி காட்சியளிக்கிறது. இது மூலவரை போலவே அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் உள்ள வாயிலின் இருபுறமும் வாயிற்காவலர்கள் காட்சியளிக்கின்றனர். கருவறையில் நின்ற திருக்கோலத்தில் ஆறடி உயரத் திருமேனியில் மாதிருக்கும் பாதியன் அருட்பொலிவுடன் திருக்காட்சி தருகிறார். அருகில் பிருங்கி முனிவரின் செப்புத் திருமேனியும் அம்பிகை வழிபட்ட மரகதலிங்கமும் உள்ளன. மாதிருக்கும் பாதியன் இரு திருக்கைகளுடன் விளங்குகிறார். வலப்பக்கம் ஆணுருவமாகவும் இடப்பக்கம் பெண்ணுருவமாகவும் காட்சியளிக்கிறார். வலத்தொடையில் தண்டாயுதத்தை ஊன்றி உயர்த்திய வலக்கையின் விரல்களால் அதன் நுனியைப் பற்றியுள்ளார். இடக்கையைத் இடது தொடைமீது வைத்துள்ளார். திருநீற்றுப் பூச்சால் வெண்ணிறமாகக் காட்சி தருகிறார். இவரைச் சுயம்பு மூர்த்தி என்றும் சித்தர்கள் நவபாசாணத்தால் உருவாக்கிய மூர்த்தி என்றும் பலவாறு கூறுகின்றனர். இப்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்யப் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அலங்காரம் மட்டும் சிறப்பாகச் செய்யப் பெறுகிறது. மாணிக்கவாசகர் பாடிய,
'தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்கவளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ!'
எனும் பாடலும் சம்பந்தர் அருளிய,
'பாலன நீறுபுனை திகழ்மார்பில் பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கோலமலர்ப்பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர்மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே'
எனும் பாடலும் நம் நினைவுக்கு வருகின்றன. அம்மையப்பரை ஆர்வத்தோடு கண்டு மகிழ்ந்து, அகங்குளிர வணங்கி மகிழ்கிறோம். இங்குள்ள அர்த்தநாரீசர் வடிவம் போல வேறு எங்கும் காணமுடியாது. சிற்பநூல்கள் கூறும் அர்த்தநாரீசர் திருவுருவத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மற்ற கோயில்களில் காணப்பெறும் அர்த்தநாரீசர் திருவுருவங்கள் எல்லாம் சிற்பநூல்கள் கூறும் அமைப்பிலேயே இருப்பதைக் காணலாம். சிவபிரான் திருக்கோயில்களில் கருவறையில் உருவத்திருமேனி அமைந்துள்ள திருக்கோயில் இதுவொன்றேயாகும். இங்கு ஆண்டில் மூன்று நாட்கள் மாலைநேரத்தில் கதிரவனது ஒளி மாதிருக்கும்பாதியன் திருமேனியில் படுகிறது. பெருமானை வணங்கி வெளியில் வந்து தெற்குச்சுற்றில் வலம்வரத் தொடங்கலாம்.
தெற்குச் சுற்றில் ஒரு புன்னைமரம் காட்சி தருகிறது. இங்கு கிழக்கு நோக்கிய அமைப்பில் ஆதிகேசவப்பெருமாள் கோயில் விளங்குகிறது. கருவறையில் திருமகள், நிலமகள் உடனமர் ஆதிகேசவர் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அருகில் இதே கோலத்தில் எழுந்தருளும் திருமேனிகளும் உள்ளன. இக்கோயிலுக்கு வடபால் நல்லீசர் கோயில் உள்ளது. தென்மேற்கில் மூத்தபிள்ளையார் நாகர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். மேற்குச்சுற்றில் குன்றீசர், மலைவளர் காதலியம்மை உடனமர் இராமநாதர், ஐம்பெரும் பூதங்களின் பெயரால் அமைந்த ஐந்து இலிங்கங்கள், மனோன்மணியம்மை ஆகிய சன்னிதிகள் உள்ளன. அர்த்தநாரீசர் கோயிலுக்குத் தெற்கே தனியாக அமைந்துள்ள மண்டபத்தில் ஏழு தாய்மார்களும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் எழுந்தருளியுள்ளனர்.
பெருமாள் கோயிலுக்கு வடபால் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த நாகேசுவரர் திருக்கோயில் கிழக்குப் பார்த்த அமைப்பில் விளங்குகிறது. இங்கு கருவறையில் நாகேசர் இலிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் முன்மண்டபத் தூண்களில் பாயும் குதிரை மீதமர்ந்துள்ள வீரர்களின் சிற்பங்கள் வடிக்கப் பெற்றுள்ளன. மேற்கு வாயிலுக்கு நேராகவுள்ள பெரிய முன் மண்டபத்தில் அர்த்தநாரீசருக்கு எதிரில் கொடிமரமும் நந்தியும் விளங்குகின்றன. அடுத்துள்ள பலகணிவாயிலின் இருபுறமும் கம்பீரமான வாயிற் காவலர்களின் பெரிய திருமேனிகள் அமைந்துள்ளன.
அற்புத நிகழ்ச்சி
இம்மண்டபத்திலும் அழகிய சிற்பவேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. இம்மண்டபத்தில் வீற்றிருக்கும் நந்தி 'கடலை தின்ற காளை' என்று போற்றப்பெறுகிறார். எனவே இம்மண்டபத்திற்குக் கடலை தின்ற நந்தி மண்டபம் என்ற பெயரும் உண்டு. இதற்கு ஒரு வரலாறு கூறப்பெறுகிறது. சோழ நாட்டிலுள்ள திருவாவடுதுறையிலிருந்து ஆதிசிவப்பிரகாசர் என்ற அருளாளர், ஒருமுறை இம்மலைக்கு வந்தார். அவர் பற்பல சித்துகளைச் செய்து புகழ்பெற்றவராக விளங்கினார். அவரது பெருமையை உணராத அறிவிலிகள் சிலர் இவர் அற்புதங்களைச் செய்த ஞானி' என்பது உண்மையானால் நாங்கள் இப்பொழுது இந்த நந்திக்கு முன்னால் வைக்கின்ற கடலையை இது எழுந்து உண்ணவேண்டும் என்று கூறினர். சிவப்பிரகாசரது மாணாக்கர்கள் இச்சொற்களைக் கேட்டு வருந்தித் தம் குருநாதரிடம் முறையிட்டனர். அதை அமைதியாக கேட்டுக் கொண்ட அவர், சிறிது திருநீற்றைக் கையில் எடுத்துக்கொண்டு, சிவபிரானைத் தொழுது,
'வில்லார் பொதுச் சபையின் வித்தகா நீயுமுனங்
கல்லானைக்கு இக்கு அருத்திக் காட்டியவுன் வல்லாண்மை
கட்டுரையே யாயின் இந்தக் கல்லேறு எழீஇக் கடலை
இட்ட இவர் முன்தினச் செய்யே'
எனும் பாடலைப் பாடினார். அப்போது கண்டோர் அஞ்சும்படி இக்காளை மூக்காரமிட்டு எழுந்து கடலையை உண்டுவிட்டு மீண்டும் பழையபடி மாறியது. உண்மையுணர்ந்த மூடர்கள் அவர் திருவடிகளில் விழுந்து மன்னிப்புக் கோரினர். அவரும் அவர்களை மன்னித்தருளினார். பேரூராதீன ஆதிகுரு முதல்வரான சாந்தலிங்க அடிகளாரின் குருவாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. திருச்செங்கோட்டுக் குறவஞ்சி,
'பொன்னின் மழை பொழிந்ததெங்கள்நாடு வண்ணப்
பூமலரின் மாரிமிகப் பொழிந்ததெங்கள் நாடு
கன்னியுமைக்கு இடம்பகர்ந்த நாடு - நல்ல
கல்லிடபம் கடலைதின்று சொல்லுயர்ந்த நாடு'
என்று இவ்வற்புதச் செயலை எடுத்துரைத்துப் போற்றுகிறது. இந்நந்தி மண்டபத்தில் உள்ள தூண்களில் பெரிய அளவில் அமைந்த இரதி, மன்மதன், வீரபத்திரர், காளி ஆகியோரது அழகிய சிற்பங்கள் காட்சி தருகின்றன. இம்மண்டபத்தின் வெளிவரிசைத் தூண்களில் பாயும் யாளி மீது அமர்ந்துள்ள வீரர் சிலைகளும், பாயும் குதிரை மீது அமைந்துள்ள வீரர் சிலைகளும் கம்பீரமாகக் காட்சி தருகின்றன. வடக்குச் சுற்றிலும் தெற்குச் சுற்றிலும் உள்ள வெளிப்புறத் தூண்களிலும் இதேபோன்ற வீரர்களது சிற்பங்கள் வடிக்கப்பெற்றுள்ளன. இவை பெரிய அளவில் அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்குச் சுற்றில் மல்லிகார்ச்சுனர் கோயிலும் ஆயிரம் சிறு இலிங்கங்களைத் தன்னகத்தே கொண்ட சகத்திரலிங்கம் விளங்கும் கோயிலும் உள்ளன. இக்கோயிலின் அருகில் மூத்தோள் சிலை ஒன்று காட்சி தருகிறது. அடுத்துத் தலமரமான இலுப்பை மரம் உள்ளது. அருகில் விசாலாட்சியம்மை உடனமர் விசுவநாதர் கோயில் உள்ளது. இதையடுத்து சிவகாமியம்மையோடு ஆடல்வல்லான் அருட்காட்சி அளிக்கும் சன்னிதி விளங்குகிறது. அருகிலுள்ள மண்டபத்தில் ஒரு விநாயகர் வீற்றுள்ளார். இச்சுற்றில் வடக்குக் கோபுர வாயிலை அடுத்து நாககன்னிகள் சூழ ஒரு நாகர் சிலை காணப்படுகிறது. இங்கு இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. அருகில் வேதநாயகியம்மை உடனமர் சங்கமேசுவரர் சன்னிதியுள்ளது. வடகிழக்குப் பகுதியில் வயிரவப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். இச்சுற்றில் தென்பால் உள்ள மண்டபத் தூண்களில் முன்னர்க் குறிப்பிட்ட யாளிவீரர்களின் சிற்பங்களும் குதிரை வீரர்களின் சிற்பங்களும் மிக அற்புதமாக வடிக்கப் பெற்றுள்ளன. நுட்பமான கலை வேலைப்பாடுகள் அமைந்த இச்சிற்பங்களை ஒரே நேர்கோட்டில் காணும்போது வியப்பும் மகிழ்ச்சியும் தோன்றுகின்றன. அக்காலச் சிற்பிகளின் கைவண்ணம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. இப்போது வலம்வருதலைச் செங்கோட்டு வேலவர் முன்புறமுள்ள கொடிமரத்தின் முன்னர் நிறைவு செய்கிறோம். மீண்டும் கந்தக்கடவுளின் கழல் பணிந்து மகிழ்கிறோம்.
அருளாளர்கள்
திருச்செங்கோட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பள்ளத்தாசன் எனும் அருளாளர் ஒருவர் வாழ்ந்தார். இவர் இடுப்பில் கோவணம் மட்டுமே அணிந்திருப்பார். பித்தர் போல பிதற்றிக் கொண்டு திரிவார். எச்சில் இலைகளில் உள்ளவற்றை உண்டுகொண்டு சுற்றித் திரிவார். எப்போதும் இளைஞனைப் போலவே தோற்றமளிப்பார். தீராத பிணியுடையவர்களோ, குழந்தைப்பேறு இல்லாதவர்களோ இவரை அணுகி வணங்கினால் தாம் உண்ணும் எச்சில் இலை உணவைக் கொடுத்து உண்ணச்சொல்லி அவர்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார். நோயாளிகளிடம் போச்சுப்போ என்றும் மகப்பேறு வேண்டுவோரிடம் வரும்போ என்றும் கூறிவிட்டு ஓடிவிடுவார். அவ்வாறு நோயாளிகளுக்கு நோய் நீங்கிவிடும்; பிள்ளை இல்லாதவர்களுக்கும் பிள்ளைப்பேறு வாய்க்கும். இவ்வாறு நூறு ஆண்டுகள் இருந்து மறைந்தார். இவரைப்போல எத்தனையோ அருளாளர்கள் இத்தலத்தில் வாழ்ந்துள்ளனர்.
திருச்செங்கோட்டில் வாழ்ந்த குணசீலர் என்ற புலவர் செங்கோட்டு வேலரின் அடியார்களுள் ஒருவர். அக்காலத்தில் பாண்டிய நாட்டிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் பிரதிவாதி பயங்கரன் என்னும் புலவன் ஒருவன் இருந்தான். இப்புலவன் நாடெங்கும் சுற்றி ஆங்காங்கிருந்த புலவர்களை வாதுக்கு அழைத்துத் தோற்கடித்து அவர்தம் பொருள்களையும் நூல்களையும் பறித்துக் கொண்டு செருக்கோடு இருந்து வந்தான். ஒருமுறை இவன் திருச்செங்கோட்டுக்கு வந்தான். அங்கிருந்த குணசீலப் புலவருக்கு வாதுக்கு வருமாறு ஓலையும் அனுப்பினான். புலவர் அஞ்சி வேலவரைச் சரணடைந்தார். பெருமான் புலவர் கனவில் தோன்றி அஞ்சாதே அவனை ஓட்டி விடுகிறேன் என்று அபயம் அளித்து மறைந்தார்.
மறுநாள் பிரதிவாதி பயங்கரன் பல்லக்கில் அமர்ந்து வரும்போது செங்குன்றைப் பார்த்து,
'சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலம் என
அமரில்படம் விரித்து ஆடாதது என்னை?'
எனப் பாடத் தொடங்கி அதை முடிக்க முடியாமல் மயங்கினான். அப்போது மாடுமேய்ப்பவன் கோலத்தில் செங்கோட்டுவேலவர் அங்கு தோன்றினார்.
‘.............. அஃது ஆய்ந்திலையோ?
நமரின் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டுயர்ந்த
குமரன் திருமருகன் மயில்வாகனம் கொத்து மென்றே'
என்று பாடி அப்பாடலை முடித்தார். இதைக்கேட்ட பாண்டிய நாட்டுப் புலவன் திகைத்துப் பல்லக்கிலிருந்து கீழேயிறங்கி, அப்பா! நீ யார்? எனக் கேட்டான். முருகன், 'புலவரே! நான் குணசீலருடைய கடை மாணாக்கன்' என்று பதிலுரைத்தார். இவ்வளவு புலமையுடைய நீ ஏன் மாடு மேய்க்கிறாய்? எனப் புலவன் கேட்க, 'பசுக்களில் எல்லாத் தெய்வங்களும் வீற்றிருக்கின்றன; அவை தரும் ஆனைந்து எல்லாவற்றையும் தூய்மையாக்கும் பெருமையுடையது என்பது உமக்குத் தெரியவில்லை போலும்' என்று வேலவர் கூறினார். இதைக் கேட்ட பிரதிவாதி பயங்கரன் மனம் நடுங்கி, கடை மாணாக்கனான இவனே இவ்வளவு அறிவுடையவனாக இருக்கின்றானே! இவனது குரு எத்தகைய அறிவுடையவனோ? என்று வியந்து அவ்வூரை விட்டு உடனே அகன்றான்.
(பாடலின் பொருள்: இது நாகமலை என்றால் ஏன் படம் விரித்து ஆடாமல் இருக்கின்றது! அதை நீ ஆராயவில்லையோ? குறவள்ளி மணாளனும் திருமகள் மருகனுமான முருகனின் மயில்வாகனம் கொத்திவிடும் என்று ஆடாமல் இருக்கின்றது).
தல இலக்கியங்கள்
திருச்செங்கோட்டுத் தலத்துக்குரிய இலக்கியங்கள் பல. அவையாவன: திருச்செங்கோட்டு மாலை, பணிமலைக் காவலர் அபிடேகமாலை, திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை, திருச்செங்கோட்டுக் குமாரர் இரட்டைமணி மாலை, அர்த்தநாரீசுவர மாலை, சந்திரசேகர மாலை, கருணாகர மாலை, அர்த்தநாரீசுவரர் பதிகம், கருணாகரப் பதிகம், அர்த்தநாரீசுவரர் வருகைப் பதிகம், உமைபாகப் பதிகம், பணிமலைக் காவலர் பதிகம், திருச்செங்கோட்டுக் கலம்பகம், திருச்செங்கோட்டுப் பிள்ளைத்தமிழ், அர்த்தநாரீசுவரர் கும்மி, அர்த்தநாரீசுவரர் முளைக் கொட்டுப்பாட்டு, திருமுகவிலாசம், திருச்செங்கோட்டு ஊசல், திருச்செங் கோட்டுக் குறவஞ்சி, திருச்செங்கோட்டுப்பள்ளு, திருச்செங்கோட்டு மும்மணிக் கோவை, நாரிகணபதி ஒருபா ஒருபஃது. அர்த்தசிவாம்பிகை நவகம், செங்கோட்டு வேலவர் பஞ்சாமிருதம், திருச்செங்கோட்டு மான்மியம், திருச்செங்கோட்டுச் சதகம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடிய பதிகங்களும் திருப்புகழ்ப் பாடல்களும் முதலியன.
திருச்செங்கோட்டில் மலைக்கோயிலில் நாள்வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இத்தலத்தில் வைகாசி விசாகத்தில் திருத்தேர்த் திருவிழா நடைபெறுகிறது. தேர் மலையடிவாரத்தில் உள்ளது. இத்திருவிழா முதல் மூன்று நாட்கள் மலைமீதும் மற்ற நாட்கள் அடிவாரத்திலும் நடைபெறுகின்றது. இங்கு மாதப்பிறப்பு, கிருத்திகை, அமாவாசை, ஒன்பான் இரவு, சிவனிரவு முதலிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மலைக்கோயில் பகல் முழுவதும் திறந்திருக்கிறது. மாலையில் திருக்காப்பிடப் பெறுகிறது.
நான் இத்தலத்தில் திருமால், நான்முகன், விநாயகப்பெருமான், முருகப்பெருமான், துர்க்கை, இந்திரன் முதலிய தேவர்கள், முனிவர்கள், அரசர்கள் என அனைவரும் மாதிருக்கும் பாதியன் மலரடிகளைப் போற்றி வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். கண்கண்ட தெய்வமாக விளங்கும் செங்கோட்டு வேலனையும் மங்கைபங்கனையும் வணங்கி அன்பர்கள் நலம் பல பெற வேண்டுகிறோம்.