
முருக நாதசுவாமி திருக்கோயில்
சுந்தரமூர்த்தி நாயனார் ஒருசமயம் மலைநாட்டுத் திருப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர்தம் அருமை நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரோடு பலநாட்கள் உடனிருந்து மகிழ்ந்தார். ஒருநாள் சுந்தரர் பெருமானுக்கு திருவாரூரில் எழுந்தருளியுள்ள சிவபிரான் மீது அளவுகடந்த நினைவு தோன்றியது. அங்கிருந்தபடியே, ஆரூர்ப் பெருமான் மேல், 'ஆரூரானை மறக்கலும் ஆமே' என முடியும் பாடல்கள் கொண்ட ஒரு பதிகம் பாடிப் பரவினார். பின்னர்த் தம் நண்பரிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு திருவாரூர்ப் பயணத்தைத் தொடங்கினார். அப்போது சேரர் பெருமான் ஏராளமான நிதிக்குவியல்களைப் பணியாட்களின் தலையில் ஏற்றி, சுந்தரருடன் அனுப்பி மகிழ்ந்தார். பொன்னும் பொருளும் பெற்ற சுந்தரர் பணியாட்கள் முன்னே செல்லத் தாம் பின்னே சென்றார். இத்திருக்கூட்டம் கொங்கு நாட்டை அடைந்தது. கொங்குநாட்டைக் கடந்து சோழநாட்டுக்குச் செல்லும் வழியில் திருமுருகன்பூண்டி அமைந்திருந்தது. பரவைமணாளர் திருமுருகன்பூண்டிக்கு அருகில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது, சிவபெருமான் ஒரு திருவிளையாடல் நடத்தத் திருவுளங்கொண்டார். பெற்றோர் தம் செல்லக் குழந்தைக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் வேறு யாராவது ஒருவரிடம் அக்குழந்தை ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொண்டால் கடிந்து கொள்வார்கள். பிறகு அவ்வாறு பெறுவது தவறு என்று எடுத்துரைத்துத் திருத்துவார்கள். இது உலக வழக்கம். சிவபெருமானும் தம் குழந்தையாகிய நம்பியாரூரரிடம் இவ்வாறுதான் நடந்துகொண்டார். சுந்தரருக்கு வேண்டியதை எல்லாம் வாரிவழங்கி மகிழ்ந்த இறைவன் அவர் இன்னொருவரிடம் பொருள் பெற்றதை விரும்பவில்லை போலும். அதைச் சுந்தரருக்கு உணர்த்த ஒரு திருவிளையாடலை நடத்தினார். இதைச் சேக்கிழார் பெரியபுராணத்தில்,
'திருமுருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின்கண்
பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பது அல்லால்
ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்
பெருகருளால் தாம்கொடுக்கப் பெறுவதற்கோ அது அறியோம்'
என்று காட்டுகின்றார்.
இறைவன் தம் பூதகணங்களைக் காட்டில் வாழும் வேடுவர்களாக மாறச்செய்து, அவர்களைக் கொண்டு நம்பியாரூரரிடம் வேடுபறி நடத்தி, சேரமான் அளித்த செல்வத்தை எல்லாம் கவர்ந்து வரச் செய்கிறார். செல்வத்தைப் பறிகொடுத்த பணியாட்கள் அஞ்சியோடி ஆரூரரிடம் வந்தனர். வேடுவர் கூட்டமோ சுந்தரரிடம் அணுகாமல் திருமுருகன் பூண்டி சென்று மறைந்தது. அக்கூட்டம் சென்ற திருமுருகன் பூண்டியை அடைந்த சுந்தரர் பெருமான் அங்கிருக்கும் திருக்கோயிலை வலம்வந்து இறைவனுக்கு முன்புவந்து வாடிய முகத்துடன் பணிந்து நின்றார்.
பெருகிய அன்பு ததும்ப நம்பியாரூரர் இறைவனை மேல் பதிகம் பாடத் தொடங்கினார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், 'வேடுவர்கள் நிறைந்துள்ள இக்காட்டுப் பகுதியில் எதற்காகக் குடிகொண்டு இருக்கின்றீர்?' எனும் பொருள்பட, 'எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரான் நீரே?' என்று உரிமையுடன் சாடினார்.
'வில்லைக்காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளுமிடம்
முல்லைத்தாது மணங்கமழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கிருந்தீர் - எம்பிரானிரே'
முதலிய பாடல்களில் சுந்தரரின் ஆற்றாமையும் சினமும் கொப்பளிக்கக் காணலாம். அதேசமயம் இப்பதிகத்தில் இறைவனைக் கேலி செய்யவும் நம்பியாரூரர் தயங்கவில்லை .
'முடவர் அல்லீர் இடரிலீர் முருகன்பூண்டி மாநகர்வாய்
இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கிருந்தீர் - எம்பிரானிரே' என்றெல்லாம் இறைவனிடத்து வினாத்தொடுத்து நின்றார்.
என்ன இருந்தாலும் சுந்தரர், சேரமான் பெருமானிடத்தில் தானே பொருள் பெற்றார்! சேரமான் சிறந்த சிவனடியார் அல்லவா? மேலும், இறைவனே மதுரையில் பாணபத்திரர் தம்மிடம் பொருள் வேண்டிய போது, சேரமான் பெருமாளிடம் சென்று பொருள் பெற்றுக்கொள்க என்று கூறி, சேரமானுக்குச் சீட்டுக்கவி (திருமுகப்பாசுரம்) கொடுத்து அனுப்பியவர்தாமே! ஆகவே சிவபெருமானது செல்லமான கோபம் தொடர்ந்து நீடிக்க நியாயமில்லாமல் போனது. தமிழ்ப்பாட்டுகளின் இனிமையும் சேர அச்செல்லக் கோபம் சீக்கிரம் பறந்தோடியது போலும். எனவே, இறைவன் தானே சுந்தரருக்குப் பொருள் கொடுக்கும் தோரணையில் பறித்த பொருள் அத்தனையும் கோயிலுக்கு முன்பு குவியும்படி திருவருள் புரிந்தார். அதனால் பெருமகிழ்ச்சி கொண்ட சுந்தரர், முருகன்பூண்டி முழுமுதலை மீண்டும் போற்றிப் பரவி, தம் ஆரூர்ப்பயணத்தைத் தொடர்ந்தார்.
திருமுருகன்பூண்டிக்கு அருகில் ஒருபாறை மீது கூப்பிடு பிள்ளையார் எனும் பெயர் கொண்ட பிள்ளையார் கோயில் ஒன்று விளங்குகிறது. இங்குதான் வேடுபறி நடைபெற்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவத்தலமான திருமுருகன்பூண்டி கொங்குநாட்டு உட்பிரிவுகளுள் ஒன்றான ஆறைநாட்டுக்கு (வடபரிசாரநாடு) உட்பட்டதாகும். இது அவிநாசியிலிருந்து திருப்பூர் செல்லும் பெருவழியில் ஐந்தாவது கிலோமீட்டரில் உள்ளது. ஏராளமான பேருந்துகள் திருமுருகன்பூண்டி வழியாகச் செல்கின்றன. எனவே இங்கு சென்றுவருவது எளிதாகும். சாலையிலிருந்து சற்றுத் தள்ளி, திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
புராண வரலாறுகள்
திருமுருகன்பூண்டி மூன்பு மாதவிக்கொடிகள் நிறைந்த காடாக விளங்கியது. எனவே இதை மாதவி வனம் என்றும் கூறுவர். மாதவி என்பது நறுமணம் மிக்க மலர்களைக் கொண்ட ஒரு பெருங்கொடி இனமாகும். இது காடுகளிலும் மலைகளிலும் வளரக்கூடியது. இதை துருவாசமுனிவர் இந்திரலோகத்திலிருந்து கொண்டுவந்து இத்தலத்தில் நட்டு வளர்த்தார் என்றும் அது பின்னர் எங்கும் படர்ந்து ஒரு பெருஞ்சோலை போல மாறியது என்றும் திருமுருகன்பூண்டித் தலபுராணம் கூறுகின்றது. இம்மலர் சிவவழிபாட்டுக்கு உரிய மலர்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. மூன்பே இங்கு சிவபெருமான் தான்தோன்றி (சுயம்பு) இலிங்கமாக எழுந்தருளியிருந்தார். மாதவிக் கொடிகளின் நிழலில் இப்பெருமான் விளங்கியதால் இவருக்கு மாதவிவனேசுவரர் எனும் பெயர் ஏற்பட்டது. இந்த இலிங்கத்தைத் துருவாசமுனிவர் பலகாலம் வழிபட்டு வந்தார். அப்போது சிவபிரான் அவர்முன் தோன்றி அரிய வரங்களை அருளினார். பின்னர்த் துருவாசர் தேவதச்சனை அழைத்து அங்கு இறைவனுக்குத் திருக்கோயில் அமைத்து நாள் வழிபாடுகளும் பெருந்திருவிழா முதலிய சிறப்பு வழிபாடுகளும் நடைபெறச் செய்தார்.
துருவாசரின் பத்திக்கு இரங்கிய சிவபரம்பொருள் மீண்டும் அவர்முன் தோன்றினார். வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்க! என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்போது முனிவர் திருமுருகன் பூண்டியில் விளங்கும் திருச்சபையில் திருக்கூத்து நிகழ்த்தியருள வேண்டுமென்று வேண்டினார். அதற்கு இறைவன், 'மூனிவனே! கந்தமாதனம் எனும் மலையில் அறுபதினாயிரம் முனிவர்கள் நமது பிரமதாண்டவத்தைக் காணத் தவம் செய்து வருகிறார்கள். அவர்கள் இத்தலத்துக்கு வருங்காலத்தில் அவர்களுக்கும் உனக்கும் நமது நடனத்தைக் காட்டி அருள்வோம்' என்று அருள்புரிந்து மறைந்தார்.
சிலகாலம் சென்றது. அறுபதினாயிரம் முனிவர்களும் மாத விவனத்தின் பெருமையை அறிந்து அங்கு வந்து சேர்ந்தனர். துருவாச முனிவரைப் பார்த்து மகிழ்ந்த அம்முனிவர்கள் அவரைப் பலவாறு போற்றிக் கொண்டாடினர். துருவாசரும் அவர்களை வரவேற்றுச் சிறப்பாக உபசரித்தார். இறைவனது நடனத்தைக் காண வியாசர், பரத்துவாசர் முதலிய முனிவர்களும் திருமுருகன்பூண்டியை அடைந்தனர். எல்லோரையும் துருவாசர் வரவேற்று உபசரித்தார். முனிவர்கள் அனைவரும் தவத்தில் திளைத்திருந்தனர். அப்போது திருமுருகன் பூண்டியில் மாணிக்க சபையில் விளங்கும் ஆடல்வல்லானுக்குச் சிறப்பான வழிபாடுகளையும் செய்து மகிழ்ந்தனர். இறைவனது ஆடலைக் காணத் திருமால், நான்முகன், இந்திரன் முதலிய தேவர்களும் அங்கு வந்து கூடினர். அனைவரும் கண்டு களிக்கும்படி சபையில் இறைவன் தமது அற்புதத் திருக்கூத்தை ஓராண்டுகாலம் நிகழ்த்தியருளினார். முனிவர்களும் தேவர்களும் அந்நடனத்தைக் கண்டுகளித்து இறையருளில் மூழ்கித் திளைத்தனர். பின்னர் இறைவன் அவர்களுக்கெல்லாம் வரங்களை அருளித் தம்திருவுருக் கரந்தார்.
சூரபன்மன் முதலிய அரக்கர்களைக் கொன்றதால் முருகப் பெருமானுக்கு பிரம்மகத்தி தோசம் எனும் பழி ஏற்பட்டது. அந்தப் பழியைப் போக்கிக்கொள்ள முருகப்பெருமான் மாதவிக் காட்டிற்கு வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைப் பூசித்தார். இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்யத் தம்வேலால் நிலத்தைக் குத்தி ஒரு தீர்த்தத்தைத் தோற்றுவித்தார். அதில் பெருகிய நீரினால் சிவபெருமானுக்குத் திரு முழுக்காட்டி வழிபட்டார். அருகில் தம்பெயரால் ஒரு சிவலிங்கத்தையும் பிரதிட்டை செய்து பூசித்தார். அதனால் பழி நீங்கியது. முருகன் வழிபட்டதால் மாதவிக்காட்டிற்குத் திருமுருகன்பூண்டி (பூண்டி - ஊர்) எனும் பெயர் ஏற்பட்டது. அதுவே இன்றுவரை நிலைத்துள்ளது. மாத விவனேசுவரருக்கும் முருகநாதர் எனும் பெயர் ஏற்பட்டது. முருகன் தாபித்த இலிங்கமான முருகநாதரும் முருகன் சன்னிதியில் தனியாக விளங்குகிறார்.
முருகநாதரை மாலாதரன் என்னும் மன்னனும் மகாரதன் என்னும் மன்னனும் வழிபட்டுப் பேறுபெற்றனர். இங்கு முருகப் பெருமான் தோற்றுவித்த சண்முகதீர்த்தம் கிணறு வடிவில் கோயிலினுள் தென் சுற்றில் விளங்குகிறது. இதற்குத் திருமுருகதீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் முதலிய பெயர்களும் உண்டு. இங்கு நான்முகன் தோற்றுவித்த பிரமதீர்த்தம் திருக்கோயிலுக்கு வெளியே வடபால் உள்ளது. இதே போல கோயிலுக்கு வெளியே தென்பால் ஞானதீர்த்தம் உள்ளது. திருக்கோயிலுக்கு எதிரில் மகாமகப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள குளம் உருத்திர தீர்த்தம், மாமகத்தீர்த்தம் என்றெல்லாம் போற்றப்பெறுகிறது. அவிநாசி வழியாக வரும் நள்ளாறு திருமுருகன் பூண்டியில் சுந்தரமாந்தி, துருவாச நதி முதலிய பெயர்களைப் பெறுகிறது. திருக்கோயிலுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு ஓடைக்கு அக்கினியாறு (அக்கினி தீர்த்தம்) என்று பெயர். இவ்விரு தீர்த்தங்களும் கூடும் இடம் முன்பு புகழோடு விளங்கியது.
தலபுராணச் செய்திகளை ஓரளவு அறிந்துகொண்ட நாம் இனி திருக்கோயில் வழிபாட்டைத் தொடங்கலாம். முருகநாதப் பெருமான் கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பழமை மாறாமல் பாதுகாக்கப் பெறுகிறது. கோயிலின் நாற்புறமும் திருமதில் விளங்குகிறது. இராசகோபுரம் இல்லை. கோயிலின் முன்புறம் விளக்குத்தூண் உள்ளது. இதைக் கடந்து சென்றால் நீண்ட மண்டபத்தின் வழியாகத் திருக்கோயிலுக்குள் செல்லலாம். இம்மண்டபத்தின் தென்பால் வேம்படி முருகன் கோயில் உள்ளது.
திருக்கோயில் அமைப்பு
கோயிலுக்குள் முதலில் நாம் காண்பது பதினாறுகால் வெளி மண்டபமாகும். இங்கு கொடிமரமும் நந்தியின் திருமேனியும் விளங்குகின்றன. இம்மண்டபத்தை அடுத்து முன்மண்டபம் உள்ளது. இதன் நுழைவாயிலின் இடப்பால் விநாயகர் வீற்றிருக்கிறார். வலப்பால் அற்புதமான மூன்று சிலைகள் காட்சியளிக்கின்றன. இவற்றில் ஒன்று சிவபெருமானின் வேட வடிவமாகும். கிராதமூர்த்தி என்று இவ்வடிவம் சிற்பநூல்களில் குறிப்பிடப்பெறும். வேடவடிவில் சுந்தரரிடம் பொருளைப் பறிக்கச் சென்ற தம்கணங்களோடு சிவபெருமானும் வேடவடிவில் சென்றார் என்று இத்தலபுராணம் கூறும். அதற்கேற்ப இத்திருமேனி இங்கு எழுந்தருளச் செய்யப் பெற்றுள்ளது போலும். மற்ற இரண்டு சிலைகளும் சுந்தரமூர்த்தி நாயனார் சிலைகளாகும். இவற்றில் ஒன்று வேடர்களிடம் பொருளைப் பறிகொடுத்த தோற்றத்தில் வாடிய முகத்துடன் காட்சி தருகின்றது. மற்றொரு சிலை பொருளைப் பெற்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் மலர்ந்த முகத்தோடு விளங்குகிறது. சிலைகளைச் செய்த சிற்பியின் கைவண்ணம் இவற்றில் நன்கு வெளிப்பட்டுள்ளது.
முன்மண்டபத்தின் வடபுறம் தெற்கு நோக்கிய சன்னிதியில் ஆறுமுகப்பெருமான் பன்னிரு திருக்கைகளோடு அற்புதக் காட்சி தருகிறார். இருபுறமும் வள்ளியும் தெய்வயானையும் விளங்குகின்றனர். கருவறையின் மூலையில் முருகன் தாபித்த முருகநாதர் சிறிய இலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இம்முருகனை அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிப் போற்றியுள்ளார். அழகும் அருளும் நிறைந்த இவ்வறுமுகப் பெருமான் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார்.
முன்மண்டபத்தை அடுத்து மகாமண்டபம் உள்ளது. இதன் வாயிலில் இருபுறமும் கம்பீரமான வாயிற்காவலர்கள் நிற்கின்றனர். மகாமண்டபத்திலும் ஒரு நந்திதேவர் காட்சி தருகிறார். இவர் மிகவும் பழைய திருமேனியில் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இங்கு மூத்த பிள்ளையாரும் வீற்றிருக்கிறார். அர்த்த மண்டபத்தையடுத்துக் கருவறை விளங்குகிறது. இங்கு திருமுருகநாதப் பெருமான் தான் தோன்றி லிங்கமாக அருட்காட்சி வழங்குகிறார். இத்திருமேனி அளவானதாக விளங்குகிறது. பெருமான் அருட்பொலிவு நிறைந்தவராகத் திகழ்கிறார். உளங்குளிரத் தொழுது மகிழ்கிறோம். இப்பெருமானுக்குக் கார்த்திகேய மகேசன், கந்தநாதன் முதலிய பெயர்களும் தல புராணத்தில் கூறப்பெற்றுள்ளன. இறைவனை வணங்கி வெளியே வந்து வலம்வரத் தொடங்குகிறோம்.
திருக்கோயிலின் வடமேற்கில் ஆடல்வல்லான் கோயில் விளங்குகிறது. இங்கு பிரமதாண்டவமூர்த்தி சிவகாமியம்மையோடு எழுந்தருளியுள்ளார். இங்குள்ள திருமேனிகள் கொங்குநாட்டுப் பாணியில் விளங்குகின்றன.
தாண்டவத் தலங்கள்
ஒப்பற்ற சிவத்தலங்களுள் ஒன்பது தலங்கள் மிகவும் சிறந்தவையாகும். அவை தில்லை, திருவாரூர், திருவெண்காடு, மதுரை, திருவிடைமருதூர், கும்பகோணம், திருப்புக்கொளியூர் அவிநாசி, பேரூர், திருமுருகன்பூண்டி என்பன. இவற்றில் இறைவன் தன் அடியார்களுக்காக அற்புதத் திருக்கூத்துகளை நிகழ்த்தி அருளினான். தில்லையில் ஆனந்த தாண்டவத்தையும், திருவாரூரில் அசபா நடனத்தையும், மதுரையில் ஞான சுந்தரதாண்டவத்தையும், அவிநாசியில் ஊர்த்துவதாண்டவத்தையும், பேரூரில் ஆனந்த தாண்டவத்தையும், திருமுருகன்பூண்டியில் பிரம தாண்டவத்தையும் ஆடியருளியதாக இத்தலபுராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்புடைய ஆடல்வல்லானைப் பணிந்து மகிழ்கிறோம். இங்குள்ள சிவகாமியம்மை ஞானவல்லி என்றும் தலபுராணத்தில் போற்றப் பெறுகிறார்.
வடக்குச் சுற்றில் வலம் வந்தால் இறைவன் கருவறை வடக்குத் தேவகோட்டத்தில் விளங்கும் கொற்றவையைக் காணலாம். அருகில் சண்டீசர் கோயில் உள்ளது. கிழக்குத் தேவகோட்டத்தில் அண்ணாமலையார் உள்ளார். தெற்கே தனிக் கோயிலில் ஆலமர்கடவுள் காட்சி தருகிறார். வடக்குச் சுற்றில் சனி, நவகோள்கள் சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கில் வயிரவர் கோயில் விளங்குகிறது. இங்குள்ள வயிரவப் பெருமான் மிகவும் பழமையான மூர்த்தியாவார். இவர் எட்டுத்திருக்கைகளோடு திருக்காட்சி அளிக்கிறார். கிழக்குச்சுற்றில் ஐந்து இலிங்கங்கள் விளங்குகின்றன. அருகில் கதிரவன் கோயில் உள்ளது. இறைவன் கோயிலுக்கும் இறைவி கோயிலுக்கும் இடையில் கிழக்கு நோக்கிய சிறுகோயிலில் பவானீசுவரர் எழுந்தருளியுள்ளார். அடுத்து இறைவியின் கோயில் அமைந்துள்ளது. இதன் வடபால் சண்டிகேசுவரி சன்னிதி உள்ளது.
இறைவி கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் என விரிவாக அமைந்துள்ளது. முன்மண்டபத்தில் நந்தி தேவர் வீற்றிருக்கிறார். மகாமண்டபத்திலும் ஒரு நந்தி காட்சியளிக்கிறார். இங்கு மூத்தபிள்ளையாரும் விளங்குகிறார். கருவறையில் இறைவி நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கைகளுடன் அருட்காட்சி வழங்குகிறார். நெடிய திருமேனி கொண்ட இறைவி அழகே வடிவாக விளங்குகிறாள். அருள்மழை பொழியும் இவ்வம்மைக்கு முயங்கு பூண்முலை மங்கை எனும் திருப்பெயர் அமைந்துள்ளது. இடுகு நுண்ணிடை மங்கை எனும் பெயரும் இறைவிக்கு உண்டு. இவ்விரு பெயர்களும் சுந்தரர் தேவாரப் பதிகத்தில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னையை வணங்கி அருள்பெற்று வெளியில் வந்து வலம் வருதலைத் தொடர்கிறோம். இறைவி கோயிலுக்குத் தென்பால் முன்பு குறிப்பிட்ட சண்முகதீர்த்தம் காளைவடிவில் கட்டப் பெற்ற தீர்த்தக்கிணறாக விளங்குகிறது.
திருக்கோயிலின் தென்மேற்கில் நிருதி விநாயகர் காட்சி தருகிறார். அருகில் மற்றொரு பிள்ளையாரும் உள்ளார். அடுத்து அறுபத்து மூன்று நாயன்மார்கள் கிழக்கு நோக்கித் திருக்காட்சி வழங்குகின்றனர். அருகில் சிவலிங்கம் உள்ளது. அதையடுத்துத் தண்டபாணிக் கடவுள் எழுந்தருளியுள்ளார். இவரை வணங்கிக் கொண்டு வடக்கே வந்தால் இறைவனது கொடிமரத்தை அடையலாம். பெருமானை மீண்டும் ஆர்வத்தோடு பணிந்து நிற்கின்றோம். இங்குள்ள இறைவன், இறைவி திருக்கோயில்களின் வெளிச்சுவர்களில் ஏராளமான கல்வெட்டுகள் காட்சியளிக்கின்றன. இவற்றில் பல அரிய செய்திகள் காணப்பெறுகின்றன.
கல்வெட்டுகளில் இறைவன் பெயர், ஆளுடையார் திருமுருகன் பூண்டி ஆண்டார், திருமுருகன்பூண்டி ஆளுடைய நாயனார், திருமுருகன் பூண்டி மகாதேவர், முருகாவுடைய தம்பிரானார், திருமுருகன்பூண்டி நாயனார் என்றெல்லாம் குறிப்பிடப் பெறுகிறது.
மாதவிவனேசர் கோயில்
முருகநாதர் திருக்கோயிலுக்கு தென்புறமுள்ள சாலைக்கு அப்பால் மங்களநாயகி உடனமர் மாதவிவனேசுவரர் கோயில் விளங்குகிறது. இது தற்பொழுது கேது பரிகாரத் தலமாகக் கருதப் பெறுகிறது. இங்குள்ள இலிங்கம் துருவாசமுனிவரால் பிரதிட்டை செய்யப் பெற்றதாகும். இதன்பெயர் துருவாசவீசர் (துருவாசேசுவரர்) என்று இத்தல புராணம் கூறுகின்றது. அதேபோல துருவாசர் பிரதிட்டை செய்த அம்மையின் பெயர் அமுதவல்லி என்றும் இப்புராணம் கூறுகிறது. (மாதவிவனச்சருக்கம், பா.எண்கள் 20-23) இப்பெயர்கள் பிற்காலத்தில் மாதவிவனேசர், மங்களநாயகி என்று மாறியுள்ளன.
இத்திருக்கோயில் நாற்புறமும் மதில் சூழ விளங்குகிறது. இராசகோபுரம் இல்லை. கிழக்குநோக்கிய இக்கோயிலின் முன்னால் விளக்குத்தூண் உள்ளது. வாயிலின் உட்புறம் இருபுறமும் கதிரவனும் சந்திரனும் காட்சி தருகின்றனர். இறைவன் கோயில் மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் பெரிய நந்திதேவர் வீற்றிருக்கிறார். இங்கு நால்வர் திருமேனிகளும் காட்சிதருகின்றன. அர்த்தமண்டப வாயிலின் இருபுறமும் மூத்த பிள்ளையாரும் முருகப்பெருமானும் விளங்குகின்றனர். கருவறையில் சிவலிங்க வடிவில் மாதவிவனேசுவரர் திருக்காட்சியளிக்கிறார். அழகிய திருமேனி கொண்ட இப்பெருமானை வணங்கி மகிழ்கிறோம்.
இப்பெருமானின் கருவறைத் தேவகோட்டங்களில் ஆலமர் செல்வர், அண்ணாமலையார், கொற்றவை ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். சண்டீசர் கோயிலும் உள்ளது. தென்மேற்கில் மூத்தபிள்ளையாரும் மேற்கில் கேதுவும் கோயில் கொண்டுள்ளனர். இறைவி கோயிலும் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் என அமைந்துள்ளது. இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் இடையில் முருகப்பெருமான் விளங்குகிறார். இங்குள்ள இறைவி இரு திருக்கைகளுடன் எழுந்தருளியுள்ளார். பலக்கையில் கருங்குவளை மலர் விளங்குகிறது. இடக்கை கீழே தொங்கவிடப் பெற்றுள்ளது. அழகிய திருமேனி கொண்டு அருட்காட்சி தரும் அன்னையை அகம் குளிர வணங்குகிறோம். கோயிலின் வடகிழக்கில் நவகோள்கள் காட்சி தருகின்றனர். கிழக்குச் சுற்றில் தெற்கு நோக்கியவாறு வயிரவப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். வலம் வருதலை நிறைவு செய்து மீண்டும் மாதவி வனத்து மாமணியை வணங்கி மகிழ்கிறோம்.
தல இலக்கியங்கள்
திருமுருகன் பூண்டியை அப்பரும் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். இத்தலபுராணம் ஓராட்டுக்குப்பை-செட்டிபாளையம் வாசுதேவ முதலியாரால் பாடப்பெற்றுள்ளது. இதில் அறுநூற்றுப் பதினெட்டுப் பாடல்கள் உள்ளன. முருகநாதருக்கு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். கருணைதாசர் முருக நாதர் மீது முருகபுரிமலை எனும் நூறு பாடல்கள் கொண்ட நூலைப் பாடியுள்ளார். 'சுந்தரர் - வேடுபறி' எனும் நூலும் இத்தலத்துக்குரியதாக விளங்குகிறது. இவ்வாறு இலக்கிய வளமும் நிறைந்த திருத்தலமாகத் திருமுருகன்பூண்டி திகழ்கிறது.
மனநோய் நீக்கும் தலம்
திருமுருகன்பூண்டி மனநோய் தீர்க்கும் மருத்துவ நிலையமாகவும் விளங்குகிறது. மனநிலை பாதித்தவர்கள் இத்திருக்கோயிலில் நாற்பத் தெட்டு அல்லது இருபத்து நான்கு நாட்கள் தங்கி இங்குள்ள திருமுருக தீர்த்தம், பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களிலும் நீராடி முருகநாதப் பெருமானை வழிபட்டால் எளிதில் குணமடைவர். இங்கு மனநோயாளிகள் தங்குவதற்குரிய வசதிகளும் செய்யப் பெற்றுள்ளன.
மனநிலை திரிந்தவர்களை அவர்களது குடும்பத்தார் அழைத்து வந்து இங்கு தங்கவைக்கின்றனர். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் இத்தீர்த்தங்களின் நீரால் நோயாளிகளுக்கு நீராட்டுகின்றனர். அவர்களைத் திருக்கோயிலைச் சுற்றி அழைத்து வந்து பெருமானை வணங்க வைக்கின்றனர். இதனால் அவர்களது மனநிலை தெளிவாகின்றது. இங்கு வந்து வழிபட்டு மனநோய் நீங்கியவர்களின் எண்ணிக்கை அளவற்றது. மேற்குறிப்பிட்ட மூன்று தீர்த்தங்களில் நீராடினால் மனநோய் மட்டுமன்றி தீராத கொடிய நோய்களும் தீரும் என்று இத்தலபுராணம் கூறுகின்றது.
முருகத் தம்பிரான் வரலாறு
இத்தலத்தில் முன்பு முருகத்தம்பிரான் சுவாமிகள் என்னும் அருளாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் இளமையிலேயே உலகப்பற்றை விட்டு, முருகநாதரை பற்றிய சிறப்புக்குரியவர். இவர் இத்திருக்கோயில் முன்மண்டபத் திருப்பணியைச் செய்ய ஆர்வம் கொண்டார். பலரிடமும் நிதிதிரட்டினார். இறையருளால் பொருள் வந்துகொண்டிருந்தது. ஒருநாள் அருகிலிருக்கும் அவிநாசிபாளையம் சென்று அங்குள்ள செல்வந்தர் ஒருவரிடம் திருப்பணிக்கு உதவுமாறு கேட்டார். அவர் என்ன காரணத்தாலோ தம்பிரான் சுவாமிகளை அடித்துத் துரத்திவிட்டார். எல்லாம் இறைவன் செயலே என்று அதைப் பொறுத்துக்கொண்ட சுவாமிகள் திருமுருகன்பூண்டிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அச்செல்வந்தரின் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டுத் துடிதுடிக்கத் தொடங்கியது.
தம்பிரானுக்கு இழைத்த தீங்கால்தான் குழந்தைக்கு இவ்வாறு நேரிட்டது என்பதை உணர்ந்து கொண்ட அச்செல்வந்தர் பணியாட்களை ஏவி சுவாமிகளை அழைத்து வரச்செய்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுப் பணிந்தார். சினத்தைத் தம்மிடம் அணுகவிடாத மகானான சுவாமிகளும் அவரை மன்னித்து ஆறுதல் கூறி, முருகநாதரை வணங்கி அக்குழந்தைக்குத் திருநீறு பூசினார். குழந்தை நலமடைந்தது. தம்பிரான் சுவாமிகள் தொடங்கிய திருப்பணி முழுமையாக நிறைவேற அச்செல்வர் வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து புண்ணியம் தேடிக் கொண்டார். இவ்வாறு முருகநாதப் பெருமானுக்குத் திருப்பணிகள் பலசெய்த முருகத்தம்பிரான் சுவாமிகள் இறுதியில் இறைவனடி சேர்ந்தார். இவரது திருக்கோயில் முருகநாதர் கோயிலுக்கு அருகில் விளங்குகிறது.
முருகநாதருக்கும் முயங்குபூண்முலை மங்கையம்மைக்கும் நாள் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. இங்கு சிறப்புநாள் வழிபாடுகளும் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. மாசிமகத்தன்று தர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. அன்பர்கள் திருமுருகன்பூண்டி சென்று வழிபட்டு வாழ்வில் திருவும் மெய்ப் பொருளும் பெற்று உயர வேண்டுகிறோம்.