
அவிநாசிய ப்பர் திருக்கோயில்
சுந்தரமூர்த்தி நாயனார் கொங்கு நாட்டில் தலவழிபாடு புரிந்து கொண்டிருந்தபோது அவிநாசிக்கு எழுந்தருளினார். அப்பொழுது அங்கே ஒரு வீட்டில் மகிழ்ச்சிக்குக் காரணமான மங்கலவொலி எழுந்தது. அருகிலிருந்த மற்றொரு வீட்டில் அழுகையொலி கேட்டது. சுந்தரர் பெருமான் அருகிலிருந்தவர்களைப் பார்த்து அவற்றுக்கான காரணத்தை வினவினார்.
அவர்கள், பெரியீர்! சில ஆண்டுகளுக்கு முன்னர் இரு சிறுவர்கள் அருகிலிருக்கும் குளத்திற்குக் குளிக்கச் சென்றனர். அவர்களில் ஒருவனைக் குளத்தில் இருந்த முதலை விழுங்கிவிட்டது. ஒருவன் மட்டும் தப்பிவந்தான். அப்படி வந்தவனுக்கு இப்பொழுது பூணூல் அணிவிக்கும் சடங்கு நடைபெறுகிறது. அதனால் அவ்வீட்டில் மங்கலவொலி எழுகின்றது. பிள்ளையை இழந்த குடும்பத்தார்க்கு மங்கலவொலி இறந்தவன் நினைவை ஏற்படுத்தியிருக்கிறது. அவன் உயிரோடு இருந்திருந்தால் நம் வீட்டிலும் பூணூல் அணிவிக்கும் சடங்கைச் செய்திருப்போமே! என்று நினைத்து அவர்கள் வருந்தி அழுகின்றனர். அதனால் பக்கத்து வீட்டில் அழுகையொலி கேட்கின்றது என்று பதிலுரைத்தனர்.
இதைக் கேட்ட சுந்தரர்க்குப் பெரிதும் இரக்கம் தோன்றியது. இந்நிலையில் பிள்ளையை இழந்த பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து விரைந்து வந்து பணிந்து நின்றனர். சுந்தரர் அவர்களைப் பார்த்து, 'பிள்ளையை இழந்தவர்கள் நீங்களா?' என்று வினவினார். அதற்கு அவர்கள், அடிகளைக் கண்டு, தொழவேண்டும் என நீண்ட காலமாக நினைந்திருந்தோம். இறையருளால் அவ்வெண்ணம் இன்று நிறை வேறியது என்று கூறி மகிழ்ந்து நின்றனர். அம்மகிழ்ச்சியைக் கண்ட சுந்தரர், நம் வருகை இவர்களது துன்பத்தைக்கூட நீக்கியிருக்கிறது. இவர்கள் அன்பு மிகவும் உயர்ந்தது. அவிநாசியப்பர் அருளால் இவர்களது பிள்ளையை முதலை வாயிலிருந்து மீட்டுக் கொடுத்துவிட்டே திருக்கோயிலுக்குச் செல்வேன் என்று உளங்கொண்டார். அருகில் நின்றவர்களை நோக்கி, 'அக்குளம் எங்குள்ளது?' என வினவினார். அவர்கள் நம்பியாரூரரைக் குளக்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவிநாசியப்பரின் பெருங்கருணையைப் போற்றிப் பரவிப் பதிகம் பாடத் தொடங்கினார்.
'உரைப்பார் உரையுகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்!
அரைக்காடரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே!'
என்று பிள்ளையைத் தரச்சொல்லி விண்ணப்பித்தார். இறையருளால் வறண்டு கிடந்த அக்குளத்தில் மழை பெய்து நீர் நிரம்பியது. குளத்திலிருந்து கரைக்கு வந்த முதலை, இறந்து போன பிள்ளையை, அவன் அன்று வரை இருந்திருந்தால் எத்தகைய வளர்ச்சியை அடைந்திருப்பானோ அவ்வளர்ச்சியுடையவனாக உமிழ்ந்துவிட்டு நீருள் மறைந்தது. அதைக்கண்டு அனைவரும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். பெற்றோர் பிள்ளையோடு ஆரூரர் திருவடிகளில் விழுந்து வணங்கி மகிழ்ந்தனர். சுந்தரர் அவர்களை அழைத்துக் கொண்டு திருக்கோயிலில் சென்று இறைவனைப் பணிந்து மகிழ்ந்தார். பின்னர் அச்சிறுவனுக்கு அவரே பூணூல் அணிவிக்கும் சடங்கைச் செய்து, அவ்வீட்டிலும் மங்கலவொலி முழங்கச் செய்தார். இத்தகைய அற்புதம் நடைபெற்ற தலமான அவிநாசி கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
அவிநாசி என்ற சொல்லுக்குப் பெருங்கேடு இல்லாதது என்பது பொருளாகும். இத்தலத்து இறைவன் பெயரான அவிநாசி (பெருங்கேடிலி) என்பது பிற்காலத்தில் இவ்வூருக்கும் பெயராயிற்று. அவிநாசியின் பழம் பெயர் திருப்புக்கொளியூர் என்பதாகும்.
புராண வரலாறுகள்
முற்காலத்தில் சிவபெருமான் ஐந்தொழிலில் ஒன்றான அழித்தல் காரணமாக ஊழிப்பெருவெள்ளத்தில் நின்று உமையம்மை கண்டு களிக்க ஊழிக்கூத்து ஆடினார். அதன் பின்பு உமையம்மை பிரணவத்தில் அடங்கிநிற்கத் தனியாக அக்கினி தாண்டவமாகிய சுத்த சங்கார தாண்டவம் ஆடினார். அப்பொழுது திருமால், நான்முகன், இந்திரன் முதலிய முப்பத்து முக்கோடி தேவர்கள் யாவரும் அதைக் கண்டு அஞ்சி நடுங்கிப் பாதுகாவல் தேடி ஓடிவந்து இத்தலத்தில் புகுந்து ஒளிந்தனர். தேவர்கள் புக்கு (புகுந்து) ஒளிந்ததால் இவ்வூர் திருப்புக் கொளியூர் எனும் பெயர் பெற்றது எனத் தலபுராணம் கூறுகிறது. இத்தலம் தட்சிணகாசி (தென்காசி) தென்வாரணாசி என்றெல்லாம் போற்றப் பெறும் சிறப்புடையது. ‘காசியில் வாசி அவிநாசி' எனும் பழமொழி கொங்கு நாட்டில் பிரசித்தமானது. 'காசியில் இறக்க முத்தி' என்பதுபோல இத்தலத்தில் இறந்தவர்களும் முத்தி அடைவர் என்று ஆன்றோர் கூறுவர்.
மேலும் 'அவிநாசி எனும் சொல்லைக் கேட்க முத்தி கிட்டும்' என்றும் கூறுவர். இத்தகைய பெருமைகள் கொண்ட அவிநாசி கொங்கு நாட்டு உட்பிரிவுகளுள் ஒன்றான ஆறைநாட்டுக்கு (வடபரிசாரநாடு) உட்பட்டதாகும். இத்திருக்கோயிலில் உள்ள பழைய கல்வெட்டுகளில் இத்தலம் தட்சிண வாரணாசி என்று குறிப்பிடப் பெறுகிறது. இவ்வூரில் கிடைத்த பதினேழாம் நூற்றாண்டுச் சாசனம் ஒன்று. 'பூலோக கயிலாசமான புக்கொளியூராகிய அவிநாசித்தலம்' என்று இத்தலத்தைக் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டுகளில் இத்தலத்து இறைவன், 'சகதாதிபதி திவ்விய சிறீ கயிலாச நிவாச பார்வதி பிராணநாத எல்லாத்தேவர் வல்லபன்', 'தட்சிண வாரணாசி அவிநாசிலிங்கன்' என்று நீண்ட அடைமொழியோடு குறிப்பிடப் பெறுகிறார்.
கல்வெட்டுச் செய்திகள்
மிகப் பழைய கல்வெட்டுகளில் இறைவன் பெயர், அவிநாசி ஆளுடைய நாயனார், அவிநாசியாண்டார், அவிநாசி ஆளுடையார் என்றெல்லாம் குறிப்பிடப் பெறுகிறது. இத்தலத்து இறைவியான கருணாம்பிகை அம்பிகையின் பெயர். திருக்காமக்கோட்டத்து நாச்சியார் பெருங்கருணைச் செல்வியார், பெருங்கருணாலயச் செல்வியார், பெருங்கருணை அம்மன் என்றெல்லாம் கல்வெட்டுகளிலும் சாசனத்திலும் குறிப்பிடப் பெறுகிறது. இங்கு தலமரமாக மாமரம் விளங்குகிறது. காஞ்சிபுரத்தில் மாமரத்தின் கீழ் உமையம்மை சிவவழிபாடு புரிந்ததைப் போலவே அவிநாசியிலும் அம்மை மாவடியில் விளங்கிய அவிநாசியப்பரைப் பூசித்தாள் என்று தலபுராணம் கூறும். எனவே அவிநாசியப்பரை ஒரு கல்வெட்டு, காஞ்சிதலத்து இறைவன் பெயரான திருவேகம்பமுடையார்' என்பதோடு இணைத்து 'திருவேகம்பமுடை யாரான மாதேவராண்டார்' என்று போற்றுகிறது. அவிநாசியில் இறைவன், இறைவி கோயில்களின் வெளிச்சுவர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. இவற்றில் அரிய செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. நச்சினார்க்கினியர் எனும் பெயர் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெட்டப்பட்டுள்ள ஒரு கல்வெட்டில் காணப்பெறுகிறது. அவிநாசியப்பர் கோயிலுக்குத் தென்புறமுள்ள குளக்கரையில் விளங்கும் சுந்தரர் கோயிலில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அவரது திருமேனி எழுந்தருள் விக்கப் பெற்றதை ஒரு கல்வெட்டு காட்டுகிறது. சுந்தரர் கோயிலுக்குத் தென்பள்ளி எனும் பெயர் அக்காலத்தில் வழங்கியுள்ளது.
தீர்த்தங்கள்
அவிநாசியில் நள்ளாறு எனும் ஒரு சிற்றாறு முன்பு ஓடியது. அது இப்பொழுது சாக்கடையாக மாற்றப்பட்டு விட்டது. இவ்வாற்றின் தென்கரையில்தான் அவிநாசியப்பர் திருக்கோயில் விளங்குகிறது. திருக்கோயிலின் முன்புறம் நீராழி மண்டபமும் நாற்புறமும் படிகளும் அமைந்த அழகிய பெருங்குளம் ஒன்று உள்ளது. சுதையால் செய்யப் பெற்ற அழகிய பெரிய நந்தியுருவம் ஒன்று இதன் மேற்கரையில் விளங்குகிறது. இதன் கீழ்ப்பகுதியில் குளத்துக்குள் இறங்கும் துறை அமைந்துள்ளது. இக்குளம் சிவதீர்த்தம், கயிலைதீர்த்தம், பிரமதீர்த்தம், சந்திரபுட்கரணி, செல்லங்க சமூத்திரம் எனும் பெயர்கள் பல கொண்டது. அவிநாசியப்பர் கோயிலுக்குத் தெற்கே சுந்தரர் முதலையுண்ட சிறுவனை மீட்ட தாமரைக்குளம் என்ற பெரிய ஏரி விளங்குகிறது.
இனித் திருக்கோயில் வழிபாட்டை முறையாகத் தொடங்கலாம். அவிநாசியப்பர் கோயில் அளவால் பெரியது. கிழக்கு நோக்கியது. இதன் நாற்புறமும் உயர்ந்த மதிற்சுவர் விளங்குகிறது. கோயிலுக்கு முன்னால் பெரிய விளக்குத்தூண் காட்சி தருகிறது. இங்கு முதலை வாயிலிருந்து வெளிவரும் பிள்ளையின் சிற்பங்கள் உள்ளன. திருக்கோயிலின் முன்புறம் மதிலை ஒட்டிப் பாதிரிமரத்து அம்மன் கோயில் உள்ளது. இங்கு இறைவி தவக்கோலத்தில் அருட்காட்சி யளிக்கிறாள். கருவறையில் உள்ள சிலை அமர்ந்த கோலத்தில் உள்ள புதிய சிலையாகும். பழைய சிலை நின்ற கோலத்தில் அமைந்தது. இது மகாமண்டபத்தில் உள்ளது.
விளக்குத்தூணையடுத்துத் தென்புறத்தில் வீரபத்திரர் கோயில் ஒன்று சிறிய அளவில் அமைந்துள்ளது. இங்கு வீரபத்திரர் வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இக்கோயிலையடுத்து ஒரு பெரிய முன் மண்டபம் உள்ளது. இம்மூன்மண்டபத்தின் தென்பால் மூத்த பிள்ளையார் வடக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மண்டபத்தையடுத்து இராசகோபுர வாயில் விளங்குகிறது. இங்கு இறைவனுக்கு வலப்பால் விளங்கும் இறைவி கோயிலுக்கு முன்பும் ஓர் இராசகோபுரம் உள்ளது. இறைவனது இராசகோபுரம் ஏழு நிலைகளையும் இறைவியது இராசகோபுரம் ஐந்து சிலைகளையும் கொண்டுள்ளன. இவை அழகிய வண்ணச் சிற்பங்களோடு கண்ணைக் கவரும் வனப்புடையனவாகத் திகழ்கின்றன.
கோயில் அமைப்பு
இறைவனது இராசகோபுர வாயிலின் இருபுறமும் நடனமாடும் கோலத்தில் விளங்கும் விநாயகப்பெருமான் திருமேனிகள் காட்சியளிக் கின்றன. நிலைக்கல்லின் மேற்புறமுள்ள விட்டத்தின் நடுவிலும் ஒரு பிள்ளையார் வீற்றிருக்கிறார். இக்கோபுர வாயிலின் உட்புறம் இறைவனை நோக்கியவாறு இடப்பால் சுந்தரரும் வலப்பால் மாணிக்கவாசகரும் காட்சி தருகின்றனர். இங்கு திருமால், கதிரவன் திருவுருவங்களும் அமைந்துள்ளன. இராசகோபுரத்தையடுத்து நவரங்க மண்டபம் விளங்குகிறது. இங்குள்ள தூண்களில் பெரிய சிற்பங்கள் காட்சியளிக் கின்றன. ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, ஆலங்காட்டுக்காளி, வீரபத்திரர் முதலிய தெய்வத் திருவுருவங்கள் இத்தூண்களில் விளங்குகின்றன. இம்மண்டபத்தைக் கட்டிய பெரிய காளியப்ப கவுண்டர், சின்னக் காளியப்ப கவுண்டர் சிலைகளும் இத்தூண்களில் உள்ளன. இம்மண்டபத்தில் கொடிமரம் நந்தி ஆகியனவும் விளங்குகின்றன. இம்மண்டபத்தை அடுத்து அவிநாசியப்பார் கோயில் உள்சுற்று உள்ளது. உள்சுற்றுக்குள் செல்லும் இரண்டாவது வாயிலின் இருபுறமும் சுதையாலான கம்பீரமான வாயிற்காவலர்கள் நிற்கின்றனர்.
உள்ளே சென்றால் முன்மண்டபமும் அதில் விளங்கும் விடைத் தேவர் திருமேனியும் நமக்குக் காட்சியளிக்கின்றன. இத்திருமேனி மிகவும் பழமையானது. அடுத்துள்ள மகாமண்டப வாயிலின் இரு புறமும் கல்லாலான மிகப்பெரிய வாயிற்காவலர் திருமேனிகள் காட்சி தருகின்றன. இவை சிறந்த வேலைப்பாடுகளோடு திகழ்வது குறிப்பிடத்தக்கது. மகாமண்டபத்தில் ஒரு பிள்ளையார் வீற்றிருக்கிறார். கருவறையில் அவிநாசியப்பர் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். இவரை 'அரிய பொருளே! அவிநாசியப்பா' என்று மாணிக்கவாசகர் போற்றி உருகுகிறார். அப்பர் பெருமான், 'அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்! அவிநாசி கண்டாய்' எனப் பாடிப் பரவுகிறார்.
தல அற்புதங்கள்
காசி விசுவேசுவரலிங்கத்திலிருந்து ஒரு வேர் தோன்றி தெற்கே ஓடிவந்து அவிநாசியில் ஒரு இலிங்கமாக முளைத்தெழுந்தது. எனவே இந்த இலிங்கம் வாரணாசிக் கொழுந்து எனவும் பெயர் பெற்றது. மாவடியில் தோன்றிய இந்த சிவக்கொழுந்தை முதலில் பூசித்தவர் உமையம்மை ஆவார். இறைவன் சுத்த சங்கார தாண்டவம் ஆடியபோது இறைவி அவரைப் பிரிந்திருந்ததால், அச்சிறுமை தீர அவர் இங்கு சிவவழிபாடு செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது. காசியிலுள்ள விசுவநாத லிங்கமே இங்கு முளைத்து அவிநாசி லிங்கமாக விளங்குவதால் காசியில் ஓடும் கங்கையும் இந்த இலிங்கத்திற்கு அருகில் கிணறு வடிவில் தோன்றினாள். உள்சுற்றின் வடகிழக்கில் இத்தீர்த்தம் உள்ளது. காசியில் விளங்கும் காலவயிரவரும் இத்தலத்திற்கு எழுந்தருளினார். காசிக் கங்கைக் கிணற்றுக்கு அருகிலேயே இவர் சன்னிதியும் உள்ளது. இத்தகைய பெருமைகள் நிறைந்த அவிநாசி லிங்கேசுவரப் பெருமானை மனமாரப் போற்றி வழிபட்டு மகிழ்கிறோம். இப்பெருமாள் மிகுந்த அருட்பொலிவுடன் விளங்குகிறார். எனவே இவர் சன்னிதியை விட்டு அகல மனமில்லாமல் நிற்கிறோம். இப்பெருமானை நான்முகன், இந்திரனது பட்டத்து யானையான அயிராவதம், தாடகை எனும் அரக்கர் குலப்பெண் (மாரீசனின் தாய்), ஆதிசேடனின் மகளான நாககன்னி, வியாதன் எனும் வேடன், அரம்பை, தருமசேனன் எனும் மன்னன் முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர்.
பெருமானை வழிபட்டு வலம் வரத் தொடங்குகிறோம். தெற்குச் சுற்றில் தண்டபாணி, மாணிக்கவாசகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். அடுத்து மூன்று இலிங்கங்கள் உள்ளன. தொடர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார்கள், ஏழுதாய்மார்கள் ஆகியோர் விளங்குகின்றனர். தென்மேற்கில் மூத்தபிள்ளையார் வீற்றிருக்கிறார். மேற்குச்சுற்றில் ஆயிரலிங்கம் உள்ளது. அதையடுத்து ஐந்து இலிங்கங்கள் விளங்குகின்றன. இவை பஞ்சபூதலிங்கங்களாகும். இவற்றை அடுத்துத் திருமகள் காட்சி தருகிறாள். இச்சுற்றின் இறுதியில் அதாவது வடமேற்கில் செந்தில் ஆண்டவர் எழுந்தருளியுள்ளார். பெரிய திருமேனியில் இவர் அழகொழுகக் காட்சி தருகிறார். அவிநாசியப்பரது கருவறை தேவகோட்டங்களில் தென்புறம் மிகப்பழமையான ஆலமர் கடவுள் திருமேனி விளங்குகிறது. மேற்கில் அண்ணாமலையாரும் வடக்கில் கொற்றவையும் காட்சி தருகின்றனர். சண்டீசர் கோயிலும் கருவறையின் வடபால் உள்ளது. வடக்குச்சுற்றின் கீழ்ப்பால் வியாதவேடன் சன்னிதியும் முன்பு குறிப்பிட்ட காசிக்கிணறும் உள்ளன. இங்கு காலவயிரவர் சன்னிதியும் சிறப்போடு விளங்குகிறது.
வயிரவப்பெருமான் நாயூர்தியோடு பெரிய திருமேனி கொண்டு எழுந்தருளியுள்ளார். அருட்சிறப்புமிக்க சன்னிதியாக வயிரவர் சன்னிதி திகழ்கிறது. இவ்வயிரவருக்கு உற்சவத் திருமேனியும் இக்கோயிலில் உள்ளது. இது அழகிய கலைவேலைப்பாடுகள் நிறைந்த திருமேனியாகும். உற்சவரும் மூலவரைப் போலவே தீச்சுடர்களே திருமுடியாக விளங்க நான்கு திருக்கைகளோடும் நாயூர்தியோடும் காட்சி தருகிறார். நாட்டில் ஏதேனும் பெருந்தீங்குகள் ஏற்பட்டால் இப்பெருமானுக்கு நாற்பத்தெட்டு நாட்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து, உத்தரவு கேட்டு அதன் பின்னர் புறப்பாடு செய்தல் வழக்கம். உத்தரவு ஆகவில்லை என்றால் புறப்பாடு நடைபெறாது.
வயிரவரை வணங்கி வெளியில் வந்து வலம்வரத் தொடங்கலாம். இராசகோபுர வாயிலின் தென்பால் கதிரவன் கோயில் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறது. அவிநாசியப்பர் கோயிலின் தென்பால் திருமண மண்டபம் உள்ளது. இங்கு எழுந்தருளும் திருமேனிகள் வைக்கப் பெற்றுள்ளன. இதையடுத்து ஆறுமுகப்பெருமான் திருக்கோயில் விளங்குகிறது. இங்கு முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார். இத்திருக்கோயிலில் விளங்கும் மூன்று திருமேனிகளும் மிக அற்புதமாக வடிக்கப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலுக்குத் தென்பால் கருணாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. மதுரையைப் போல இங்கும் இறைவி இறைவனுக்கு வலப்பால் விளங்குகிறாள்.
இத்திருக்கோயிலின் முன்புறம் நந்தியும் கொடிமரமும் காட்சி தருகின்றன. இக்கோயில் முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை எனப் பெரிய அளவில் அமைந்துள்ளது. இங்குள்ள முன்மண்டபத்தில் நாககன்னி சிலை உள்ளது. மகாமண்டப வாயிலின் இருபுறமும் வாயிற்காவல் தேவியர் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தில் வடபால் பள்ளியறை உள்ளது. அர்த்தமண்டபத்தில் பிள்ளையார் வீற்றுள்ளார். கருவறையில் கருணையம்மை நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கைகளுடன் எழுந்தருளியுள்ளார். கல்லிலேயே திருவாசியும் அமைந்துள்ளது. மேற்கைகளில் தாமரையும் நீலமும் விளங்குகின்றன. கீழ்க்கைகள் அபயவரதமாகத் திகழ்கின்றன. அழகும் அருளும்
நிறைந்த சன்னிதியாக இவ்விறைவியின் சன்னிதி பொலிகிறது. கருணைச் செல்வியின் திருமுகத்தில் கருணை பொங்குகிறது. அன்னையின் தோற்றப் பொலிவு நம்மை அங்கேயே கட்டிப்போட்டு விடுகிறது. அருட்கடலாக விளங்கும் அம்மையின் அடித்தாமரைகளை அகங்குளிரப் போற்றி வணங்குகிறோம். மீண்டும் வலம் வரத் தொடங்கினால் தென்மேற்கில் மூத்தபிள்ளையார் கோயிலைக் காணலாம். கருவறையின் வடபால் சண்டிகேசுவரி சன்னிதி உள்ளது. இறைவியின் கருவறைத் தேவகோட்டங்களில் மூன்று தேவியர் திருமேனிகள் காட்சி தருகின்றன. இங்கு சண்டிகேசுவரி கோயிலை அடுத்துள்ள ஒரு தேவகோட்டத்தில் கொற்றவையும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. மேற்குச்சுற்றில் வலம் வந்து வடக்குச் சுற்றில் நுழைந்து வடகிழக்குப் பகுதிக்கு வருகிறோம்.
ஆடல் வல்லானின் அருட்காட்சி
இங்கு ஆடல்வல்லான் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆடல்வல்லான் திருமேனி கொங்குநாட்டுப் பாணியில் விளங்குகிறது. நீள்வட்டமான திருவாசியும் அதன் ஒடுக்கமான அடிப்பகுதியில் இருபுறமும் அழகிய கிளி உருவங்களும் இத்திருவுருவில் அமைந்துள்ளன. திருவாசியில் ஐம்பத்தொரு நெருப்புக் கொழுந்துகள் காட்சி தருகின்றன. இருபத்தெழு சுடர்களே பெரும்பாலான திருமேனிகளில் இருக்கும். இங்கு ஐம்பத்தொரு எழுத்துகளை குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்துள்ளது. இருபத்தேழு சுடர்கள் இருந்தால் அவை இருபத்தேழு நட்சத்திரங்களைக் குறிப்பதாகக் கூறுவர். இப்பெருமானது மேற்கைகள் இரண்டும் படுக்கை வசமாக விரித்து வைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் உடுக்கையும் தீயும் உள்ளன. வீசியகை சற்றுப் புதுமையாகக் காட்சி தருகிறது. சடைகள் கீழ்நோக்கித் தொங்குகின்றன. எனவே ஆடல் மிக மெதுவாக நடைபெறுவது விளங்குகிறது. அருகில் சிவகாமியம்மை காட்சி தருகிறார். கூத்தபிரானைத் தொழுது மகிழ்கிறோம். இப்பெருமானது கோயிலும் கல்திருப்பணியிலேயே விளங்குவது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலை அடுத்துக் கிழக்குப் பகுதியில் வேள்விச்சாலையுள்ளது. இங்கு நவகோள்கள், சனி ஆகியோர்க்குத் தனித்தனிக் கோயில்கள் உள்ளன. இவற்றை வலமாக வந்து தெற்கே வந்தால் அவிநாசியப்பரது கொடி மரத்தை அடையலாம். பெருமானை மீண்டும் தொழுது மகிழ்கிறோம்.
தல இலக்கியங்கள்
அவிநாசித்தலத்தில் பல அருளாளர்கள் வாழ்ந்து பேறு பெற்றுள்ளனர். இது அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் மூவராலும் பாடப்பெற்ற தலம். அருணகிரிநாதரின் அருமைத் திருப்புகழும் இத்தலத்துக்கு உண்டு. இளையான் கவிராயர் பாடிய அவிநாசித் தலபுராணம் ஆயிரத்து இருபத்தொரு பாடல்களைக் கொண்ட பெருநூலாகத் திகழ்கிறது. அவிநாசிநாதர் பதிகம் (முத்து நாகப்ப முதலியார்), பெருங்கருணாம்பிகை பதிகம் (கோவை கந்தசாமி முதலியார்), பெருங்கருணையம்மை பிள்ளைத் தமிழ் (சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்) அவிநாசிக் கருணையந்தாதி, அவிநாசிக் கருணாகர மாலை, (வாசுதேவநல்லூர், கருணைதாசர்) அவிநாசிநாதர் திருப்பள்ளியெழுச்சி (இராமநாத நாயுடு), அவிநாசியுலா (வடவழி அருணாசல கவிராயர்) பதிகங்கள் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்) அவிநாசிப் பெருங்கருணாம்பிகை யமக அந்தாதி (தவத்திரு. கந்தசாமி சுவாமிகள்), கருணாம்பிகை சதகம் (வாசுதேவ முதலியார்) முதலிய இலக்கியங்கள் இத்தலத்துக்குரியன. தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் இத்தலத்தில் சில காலம் இருந்து அவிநாசிப் பெருமானைப் போற்றி வந்துள்ளார்.
தல அருளாளர்கள்
ஒருசமயம் இத்தலத்திற்குக் குருநாத பண்டாரம் என்ற வீரசைவ அன்பர் ஒருவர் வந்தார். திருக்கோயிலுக்கு முன்னுள்ள திருக்குளத்தில் நீராடிவிட்டு அதன் கரையில் அமர்ந்து தனது இட்டலிங்கத்தைப் பூசித்துக்கொண்டிருந்தார். அப்போது, முதல்நாள் பெய்த மழையால் நிறைந்திருந்த தாமரைக்குளம் உடைப்பெடுத்தது. அதை அடைக்கவந்த அரசு அலுவலர்கள் ஆள் இல்லாக் குறையால் குளக்கரையில் வழிபாடு செய்து கொண்டிருந்த குருநாதபண்டாரத்தை வேலைக்கு அழைத்தனர். பூசை செய்யும்போது பிறரோடு உரையாடக் கூடாது என்பதால் அவர் அமைதியாக இருந்தார். உடனே அதிகாரி ஒருவன் அவர் பூசை செய்து கொண்டிருந்த சிவலிங்கத்தைப் பறித்துக் குளத்துக்குள் எறிந்துவிட்டு அவரை வேலைக்கு இழுத்துச் சென்றான்.
குளத்தின் உடைப்பைச் சரிசெய்யும் பணி முடிந்துவந்த குருநாத பண்டாரம் திருக்குளக்கரையில் நின்றுகொண்டு, 'நான் வழிபட்ட இட்டலிங்கம் தானாகக் கரை ஒதுங்கி என்கையில் கிடைத்தால்தான் உயிர்வாழ்வேன்; இல்லையேல் உயிரை விடுவேன்' என்று அவிநாசிப் பெருமானை வேண்டிக்கொண்டு நின்றார். அப்போது பெருமான் அருளால் அக்குளத்திலிருந்த ஒரு மீன் அவரது இட்டலிங்கத்தை வாயில் கவ்விக்கொண்டு வந்து கரையில் உமிழ்ந்து சென்றது. குருநாதபண்டாரம் அதை எடுத்து அணிந்து மகிழ்ந்தார். இதை வாலசுந்தர கவிராயர் பாடிய கொங்குமண்டல சதகம் ஒரு பாடலில் (பா.எ.12) குறிப்பிடுகிறது. இதை விளக்கும் சிவலிங்கத்தை மீன் கவ்விவரும் சிற்பங்கள் விளக்குத்தூண் மண்டபத்திலும், தாமரைக் குளத்தருகே இருக்கும் சுந்தரர் கோயிலிலும் காணப்படுகின்றன. குருநாத பண்டாரம் சிவலிங்கம் பெற்று வழிபடும் சிற்பம் இங்குள்ள வழிகாட்டி விநாயகர் திருக்கோயிலில் உள்ளது.
முன்பு ஒருகாலத்தில் வீரவிக்கிரம குமார சோளியாண்டான் எனும் சிற்றரசன் அவிநாசிப் பகுதியை ஆண்டுவந்தான். அவனது முன்னோர் ஒண்டிப்பிலி மந்திரவாதிக்குச் சில மானியங்கள் விட்டிருந்தனர். அவற்றை இச்சிற்றரசன் கைப்பற்றி அவிநாசியப்பர் கோயிலுக்குச் சேர்த்தான். அதனால் அம்மந்திரவாதி மந்திரத்தால் மன்னனுக்குப் பல துன்பங்களை உண்டாக்க முயன்றான். கருணாம்பிகை அருளால் அரசனுக்கு ஒரு துன்பமும் ஏற்படவில்லை. அப்போது அவிநாசியப்பர் தேர்த்திருவிழா வந்தது. இதுதான் சமயம் என்று அம்மந்திரவாதி இறைவனது பெருந்தேரின் நான்கு பெரிய சக்கரங்களிலும் நான்கு கொடிய பூதங்களை மந்திர வலிமையில் இருத்தி வைத்துத் தேர் நகராதபடி செய்துவிட்டான். தேர் ஓடா விட்டால் அரசனுக்கு அவமானம் நேரிடும் எனக்கருதி இவ்வாறு செய்து வைத்தான். அவன் எண்ணப்படியே, எத்தனையோ முயன்றும் தேர் சிறிதும் நகராமல் நின்றது. அரசன் மிகவும் வருந்திச் செய்வதறியாது திகைத்தான்.
அப்போது நள்ளாற்றின் வடகரையில் மடம் அமைத்துத் தங்கியிருந்த வள்ளல் தம்பிரான் (வெள்ளைத் தம்பிரான்) என்னும் அருளாளர் ஒருவரின் தவவலிமையையும் அவர் பெற்றிருந்த சித்திகளையும் ஊரார் மூலமாக அறிந்த சோளியாண்டான் அவரிடம் சென்று நடந்தவற்றைக் கூறித் தேரை எப்படியாவது ஓடும்படி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அவர் அவன் வேண்டுகோளை ஏற்றுத் தேர்நிலைக்கு வந்து திருநீறு மந்திரித்து நான்கு பக்கங்களிலும் வீசினார். அப்போது அந்த நான்கு பூதங்களும் வெளிப்பட்டன. அவர் அவற்றை மந்திரத்தால் கட்டி ஊரின் நான்கு மூலைகளிலும் இருந்து ஊரைப் பாதுகாக்க வேண்டும் என்று கட்டளையிட்டு அனுப்பினார். பின்னர்த் தேரை இழுக்கும்படி கூறினார். அவ்வாறே அனைவரும் தேரை இழுக்க அது நல்லமுறையில் ஓடி, நிலைக்கு வந்தது. வள்ளல் தம்பிரானின் தவ ஆற்றலைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினர். கொங்குநாட்டுத் திருத்தேர்களில் அவிநாசித் தேரே அளவில் பெரியதாகும். அவிநாசியில் சித்திரைப் பெருந்திருவிழாத் தேரோட்டம் இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அவிநாசியப்பர் திருக்கோயிலில் நாள் வழிபாடுகளும் சிறப்பு நாள் வழிபாடுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்குத் திருமுருகன் பூண்டியிலுள்ள முயங்கு பூண்முலையம்மை உடனமர் முருகநாதப் பெருமாள் எழுந்தருள்வது குறிப்பிடத்தக்கது. இத்தலம் கோவையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கோபி, ஈரோடு, திருப்பூர் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பெருவழியில் உள்ளதால் இவ்வூர் வழியே அடிக்கடி பேருந்துகள் சென்று கொண்டே இருக்கின்றன. மேட்டுப்பாளையம், அன்னூர் முதலிய ஊர் களிலிருந்தும் பேருந்துகள் அவிநாசி வழியாகச் செல்கின்றன. எனவே இத்தலத்தை அன்பர்கள் எளிதில் அடையலாம். அவிநாசியப்பரையும் கருணாம்பிகையையும் கண்டு வழிபட்டு அன்பர்கள் எல்லாப் பேறுகளையும் பெற்றுய்ய வேண்டுகிறோம்.