



Google Map
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கோவை மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாக இருந்தது. அக்காலத்தில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களே மாவட்ட ஆட்சித் தலைவர்களாக இருந்தனர். காரோ என்பவர் அக்காலத்தில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவராகப் பலகாலம் பணியாற்றினார். ஆங்கிலேயரான காரோ நிருவாகப் பணிகளை மேற்பார்வையிடும் பொருட்டுப் பல ஊர்களுக்கும் சென்று தங்குவது வழக்கம். ஒருமுறை காரோ பவானி சென்று பணிகளைக் கவனித்து விட்டு அங்குள்ள ஆய்வு மாளிகையில் தங்கியிருந்தார். அன்று இரவு மின்னலுடன் இடிஇடித்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறுமி உறங்கிக் கொண்டிருந்த காரோவின் கைகளைப் பிடித்து இழுத்து எழுப்பினாள். எழுந்தவர் என்ன என்று கேட்பதற்குள், அச்சிறுமி அவரை வேகமாக இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள். அடுத்த நொடி ஒரு பேரிடி இடித்தது. ஆய்வுமாளிகையின் மேற்கூரை கீழே விழுந்து நொறுங்கியது. காரோ திகைப்பும் வியப்பும் மேலோங்கத் தன்னைக் காப்பாற்றிய சிறுமியை நன்றியோடு திரும்பிப் பார்த்தார். ஆனால் அச்சிறுமியோ வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். காரோ உரத்த குரலில் அழைத்தபடி அச்சிறுமியை வேகமாகப் பின்தொடர்ந்தார். ஆனால் அவரால் சிறுமியைப் பிடிக்க முடியவில்லை. அவள் விரைந்து சென்று பவானியில் உள்ள திருக்கோயிலுக்குள் புகுந்து அங்குள்ள வேதநாயகியம்மை சன்னிதியில் மறைந்து விட்டாள்.
தன்னைப் பேரிடியிலிருந்து காப்பாற்றியது சாதாரண பெண்ணல்லள்; அன்னை வேதநாயகியே சிறுமியாக வந்து காப்பாற்றி இருக்கிறாள் என்பதைக் காரோ உணர்ந்தார். பிற சமயத்தைச் சேர்ந்தவர்கள் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை அறிந்திருந்த காரோ அதற்கு மேல் உள்ளே செல்லாமல் திரும்பினார். மறுநாள் அம்மை சன்னிதிக்கு முன்புள்ள திருமதிலில் துளையிடச் செய்து அதன் வழியாகக் காரோ வேதநாயகியைக் கண்ணாரக் கண்டு வழிபட்டு நன்றி செலுத்தினார். நள்ளிரவில் பள்ளியறையில் இருந்து புறப்பட்டு வந்து தன்னைக் காத்த இறைவிக்குக் காரோ பள்ளியறையில் வைப்பதற்கேற்ற தந்தத்தால் ஆன அழகிய ஊஞ்சல் ஒன்றைக் காணிக்கையாக அளித்தார். பவானியில் அவ்வூஞ்சல் இன்றும் அன்று நடந்த அற்புதத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சி நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிவித்ததைப் போன்ற ஒரு பாடல் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் உள்ள
திருநணாப் பதிகத்தில் அமைந்துள்ளது. இதோ அந்த அருமைப் பாடல், 'வில்லார் வரையாக மாநாகம் நாணாக வேடம் கொண்டு
புல்லார் புரம்மூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும்மானும்
அல்லாத சாதிகளும் அங்கழல்மேல் கைகூப்ப அடியார்கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியும் திருநணாவே'
இப்பாடலில் வரும் 'அல்லாத சாதி' என்பதற்கு நம் நாட்டைச் சேராத மக்கள் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா? அப்படி ஆங்கிலேயரும் கைகூப்பித் தொழும் பெருமையுடைய தலமான திருநணா என்பதே இன்று பவானி என்று பெயர் பெற்றுள்ளது. நண்ணா என்னும் சொல்லே திரிந்து நணா என வழங்குகிறது. இத்தலத்தில் சிவபெருமானைப் பத்தியுடன் வழிபடுவோரைத் தீமைகள் நண்ணாத (நண்ணுதல் - பொருந்துதல்) காரணத்தால் இத்தலத்திற்கு நணா எனும் பெயர் தோன்றியது. தேவாரத்தில் திரு எனும் அடைமொழி சேர்த்துத் திருநணா என இவ்வூர் போற்றப் பெற்றுள்ளது. நண்ணாவூர் என்றும் இத்தலம் குறிப்பிடப் பெறுவதுண்டு.
பெயர்க்காரணம்
பதிற்றுப்பத்தில் எட்டாம்பத்தைப் பாடிய கபிலருக்குச் சேர 88 மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன், 'சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து, நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்' என்று பதிகம் கூறும். பதிற்றுப்பத்திலுள்ள பதிகம் கூறும் நன்றா எனும் குன்றம் பவானிக்கு அருகிலுள்ள ஊராட்சிக் கோட்டை மலை எனும் வேதகிரிமலையே என்பது ஆய்வாளர் சிலரது முடிவாகும். நன்றா எனும் குன்றைச் சார்ந்த ஊராகப் பவானி விளங்கியதால் குன்றின் பெயரான நன்றா என்பதே ஊருக்கும் அமைந்தது என்பர். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் உள்ள திருநணாப் பதிகம் மலைசார்ந்த ஊராகவே இத்தலத்தை வருணித்துள்ளதும் இங்கு நோக்கத்தக்கது. நன்றா எனும் குன்றமும் ஊரும் ஞானசம்பந்தர் காலத்தில் நணா என மாறின.
பழங்காலத்தில் வானி என்று அழைக்கப்பெற்ற பவானி ஆறும் காவிரியும் கூடும் இடத்தில் அமைந்துள்ள தலம் என்பதால் திருநணாவுக்கு வானிகூடல் என்ற பெயரும் உண்டு. திருப்புகழில் இத்தலம் திருவானி கூடல் எனக் குறிப்பிடப்பெறுவதும் இங்கு நினைக்கத்தக்கது. வானி என்பது பிற்காலத்தில் பவானி என்று மாறியது. இப்பவானி ஆற்றின் பெயரே ஊருக்கும் பெயராக நிலைத்து விட்டது. பவானி கொங்கு நாட்டின் உட்பிரிவுகளுள் ஒன்றான வடகரை நாட்டுக்கு உட்பட்ட தலமாகும்.
தலச்சிறப்புகள்
வடக்கே கங்கை, யமுனை, சரசுவதி (சரசுவதி நதியைக் கண்ணுக்குத் தெரியாத ஆறு என்று வடக்கே குறிப்பிடுவார்கள்) எனும் மூன்று ஆறுகளின் சங்கமமான திரிவேணி சங்கமம் புகழ்பெற்று விளங்குகிறது. அதைப் போலவே பவானியிலும் காவிரி, பவானி எனும் ஆறுகள் திருக்கோயிலருகே கூடுகின்றன. இவற்றோடு கண்ணுக்குத் தெரியாத அமுதந்தி என்ற ஓராறும் இங்கு கூடுவதாகப் புராணம் கூறும். எனவே பவானி திரிவேணி சங்கமமான பிரயாகைத் தலத்துக்கு இணையாகக் கருதப்பெறுகிறது. அதனால் இதற்குத் தென்பிரயாகை எனும் ஒரு பெயரும் வழங்குகிறது. வடக்கேயுள்ள பத்ரிநாத் பழைய நூல்களில் திருவதரியாச்சிரமம் என்று கூறப்பெறும். வதரி என்றால் இலந்தைமரம் என்று பொருள். அங்கு இலந்தை தலமரம் என்பதால் திருவதரி என்ற பெயர் அதற்கு அமைந்தது. பவானியிலும் இலந்தையே தலமரமாக விளங்குகிறது. எனவே இதற்கும் வதரியாச்சிரமம் என்ற பெயர் அமைந்துள்ளது.
இத்தலம் குபேரன் வழிபட்டுப் பேறு பெற்ற தலமாகும். ஆகவே இதற்கு 'அளகை' (அளகாபுரி - குபேரனது தலைநகரம்) என்ற திருப்பெயரும் உண்டு. பவானித் தலத்தில் பராசரர், வியாசர், விசுவாமித்திரர் முதலிய முனிவர்களும் நான்முகன், திருமால் முதலிய தேவர்களும் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். பவானி மூர்த்தி, தலம், நீர்த்தம் எனும் மூன்று சிறப்புகளும் நிறைந்த தலமாக விளங்குகிறது; இது ரோட்டிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பல ஊர்களிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துகள் செல்கின்றன.
கல்வெட்டுகளில் இறைவன் பெயர் நணாவுடையார் என்றும் இறைவி பெயர் பண்ணார் மொழியம்மன் என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளன. தற்போது இறைவி வேதநாயகி என்றும் இறைவன் சங்கமேசுவரர், சங்கமுகநாதேசுவரர் என்றும் அழைக்கப் பெறுகின்றனர்.
கோயில் அமைப்பு
பவானி திருக்கோயில் கிழக்கு நோக்கிய பெரிய திருக்கோயிலாகும். இக்கோயிலுக்கு கிழக்கில் காவிரியும் மேற்கில் பவானியாறும் ஓடுகின்றன. இவை கோயிலுக்குத் தெற்கே ஒன்றுகூடுகின்றன. நாற்புறமும் திருமதில் விளங்குகிறது. வடக்கே ஐந்துநிலை இராசகோபுரம் உள்ளது. இதுவே முக்கிய வாயிலாகும். கோபுரத்துக்கு முன்னால் உள்ள நந்தி மண்டபத்தில் பெரிய நந்திதேவர் தெற்குநோக்கிக் காட்சியளிக்கிறார். இவரை வணங்கித் திருக்கோயில் வழிபாட்டைத் தொடங்கலாம். கோபுர வாயிலின் இருபுறமும் மூத்தபிள்ளையாரும் (கோட்டை விநாயகர்) அனுமனும் கோயில் கொண்டுள்ளனர். கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் இருபுறமும் இராசகணபதியும் முத்துக் குமாரசாமியும் வீற்றிருக்கும் கோயில்கள் உள்ளன.
அடுத்துத் திருமகள், நிலமகள் உடனமர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இப்பெருமாள் கருவறையில் தேவியருடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு முன்னால் விளக்குத் தூண் உள்ளது. இக்கோயிலில் கண்ணன், சந்தான கோபாலன் என்ற பெயருடன் ஒரு சன்னிதியிலும் வேணுகோபாலன் என்ற பெயருடன் மற்றொரு சன்னிதியிலும் தேவியர்களுடன் காட்சியளிக்கிறான். வலப்பால் சௌந்தரவல்லித் தாயார் சன்னிதியுள்ளது. பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையில் இலட்சுமி நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். பெருமாள், தாயார் கோயில்களின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் அனைத்தும் கல்லால் கட்டப் பெற்றுள்ளன. இக்கோயில்களுக்கு முன்புறம் தென்வடலாக அமைந்த பெரிய சுதை மண்டபம் விளங்குகிறது.
திருமால் கோயிலை அடுத்து வேதநாயகியம்மன் கோயில் உள்ளது. இதற்கு முன்பு ஒரு விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அருகில் வடக்கு நோக்கி சித்திவிநாயகர் வீற்றுள்ளார். இறைவி திருக்கோயில் முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என விரிவாக அமைந்துள்ளது. இங்குள்ள முன்மண்டபத் தூண்களில் பல அழகிய சிற்பங்கள் காட்சி தருகின்றன. யாளிமீதும் குதிரைமீதும் அமர்ந்த நிலையில் காட்சிதரும் வீரர்கள் சிற்பங்கள் பெரிய அளவில் அமைந்துள்ளன. மகாமண்டப வாயிலின் இருபுறமும் வாயிற்காவற்தேவியர் கம்பீரமாகக் காட்சி தருகின்றனர். கருவறையில் வேதநாயகியம்மை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி அளிக்கிறாள். கல்லிலேயே திருவாசியும் அமைந்துள்ளது. மேற்கைகளில் தாமரையும் நீலமும் விளங்கக் கீழ்க்கைகளில் அபய, வரத முத்திரைகள் பொலிய இறைவி திருக்காட்சி தருகிறாள். இவ்வம்மையின் அருளை விளக்கும் வகையில் 'வேதநாயகி யிடம் வேண்டியவர்கள் வெறுங்கையுடன் திரும்பியதில்லை' என்ற பழமொழி இங்கு வழங்குகிறது. அருட்பொலிவு மிக்க அம்பிகையின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம். கருவறையைச் சுற்றியுள்ள உள்சுற்று மண்டபத் தூண்கள் புதுமையாகக் காட்சிதருகின்றன. இவற்றின் கீழ்ப்பகுதியில் யானை மீதமர்ந்த சிங்கங்கள் வடிக்கப் பெற்றுள்ளன. சண்டிகேசுவரி சன்னிதி வடபால் உள்ளது.
அன்னையின் திருக்கோயிலுக்குத் தெற்கில் சண்முக சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. முருகன் கோயிலுக்கு முன்னாலும் ஒரு விளக்குத்தூண் உள்ளது. முருகன் கோயில் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை எனும் அமைப்பில் திகழ்கிறது. அர்த்தமண்டப வாயிலின் இருபுறமும் வாயிற்காவலர்கள் நிற்கின்றனர். கருவறையில் கருணை பொலியும் கந்தப் பெருமானைக் கண்டு வணங்குகிறோம். இவர் ஆறுமுகமும் பன்னிருகையும் விளங்கத் தேவியருடன் அருட்காட்சி தருகிறார். முருகன் கோயிலுக்குப் பின்னால் சனீசுவரர் சன்னிதி உள்ளது. இதற்கு வடபால் சுரகரேசுவரர் சன்னிதி காட்சியளிக்கிறது.
சுரகரேசுவரர் சன்னிதி இத்தலத்துக்குரிய சிறப்புச் சன்னிதியாக விளங்குகிறது. இங்கு கருவறையிலும் வாயிலின் இருபுறங்களிலும் என மூன்று சுரகரேசுவரர் திருமேனிகள் திகழ்கின்றன. சுரம் (காய்ச்சல்) நீக்கும் பரமனே சுரகரேசுவரர் எனப்பெறுகிறார். இவர் சிவ பெருமானுடைய மகேசுவர மூர்த்தங்களுள் ஒருவராவார். நடராசப் பெருமானைப் போன்ற வடிவமுடையவர். மூன்று தலைகளையும், மூன்று கைகளையும், மூன்று கால்களையும் கொண்டவர். சிலையின் பின்புறம் கல்லிலேயே திருவாசியும் உள்ளது. தீராப்பிணி தீர்க்கும் தெய்வமான இப்பெருமானைப் போற்றி மகிழ்கிறோம்.
சங்கமேசர் கோயில்
இத்திருக்கோயில் வளாகத்தின் தென்பால் சங்கமேசுவரர் திருக்கோயில் விளங்குகிறது. இறைவனுக்கு முன்னால் கிழக்கிலும் ஒரு கோபுர வாயில் உள்ளது. இதற்கு வடக்கில் வயிரவர் கோயிலும் நவகோள்கள் சன்னிதியும் விளங்குகின்றன. கோயிலின் முன்புறம் அழகிய விளக்குத் தூண் உள்ளது. இதன் கீழ்ப்பால் தாத்தாத்ரேயர் காட்சி தருகிறார். தெற்கில் நந்தியும் மேற்கில் காமதேனுப்பசுவும் வடிக்கப் பெற்றுள்ளன. வடக்கில் மூத்தபிள்ளையார் காட்சியளிக்கிறார். விளக்குத்தூணை அடுத்துக் கொடிமரம் உள்ளது. கொடிமரத்தை அடுத்துப் பெரிய முன்மண்டபமும் அதையடுத்து, மகாமண்டபமும் உள்ளன. அடுத்து அர்த்த மண்டபமும் சங்கமேசுவரர் கருவறையும் விளங்குகின்றன. முன்மண்டபத்தின் வடக்கிலும் ஒரு வாயில் உள்ளது. இதன் இருபுறமும் வலம்புரி விநாயகரும் முருகப்பெருமானும் வீற்றிருக்கின்றனர். முன்மண்டபத்தின் கிழக்கு வாயில் வழியாக உள்ளே வந்தால் வாயிலின் இருபுறமும் கதிரவனும் சந்திரனும் விளங்குவதைக் காணலாம். இம்மண்டபத்தில் நந்திதேவர் இறைவனைக் கண்டு களித்தவாறு வீற்றிருக்கிறார். இவர் அழகிய பெரிய திருமேனி கொண்டு திகழ்கிறார். இம்மண்டபத்தின் தென்பால் நால்வர் காட்சி தருகின்றனர். அறுபத்து மூவரின் படிமங்களும் இங்கு உள்ளன. மகாமண்டப வாயிலின் இருபுறமும் கம்பீரமான வாயிற்காவலர்கள் காட்சி தருகின்றனர். இவர்களது திருவுருவங்கள் மிகவும் பெரிய அளவில் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் வடகிழக்கில் தேவியுடன் ஆடல் வல்லான் அருட்காட்சி அளிக்கிறார்.
மகாமண்டபத்திலும் ஒரு நந்தியெம்பெருமான் வீற்றிருக்கிறார். எழுந்தருளும் திருமேனிகள் பல இங்கு வைக்கப் பெற்றுள்ளன. இம்மண்டபத்தின் தென்மேற்கில் சோமாக்கந்தர் வீற்றிருக்கிறார். அர்த்தமண்டப வாயிலின் இருபுறமும் பழமையான வாயிற்காவலர்கள் திருமேனிகள் விளங்குகின்றன. அருகில் மூத்தபிள்ளையாரும் முருகப் பெருமானும் காட்சி தருகின்றனர்.
கருவறையில் சுயம்புவான சங்கமேசுவரப் பெருமான் வட்ட ஆவுடையாரில் கம்பீரமாகத் திருக்காட்சி அளிக்கிறார். இவர் எப்போதும் சிறப்பான அலங்காரத்தில் விளங்குவது குறிப்பிடத்தக்கது. கண்டோரைக் கவர்ந்து இழுக்கும் அருட்திருமேனி கொண்ட இப்பெருமானை, மனமார வணங்கி மகிழ்கிறோம்.
'முத்தேர் நகையாள் இடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தார் இடம்போலும் சோலை சூழ்ந்த
அத்தேன் அளியுண் களியால் இசைமுரல ஆலத்தும்பி
தெத்தே என முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திருநணாவே'
எனும் திருஞானசம்பந்தர் தேவாரத்தை ஓதிப் பெருமானைப் போற்றுகிறோம்.
வலம் வரத் தொடங்கினால் தெற்குச்சுற்றில் விளங்கும் அறுபத்து மூவர் திருமேனிகளைக் கண்டு வணங்கலாம். இச்சுற்றில் ஏழு தாய்மார்கள், வீரபத்திரர், இராமநாதப்பெருமான், மலைவளர் காதலி, தண்டபாணி ஆகியோரும் எழுந்தருளி அருட்காட்சி வழங்குகின்றனர். சங்கமேசரின் தேவகோட்டங்களில் கூத்தாடும் பிள்ளையார், ஆலமர் கடவுள், அண்ணாமலையார், நான்முகன், கொற்றவை ஆகியோர் விளங்குகின்றனர். இங்குள்ள ஆலமர் செல்வர் பெரிய திருமேனி கொண்டு அழகொழுக வீற்றுள்ளார். கருவறையின் வடபால் சண்டீசர் கோயிலும் உள்ளது.
மேற்குச் சுற்றில் தென்மேற்கில் மூத்தபிள்ளையார் வீற்றுள்ளார். அடுத்துப் பஞ்சபூத லிங்கங்கள் காட்சி தருகின்றன. வடமேற்கில் வள்ளி தெய்வயானையுடன் கல்யாண சுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார். வடக்குச்சுற்றில் முன்புகூறிய சண்முக சுப்பிரமணியர் கோயிலுக்குச் செல்லும் வழியுள்ளது. வெளிச்சுற்றில் தென்மேற்கில் தலமரமான இலந்தை உள்ளது. இங்கு விநாயகர் சிலையும் சிவலிங்கமும் உள்ளன. தெற்குக் கோபுர வாயில் வழியாகச் ஆறுகளின் கூடுதுறைக்கு (சங்கமம்) செல்லலாம். செல்லும் வழியில் அமுதலிங்கர் கோயில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தின் பாணத்தைத் தனியாகக் கையில் எடுத்துக் கொள்ளலாம். குழந்தையில்லாதவர்களும் நோயாளிகளும் ஆவுடையாரிலிருந்து பாணத்தைத் தனியே எடுத்துக்கொண்டு மூன்று முறை வலம் வந்து மீண்டும் பாணத்தைப் பழையபடி ஆவுடையாரின் மீது வைத்து வணங்குகின்றனர். இவ்வாறு செய்தால் தம் கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகின்றனர். ஆற்றுக்குச் செல்லும் வழியில் ஆயிரலிங்கம் (சகத்திரலிங்கம்), காயத்திரிசலேசுவரர், விசுவநாதர், விசாலாட்சி கோயில்கள் உள்ளன. காவிரி, பவானி ஆறுகளின் கூடலில் மடுக்களின் வடிவில் சில தீர்த்தங்கள் விளங்குகின்றன.
பவானித் திருத்தலம் தமிழகப் பக்தர்களை மட்டுமல்லாமல் அயல் மாநிலப் பக்தர்களையும் குறிப்பாக கன்னட மாநிலத்தவர்களை அதிகமாக ஈர்க்கும் தலமாக விளங்குகிறது. எனவே கன்னட மொழியிலும் பல அறிவிப்புப் பலகைகள் இங்கு காட்சி தருகின்றன. தென்புலத்தார் வழிபாடும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் நாள்வழிபாடுகள் முறையாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன. சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் விரிவாக நடைபெறுகின்றன. சித்திரைத் திங்களில் பெருந்திருவிழா பன்னிரண்டு நாட்கள் நடைபெறுகின்றது. பவானிக் கூடலுக்கு ஒரு தலபுராணம் இயற்றப் பெற்றுள்ளது. திருமுருகன்பூண்டித் தலபுராணம் பாடிய ஓராட்டுக்குப்பை செட்டிபாளையம் வாசுதேவ முதலியாரே இத்தல புராணத்தையும் பாடியுள்ளார். வேதநாயகியம்மன் மீதும் சங்கமேசுவரர் மீதும் பல இலக்கியங்கள் பாடப்பெற்றுள்ளன. இத்திருக்கோயில் திருப்பணியில் மைசூர் கிருட்டிணராச உடையாரின் பிரதிநிதியான தேவராயர், தாரமங்கலம் பகுதியை ஆண்ட இம்மடிகெட்டி முதலியார், நாராயணகவுண்டர் முதலியோர் ஈடுபட்டதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
பவானிக்கு அருகிலுள்ள ஊராட்சிக்கோட்டைமலை கம்பீரமாகக் காட்சி தருகின்றது. இதை வேதகிரி என்று போற்றுவர். மிக உயரமான இதன் உச்சியில் சிவபெருமான் வேதகிரீசுவரர் எனும் திருப்பெயரோடு எழுந்தருளியுள்ளார். வேதநாயகியாகிய இறைவிக்கும் இங்கு சன்னிதி யுள்ளது. திருமால் கோயிலும் இம்மலையில் சிறப்பாக விளங்குகிறது. மலைக்கோயில் திறந்திருக்கும் நாள், நேரம் முதலியவற்றை அறிந்து கொண்ட பிறகே மேலே செல்ல வேண்டும். அன்பர்கள் திருநணா இறைவனை வணங்கி இம்மை மறுமைப் பேறுகளைப் பெற்றுய்ய வேண்டுகிறோம்.