top of page

பசுபதீசுவரர் திருக்கோயில் 

கரூரின் பழைய பெயர் கருவூர் ஆகும். இது சோழ மன்னர்களின் ஐந்து தலைநகரங்களுள் ஒன்று என்று பெரிய புராணம் கூறுகிறது. இது கொங்குநாட்டுத் தேவாரத் தலங்களுள் ஒன்று. இங்கு சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கு ஆனிலை' என்பது பெயர். பெருமானுக்கு ஆனிலையப்பர் என்பது பெயர். இங்கு எறிபத்தர் எனும் சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் சிவனடியார்களுக்குத் தீங்கிழைப்பவர்களைத் தண்டிக்க மழுவைக் கையில் வைத்திருப்பார். இவர் வாழ்ந்த காலத்தில் சிவகாமியாண்டார் எனும் அடியவர் ஒருவர் கருவூரில் ஆனிலைப்பெருமானுக்கு மலர்த் தொண்டு செய்து வந்தார். ஒருநாள் சிவகாமியாண்டார் வழக்கம்போல மலர்பறித்துப் பூக்கூடையில் நிறைத்து அதை ஒரு தண்டில் தொங்கவிட்டுத் தோளில் தாங்கியவாறு திருக்கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது புகழ்ச் சோழரின் பட்டத்து யானை காவிரியில் நீராடி, அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது சிவகாமியாண்டாரை நெருங்கிய போது பூக்கூடையைத் துதிக்கையால் பறித்து மலர்களைக் கீழே சிந்தியது. பாகர்கள் யானையை நிறுத்தாமல் வேகமாக நடத்திச் சென்றனர். சிவகாமியாண்டார் சினந்து யானையைக் கையிலிருந்த தடியால் அடிக்க விரைந்தார். முதியவரான அவரால் யானையைப் பின்தொடர முடியவில்லை. கால்தவறிக் கீழே விழுந்தார். ஆனிலையப்பரிடம் முறையிட்டு ஓலமிட்டார். அவ்வழியே வந்த எறிபத்தர் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்தார்.

 சிவகாமியாண்டாரை வணங்கி, உமக்குத் தீங்கிழைத்த யானை எந்த வழியாகச் சென்றது? எனக் கேட்டறிந்தார். மழுவோடு விரைந்த எறிபத்தர் யானையை அடைந்து அதைத் தாக்க அதுவும் எறிபத்தரைக் கொல்ல முற்பட்டது. அடியவரின் சினமும் வேகமும் கூடின. அதன் துதிக்கையை மழுவால் வெட்டி வீழ்த்தினார். யானையை நடத்திவந்த பாகர்கள் ஐவரையும் கொன்று எறிந்தார். இச்செய்தி மன்னருக்குப் போனது.

 புகழ்ச்சோழமன்னர் விரைந்து யானை வீழ்ந்து கிடக்கும் இடத்தை அடைந்தார். அங்கு மழுவோடு நின்ற எறிபத்தரைக் கண்டார். இது பகைவர் யாரோ செய்த செயல் என நினைத்த மன்னர், இதைச் செய்தவர் யார்? எனக் கேட்டார். அங்கிருந்தோர் எறிபத்தரைக் காட்டினர். திகைத்த மன்னர், சிவனடியாராகிய இவர் கொன்றார் என்றால் ஏதோ தவறு நடந்துள்ளது என்று கருதி, அடியவரான இவருக்கு யானையால் ஒன்றும் நேராதது நான் செய்த தவமே என்று ஆறுதலடைந்தார். அடியவர் இத்தனை சினம் கொள்ள நான் காரணமாகி விட்டேனே என வருந்தி, எறிபத்தர் முன்சென்று பணிவுடன், 'யானையைக் கொன்றவர் அடியவர் என்று யான் அறியேன். யான் கேட்டதொன்று. இந்த யானை செய்த குற்றத்திற்கு இதைப் பாகரோடு கொன்றது போதுமா?' என்று வினவ, எறிபத்தர் நடந்தவற்றை எடுத்துரைத்தார்.

 சோழமன்னர், 'அடியவருக்குத் தீங்கிழைத்த இந்த யானையையும் பாகர்களையும் கொன்றால் மட்டும் போதாது; என்னையும் கொல்ல வேண்டும்; அடிகளின் மங்கல மழுவால் என்னைக் கொல்லுதல் முறையாகாது என்று கூறித் தம் உடைவாளை எடுத்து, இதனால் என்னைக் கொன்றருள்க என்று வேண்டி நின்றார். எறிபத்தர், 'அந்தோ இவர் அன்பர்; வாளை வாங்காவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வார்' எனக்கருதி அவ்வாளைப் பெற்றுக் கொண்டார். புகழ்ச்சோழர், அடியவர் என்னைக் கொன்று பிழைதீர்க்கும் பேறு பெற்றேன்' என மகிழ்ந்தார். எறிபத்தரோ, இத்தகைய அன்பருக்குத் தீங்கு நினைத்த நான் பாவி! என்னுயிரை மாய்த்துக் கொள்வதே முறை!' என்று உறுதிகொண்டு வாளால் தம் கழுத்தை அரிய முற்பட்டார். இதைக் கண்ட புகழ்ச் சோழர் அதிர்ந்து எறிபத்தரின் கைகளைப் பற்றிக் கொண்டார். அடியவரும் அரசரும் உணர்ச்சிப் பெருக்கால் வருந்தி நிற்க, அப்போது வானில், 'உங்கள் திருத்தொண்டின் சிறப்பை உலகத்திற்குக் காட்டச் சிவபிரான் அருளால் இவை நிகழ்ந்தன' எனும் ஒலி எழுந்தது. இறந்த யானையும் பாகர்களும் உயிர்பெற்று எழுந்தனர். பூக்கூடையில் மலர்கள் முன்பு போலவே நிறைய, சிவகாமியாண்டாரும் மகிழ்ந்தார். எறிபத்தர் வேண்டப் புகழ்ச்சோழர் பட்டத்துயானையின் மீது அமர்ந்து அரண்மனையை அடைந்தார். புகழ்ச்சோழர் பெருமை

 சிலகாலம் சென்றது. புகழ்ச்சோழ மன்னர் தமக்கு அடங்கிக் கப்பம் கட்டாத அதிகன் மேல் படையெடுத்துச் சென்று அவனை அழித்து வருமாறு அமைச்சர்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் அவ்வாறே படையெடுத்துச் சென்று போரிட்டு அதிகனின் சேனையைச் சிதறடித்து அவன் செல்வங்களை எடுத்து வந்தனர். வெற்றிக்கு அடையாளமாக அதியனின் சேனைவீரர்கள் தலைகள் சிலவற்றையும் கொண்டு வந்தனர். அத்தலைகளில் ஒரு தலையில் சிவசின்னமான சடைமுடி இருந்ததை அரசர் கண்டு அதிர்ந்து, அடியவரையா என் சேனை கொன்றது? இப்பழிக்கு என்ன செய்வேன்? என்னுயிர் போக வில்லையே!' என்றெல்லாம் பலவாறு கதறினார். அமைச்சர்களை அழைத்து இளவரசனுக்கு முடிசூட்டும்படி ஆணையிட்டார். தீவளர்க்கச் செய்து, திருநீற்றுக் கோலப் பொலிவுடன் சடையுடன் இருந்த தலையை மணிகள் விளங்கும் பொன் தட்டில் வைத்து அதைத் தம் தலைமீது தாங்கி நெருப்பை வலம்வந்து அதில் இறங்கினார். அடியார் பத்தியினால் அரசர் கோமான் ஆனிலையப்பர் திருவடிகளை அடைந்தார்.

 இவ்வாறு இரண்டு நாயன்மார்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த தலமாகக் கருவூர் திகழ்கிறது. இது கொங்கு நாட்டு உட்பிரிவுகளுள் ஒன்றான வெங்கால நாட்டைச் சேர்ந்தது. இன்று பெரிய நகரமாக விளங்குகிறது. கரூரிலுள்ள பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே ஆனிலையப்பர் திருக்கோயில் உள்ளது.

ஊர்ப்பெருமை

 கருவூர் மிகவும் தொன்மையான ஊர். இவ்வூரைப் பற்றிய செய்திகள் ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்க நூல்களிலேயே இடம்பெற்றுள்ளன. இது சேரமன்னர்களின் தலைநகரமாக விளங்கியது என்று ஆய்வாளர்கள் பலர் சான்றுகளுடன் நிறுவியுள்ளனர். சேரர் தலைநகரமான வஞ்சி என்பது கேரளத்தில் கொடுங்கோளூர் அருகில் இருந்தது என்று சில அறிஞர்களும் இக்கருவூர்தான் வஞ்சி என்று சில அறிஞர்களும் வாதிட்டாலும் இவ்வூரின் தொன்மையை எவரும் மறுப்பதில்லை . சங்கப்பாடல்களில் சேரர் தலைநகரம் வஞ்சி, கருவூர் எனும் இருபெயர்களாலும் சுட்டப்பெறுகிறது. கரூருக்குப் பக்கத்திலுள்ள புகழிமலையில் உள்ள பழமையான கல்வெட்டு ஒன்று பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள செல்வக் கடுங்கோ வழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை ஆகியோர் அந்நூலில் உள்ளவாறே வரிசைப்படுத்திக் குறிப்பிடுகிறது. அக்கல்வெட்டு கருவூரையும் சுட்டுகிறது. இவர்களில் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதனார் என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலில் வரும்.

'புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் காலம்

கல்லென் பொருநை...

                               (பா.எ.387)'

 எனும் அடிகளில் கருவூருக்கு அருகில் ஓடும் அமராவதி யாறு (பொருநை) குறிக்கப்பெறுகிறது. எனவே வஞ்சி என்றும் கருவூர் என்றும் இலக்கியங்களில் குறிக்கப்பெறும் சேரர் தலைநகர் இக்கருவூரே என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். இத்தலம் முன்பு வஞ்சி மரக்காடாக விளங்கியதால் இதற்கு வஞ்சுளாரண்யம் என்ற பெயரும் கருவூர்ப் புராணத்தில் கூறப்பெறுகிறது. அவ்வகையில் இத்தலத்தில் உள்ள பஞ்சலிங்கங்களில் ஒரு இலிங்கத்திற்கு வஞ்சுளேசலிங்கம் என்னும் திருப்பெயரும் அமைந்துள்ளது. இங்கு தலமரமாக வஞ்சி மரமே விளங்கியதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே வஞ்சிக்காட்டில் உருவான ஊருக்கு முற்காலத்தில் வஞ்சி எனும் பெயர் அமைந்திருந்தது புலப்படுகிறது. இவ்வூரின் காவல் தெய்வமாக விளங்கும் பத்திரகாளி அம்மைக்கும் வஞ்சியம்மன் என்ற பெயரே அமைந்துள்ளது. இவ்வஞ்சியம்மன் கோயில் ஆனிலையப்பர் கோயிலுக்குத் தென் கிழக்கே உள்ளது. இச்சான்றுகளும் இதுவே சேரர் தலைநகராக விளங்கிய வஞ்சி என்பதை உறுதிப்படுத்துகின்றன.

 பிற்காலத்தில் இது சோழர்கள் முடிசூடிக் கொள்ளும் ஐந்து தலைநகரங்களுள் ஒன்றாகவும் விளங்கியது. (ஏனையவை காவிரிப் பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர்) இப்பட்டியலில் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் முதலியன இல்லாததால் இந்நகரங்கள் தலைநகரங்களாக உருப்பெறாத காலத்திற்கு முன்னரே மேற்குறித்த ஐந்து நகரங்களும் தலைநகரங்களாகச் சிறப்புப் பெற்றிருந்தன என்பது புலனாகின்றது. சங்க இலக்கியங்களைப் பாடிய புலவர்களின் பட்டியலில் கருவூரைச் சேர்ந்த பதின்மூன்று புலவர்கள் இடம் பெற்றுள்ளனர். அக்காலத்தில் சான்றோர்கள் நிறைந்த ஊராகக் கருவூர் இருந்துள்ளதை இது காட்டுகின்றது. கருவூரில் அக்காலத்தில் நடைபெற்ற உள்ளிவிழா எனும் விழாப் பற்றி அகநானூறு (பா.எ.368) குறிப்பிடுகிறது.

 கருவூரில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் கருவூர் வெங்கால நாட்டுக்கு உட்பட்டது எனும் செய்தி இடம்பெற்றுள்ளது. திருவானிலை மகாதேவர், உடையார் திருவானிலை ஆளுடையார் எனும் பெயர்களால் ஆனிலையப்பர் குறிக்கப்பெறுகிறார். வெங்காலநாடு அடங்கிய மண்டலம் வீரகேரள சோழ மண்டலம் என்றும் வீரசோழ மண்டலம் என்றும் அதிராசராசமண்டலம் என்றும் பலவாறு கல்வெட்டுகளில் கூறப்பெற்றுள்ளது. கருவூரை ஒரு கல்வெட்டு முடிவழங்கும் சோழபுரம் என்றும் இன்னொரு கல்வெட்டு திருவஞ்சி மாநகரமான முடிவழங்கும் சோழபுரம் என்றும் குறிப்பிடுகின்றன. இவை கருவூர் சோழர் மூடிசூடிக் கொள்ளும் ஊர் என்பதைக் காட்டும் சான்றுகளாகும். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சின்னமனூர்ச் சாசனத்தில் 'புனற்பொன்னி வடகரையில் பொழில் புடைசூழ் மதில்வஞ்சி' என்று கருவூர் குறிப்பிடப் பெறுகிறது. பிரான்மலைக் கல்வெட்டு ஒன்றில், 'கருவூர் வஞ்சிமா நகரமான முடிவழங்கும் சோழபுரம்' என இவ்வூர் சுட்டப்பெறுகிறது. சோழ மன்னர்கள் முடிசூடிக் கொள்ளும் நகரம் என்பதால் இதற்கு முடிவழங்கு சோழபுரம் எனும் பெயர் ஏற்பட்டது எனத் தெரிகிறது. கருவூர்த் தேவர் வரலாறு

 ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவரான கருவூர்த்தேவர் பிறந்த ஊர் கருவூர் என்பது இத்தலத்திற்கு அமைந்த மற்றொரு சிறப்பாகும். இவர் அந்தணர் குலத்தில் தோன்றியவர். மறைகளையும் ஆகமங்களையும் கற்றுத் தேர்ந்தவர். யோகம் பயின்றவர். சிவநெறியில் நின்ற தவ ஒழுக்கம் உடையவர். உலக வாழ்வில் ஒட்டாமல் வாழ்ந்தவர். இவருடைய உண்மை நிலையை அறியாத பலர் இவரைப் பழித்துப் பேசினர். இவர்களுக்குத் தம்முடைய யோகசித்தியின் வலிமையைக் காட்டுவதற்குக் கருவூர்த்தேவர், வெயிலை வெப்பமில்லாத நிழல் போலக் காயச் செய்தும் ஆற்றுநீரை வற்றச் செய்தும் மீண்டும் அதைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தும் கோயிலில் பூட்டியிருந்த கதவுகள் தாமே திறக்கும்படி செய்தும் அருளாடல்கள் புரிந்தார். இப்படிப் பல அரிய செயல்களைச் செய்தார்.

 இவர் நாடெங்கும் திருத்தலப்பயணம் மேற்கொண்டார். ஒருமுறை பொதியமலை சென்று தங்கியிருந்தார். அப்போது தஞ்சாவூரில் மாமன்னன் இராசராசன் கட்டிய பெருங்கோயிலின் குடமுழுக்கு வந்தது. பெருவுடையார் என்று போற்றப்படும் அக்கோயிலின் பெரியலிங்கமான மூலவருக்கு அட்டபந்தன மருந்து சாத்தும்போது அது இறுகாமல் இளகியே இருந்தது. அரசன் எத்தனையோ முயன்றும் மருந்து இறுகவில்லை . அப்போது, 'கருவூர்த்தேவர் வந்து முயன்றால் மருந்து இறுகும்' என வானில் ஓர் ஒலி எழுந்தது. அவர் எங்கு இருக்கிறார்? அவரை எவ்வாறு அழைத்து வருவது? என்றெல்லாம் எண்ணி மன்னன் கவலை கொண்டான். அப்பொழுது கருவூர்த் தேவரின் குருவான போகநாதர் அங்கு வேற்றுருவில் வந்து, 'கருவூர்த்தேவரை இப்பொழுதே இங்கு வரச்செய்கிறேன்' என்றார். எல்லோரும் வியந்து நிற்க. போகநாதர் ஒரு காக்கையின் காலில் கடிதம் எழுதிக்கட்டி கருவூர்த் தேவரிடம் அனுப்பினார். அக்காக்கை பொதிய மலையில் கருவூர்த்தேவர் இருக்கு மிடத்தை அடைந்தது. தம்குருவின் கடிதத்தைக்கண்ட தேவர் உடனே தஞ்சையை அடைந்தார். அரசன் கருவூராரை வணங்கி வரவேற்றான்.

 திருக்கோயிலுக்குள் சென்ற கருவூர்த்தேவர் நாதமும் (நாதம் - இலிங்கம்) விந்துவும் (விந்து - ஆவுடையார்) ஒன்றிணைவதாக எனத் திருவருளை நினைந்து ஒருகணம் சிவயோக பாவனையை மேற்கொள்ள அட்டபந்தன மருந்து இறுகியது. சிவலிங்கப் பிரதிட்டை முழுமை பெற்றது. அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு கருவூராரைப் போற்றி மகிழ்ந்தனர்.

 கருவூர் திரும்பிய தேவர் தம் தவச்சாலையில் தங்கியிருந்து தவத்திலும் வழிபாட்டிலும் ஈடுபட்டதோடு மாணாக்கர்களுக்கு ஞான நூல்களைக் கற்பித்தும் வந்தார். அப்போது அவ்வூர் அந்தணர்கள் சிலர் அவருக்குப் பலவழிகளில் தீங்கு செய்ய முற்பட்டனர். ஆனால் அவர்களது முயற்சிகள் கருவூராரின் தவ ஆற்றலுக்கு முன்னால் தோற்றுப்போயின. தாம் இறைவனோடு கலக்கும் காலம் நெருங்கியதை உணர்ந்த கருவூர்த்தேவர் திருக்கோயிலுக்குச் சென்று ஆனிலையப்பராகிய சிவலிங்கத்தைத் தழுவினார். இறைவன் அவரை தம்மோடு சேர்த்தருளினான். வானில் தேவதுந்துபி முழங்கியது. மலர் மழை பெய்தது. அனைவரும் வியந்து நின்றனர். இத்தகைய சிறப்புகள் நிறைந்த கருவூர்த்தேவரைக் கருவூர்ச்சித்தர் என்றும் கருவூர்ப்புராணம் குறிப்பிடும்.

 இவ்வரலாறு கருவூர்ப்புராணத்துள் மிக விரிவாகக் கூறப் பெற்றுள்ளது. ஆனால், கருவூர்த்தேவர் வேறு; கருவூர்ச்சித்தர் வேறு; இருவர் வரலாற்றையும் இப்புராணம் கலந்து இருவரையும் ஒருவராகவே கூறுகின்றது என அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். கருவூர்த்தேவர் பற்றிப் பெரிய புராண உரையாசிரியர் சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தனியாக ஒரு நூல் எழுதியுள்ளார். அவரும் இக்கருத்தினரே என்பது குறிப்பிடத்தக்கது. கருவூர்த்தேவர் கோயில் ஆனிலையப்பர் கோயிலில் தென்மேற்குப் பகுதியில் சிறப்பாக விளங்குகிறது.

புராண வரலாறுகள்

 படைப்புக்கடவுளான நான்முகன் ஒருநாள் இரவு நன்கு உறங்கினான். அப்போது எல்லா உலகங்களும் அழியும்படி பிரளயகாலம் வந்தது. நான்முகன் விழித்துப் பார்த்தபோது எல்லாம் அழிந்ததைக் கண்டு வருந்தினான். மீண்டும் எல்லாவற்றையும் படைக்க முற்பட்டான். ஆனால் படைக்க முடியவில்லை. சிவபெருமானை வழிபட்டுப் படைப்புத் தொழிலைச் செய்யலாம் எனக் கருதி, திருக்கயிலை சென்று இறைவனைப் பணிந்தான். அப்போது சிவபிரான் காமதேனுவை அழைத்துப் படைப்புத் தொழிலை மேற்கொள்ளுமாறு ஆணையிட்டார். நான்முகனுக்குக் கருவூர் சென்று தம்மை வழிபட்டுக் கொண்டு இருக்குமாறு கட்டளையிட்டார். காமதேனு நாரதமுனிவரின் வழி காட்டுதலின்படி ஆன்பொருதை ஆற்றின் கரையில் விளங்கும் வஞ்சி வனத்தை அடைந்தது. அப்போது வானில், 'ஆதிபுரமான இத்தலத்தில் பாதலத்திலிருந்து தோன்றிய தெய்வத்தன்மையுடைய ஒரு இலிங்கம் புற்றால் மூடப்பெற்றுள்ளது. அது ஆதிநாதன் எனும் பெயருடையது. அதை வழிபடுக' எனும் ஓர் ஒலி எழுந்தது. காமதேனு மகிழ்ச்சியுடன் அப்புற்றை அடைந்து தன்மடியில் சுரக்கும் பாலால் திருமஞ்சனம் செய்து மலர்தூவிப் போற்றி வழிபாடு செய்தது.

 இவ்வாறு காமதேனு மூன்று தேவ ஆண்டுகள் பூசித்தது. ஒருநாள் காமதேனுவின் குளம்பு அப்புற்றின் இடப்பாகத்தில் உராய்ந்தது. அதனால் இலிங்கத் திருமேனியில் புண்ணாக, காமதேனு அஞ்சி நடுங்கியது. பலவாறு புலம்பியது. அப்போது சிவபெருமான் அதன்மூன் தோன்றி ஆறுதல் கூறி, 'நீ நம்மை இங்கு வழிபட்டதால் நமக்குப் பசுபதி நாயகன் எனும் பெயர் ஏற்படும்' என்று அருள்புரிந்து காமதேனுவுக்குப் படைப்புத் தொழிலைச் செய்யும் முறையையும் எடுத்துரைத்து, அந்த இலிங்கத்தில் மறைந்தார். காமதேனுவும் அவ்வாறே எல்லாவற்றையும் படைத்துவிட்டுத் தன்னுலகம் சென்றது.

 ஒவ்வொரு பிரளயத்திலும் அழிந்த சராசரங்களை இத்தலம் மீண்டும் தோற்றுவிப்பதனால் இதற்கு ஆதிபுரம், கருப்பபுரி (கருவூர்) என்னும் பெயர்கள் வழங்குகின்றன. இங்கு காமதேனு வழிபட்ட மூலலிங்கமான பசுபதிலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு இலிங்கங்கள் உள்ளன. பசுபதிலிங்கத்திற்குக் கிழக்கே கோடிலிங்கமும் அதன்கிழக்கே கயிலாயநாதலிங்கமும் அதன் தெற்கே கரியமாலீசலிங்கமும் அதற்குப் பக்கத்தில் வஞ்சுளேசலிங்கமும் விளங்குகின்றன. இவ்வாறு கருவூரில் ஐந்து இலிங்கங்கள் தொன்மைச் சிறப்புடன் திகழ்கின்றன. காமதேனு கருவூரில் வழிபட்டுப் படைப்புத் தொழில் செய்ததைப் பேரூர்ப் புராணமும் விரிவாகக் கூறுகின்றது.

காமதேனு வழிபட்ட இலிங்கத்தை நான்முகனும் வழிபட்டு ஆனிலையப்பர் அருளால் படைப்புத் தொழில் கைவரப் பெற்று மகிழ்ந்தான். ஒருமுறை, உமையம்மை இறைவனிடம் தவங்களுள் சிறந்த தவம் யாது? என வினவ, சிவவழிபாடே சிறந்த தவம் எனப் பெருமான் கூறினார். அதனால் சிவவழிபாடு செய்ய விரும்பிய இறைவி அதற்கு ஏற்ற தலம் எது? எனச் சிவபிரானிடம் கேட்க, அவர் வஞ்சி வனமே ஏற்றதலம் என உரைத்து, அங்கு சென்று வழிபாடு செய்வாயாக என அருள்புரிந்தார். கலைமகளும் திருமகளும் தேவமகளிரும் உடன்வர அம்பிகை வஞ்சுளாரண்யம் வந்து பசுபதிலிங்கத்தை முறையாக வழிபட்டுப் பேறுபெற்றார். அதேபோல் இப்பெருமானைக் கலைமகளும் திருமகளும் வழிபட்டுப் புண்ணியம் பெற்றனர்.

 கருவூரில் எண்திசைக்காவலர்களும் வழிபட்டு வரம் பெற்றனர். அதேபோல திருமால், முருகப்பெருமான், முனிவர்கள், வேதங்கள், கதிரவன், சந்திரன், சுக்கிரன், தாடகை, முசுகுந்தன், மூவேந்தர்கள் எனப் பலரும் இங்கு வழிபட்டு மகிழ்ந்துள்ளனர். இவ்வுலகில் உள்ள சிவத் தலங்களுள் ஒன்பது தலங்கள் மிகவும் சிறப்பானவை. அவையாவன: கயிலைமலை, மந்தரமலை, மதுரை, காசி, காஞ்சி, பிரயாகை, நைமி சாரணியம், சேது, கருவூர் என்பன. இங்குள்ள முக்கியமான தீர்த்தங்கள் ஆன்பொருநையாறு (அமராவதியாறு) பிரமதீர்த்தம், தாடகைதீர்த்தம், அரசதீர்த்தம், தேனுதீர்த்தம், முருகதீர்த்தம் என்பன வாகும். தாடகை தீர்த்தம் மட்டும் திருக்கோயிலுக்குள் கிணறு வடிவில் உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் முறைப்படி, தாடகை தீர்த்தத்தில் நீராடி ஆனிலையப் பரை வழிபட்டால் நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்வர். இதுவரை கருவூர்த்தல புராணம் கூறிய பல செய்திகளை அறிந்தோம். இனி மூறையாகத் திருக்கோயில் வழிபாட்டைத் தொடங்கலாம்.

 கருவூர்த் திருக்கோயில் அருள்மிகு கல்யாண பசுபதீசுவரர் கோயில் என இன்று பெயர் பெற்றுள்ளது. இங்கு ஆன் (காமதேனு) பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்று (நிலை) சிவவழிபாடு செய்ததால் இக்கோயிலுக்கு ஆனிலை என்ற பெயர் ஏற்பட்டது. இது வடமொழியில் பசுபதீச்சரம் எனப் பெயர் பெற்றது. எனவே ஆனிலையில் எழுந்தருளிய பெருமான் ஆனிலையப்பர் (பசுபதீசுவரர்) எனத் திருப்பெயர் பெற்றார். திருக்கோயில் அமைப்பு

 இத்திருக்கோயில் கிழக்கு நோக்கிய பெருங்கோயிலாகத் திகழ்கிறது. கிழக்கில் ஏழுநிலைகள் கொண்ட இராசகோபுரம் வண்ணப் பொலிவு மிக்க சிற்பங்களோடு நெடிதுயர்ந்து நிற்கிறது. நாற்புறமும் திருமதில் விளங்குகிறது. மேற்கில் கோபுரம் இல்லாத ஒரு வாயில் உள்ளது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் அழகிய பெரிய விளக்குத்தூணைக் காணலாம். இதில் காமதேனு ஆனிலையப் பருக்குப் பால் பொழியும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்தபிள்ளையார், புகழ்ச்சோழநாயனார், யானை மீது அமர்ந்து செல்லும் பாகன் சிற்பங்களும் இதில் காட்சி தருகின்றன. யானைப் பாகன் சிற்பத்தின் கீழ் சிவகாமியாண்டாரின் பூக்கூடை உள்ளது. யானைப்பாகன் சிற்பத்தை எறிபத்தர் என்றும் கூறுகின்றனர். இதையடுத்து வடபால் புகழ்ச்சோழர் மண்டபம் எனும் நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கல்லால் உருவாக்கப் பெற்ற இம்மண்டபம் அழகாகக் காட்சித் தருகின்றது.

 விளக்குத்தூணையடுத்து முகப்பு மண்டபம் உள்ளது. இதையடுத்து இரண்டாம் நிலைக் கோபுரம் விளங்குகிறது. இதன் வாயிலின் இருபுறமும் வாயிற்காவலர் திருமேனிகள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. உள்ளே சென்றால் பெரிய முகப்பு மண்டபத்தைக் காணலாம். கோபுரவாயிலின் உட்புறம் தென்பால் கதிரவனும் வடபால் சந்திரனும் உள்ளனர். இம்மண்டபத்தில் விநாயகர் திருமேனியும் கொடிமரமும் பெரிய நந்திதேவர் திருமேனியும் விளங்குகின்றன. இந்தநந்தி சிறந்த கலை வேலைப்பாடுகளோடு கம்பீரமாக வீற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நந்தியை அடுத்து இருபுறமும் இத்தலத்தோடு தொடர்புடைய எறிபத்தர், முசுகுந்தர், புகழ்ச்சோழநாயனார், திருஞானசம்பந்தர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். இம்மண்டபத்தை யடுத்துச் சற்று உயரமான முன்மண்டபம் உள்ளது. இதைக்கடந்தால் இறைவனது திருக்கோயில் மகாமண்டபத்தை அடையலாம். இதன் வடபால் ஆடல்வல்லான் எழுந்தருளி அருட்காட்சி வழங்குகிறார். அருகில் சிவகாமியம்மையும் காரைக்காலம்மையாரும் உள்ளனர். இங்கு நால்வரும் விளங்குகின்றனர். இச்செப்புத் திருமேனிகள் அனைத்தும் சிறந்த கலைப் படைப்புகளாகத் திகழ்கின்றன. மகா மண்டபத்தின் தென்மேற்கில் பிள்ளையார் வீற்றிருக்கிறார். அர்த்த மண்டபத்தில் இரண்டு போகசத்திகளின் திருமேனிகளும் பள்ளியறைச் சொக்கர் சிலையும் காட்சிதருகின்றன.

கருவறையில் ஆனிலைப்பெருமான் சதுரவடிவ ஆவுடையாரின் நடுவில் சுயம்புத்திருமேனியாகத் திருக்காட்சி வழங்குகிறார். உயரமான இலிங்கத் திருமேனியாக இது விளங்குகிறது. இந்த இலிங்கம் இடப்புறம் சற்றுச் சாய்ந்த நிலையில் உள்ளது. சிறப்பாக அலங்காரம் செய்யப்பெற்றும் ஒளிவிளக்குகளால் மேலும் பொலிவு பெற்றும் திகழும் பசுபதி நாயகன் அருட்பொலிவோடு நம்மை வரவேற்கிறார். அகங்குளிரத் தொழுது மகிழ்கிறோம். இப்பெருமான் அடியார்களுக்கு அருள்புரிவதில் பெருவிருப்பம் கொண்டவர். இதை ஞானசம்பந்தப் பெருமான்,

 'விண்ணு லாமதி சூடி வேதமே

பண்ணு ளார்பர மாய பண்பினர்

கண்ணுளார்கரு வூருளானிலை

அண்ணலார் அடியார்க்கு நல்லரே'

என்று எடுத்துரைப்பார். சம்பந்தப் பெருமான் பதிகம் பாடிப் பரவிய பரமனை நாமும் வணங்கும் பேறு பெற்றதை எண்ணி மகிழ்கிறோம். பெருமானது தேவகோட்டங்களில் பிள்ளையார், ஆலமர்செல்வர், மாதிருக்கும் பாதியர், நான்முகன், கொற்றவை ஆகியோர் காட்சி தருகின்றனர். கருவறையின் வடபால் சண்டீசர் வீற்றிருக்கிறார். முகப்பு மண்டபத்தை அடைந்து வலம் வரத் தொடங்கலாம். தெற்குச் சுற்றில் நால்வர், பொல்லாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், எறிபத்த நாயனார், அறுபத்துமூவர், சந்தானக் குரவர்கள், முருகப் பெருமான், வலம்புரி விநாயகர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.

 மேற்குச்சுற்றில் சௌந்தரநாயகி, நாகேசுவரர், கன்னிமூலை விநாயகர், சோமாக்கந்தர் ஆகியோர் வரிசையாகக் காட்சி தருகின்றனர். அடுத்து எழுந்தருளும் திருமேனிகள் உள்ளன. தொடர்ந்து ஆனைகள் சூழ விளங்கும் திருமகள் - திருமேனியைக் காணலாம். அடுத்துள்ள சன்னிதியில் வள்ளி, தெய்வயானை உடனமர் ஆறுமுகப்பெருமான் பன்னிரு திருக்கைகளுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அழகொழுகத் திருக்காட்சியளிக்கிறார். அருகில் இம்முருகனைத் திருப்புகழ் பாடிப் பரவிய அருணகிரிநாதர் விளங்குகிறார். அடுத்து, தண்டபாணிக் கடவுள், கரியமாலீசர், காந்திமதியம்மை , வயிரவர் ஆகியோர் வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு வணங்கி மகிழ்கிறோம். 1 வடக்குச்சுற்றில் ஐந்து இலிங்கங்கள் ஐந்து அம்மன் திருமேனி களோடு விளங்குகின்றன. ஐந்து நந்திகளும் இங்கு உள்ளன. கிழக்கே வந்து வடக்கே திரும்பினால் அம்மை திருக்கோயில் மகாமண்டபத்தை அடையலாம். இங்கு தெற்கு நோக்கிய சன்னிதியில் சௌந்தரநாயகியம்மை அருட்காட்சி அளிக்கிறார். மகாமண்டபத்தில் நந்திதேவர் வீற்றிருக்கிறார். இம்மண்டபம் ஆனிலையப்பருக்கு இடப்பால் கோயில் கொண்டுள்ள அலங்காரவல்லியம்மை திருக்கோயில் மகாமண்டபத்தோடு இணைத்துக் கட்டப்பெற்றுள்ளது. எனவே இம்மண்டபத்தில் அலங்கார வல்லியை நோக்கிய நிலையில் மற்றொரு நந்தியும் வீற்றிருக்கிறார். அலங்காரவல்லி கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என அமைந்தது. சௌந்தரநாயகி கோயிலும் இவ்வாறே அமைந்துள்ளது. சௌந்தரநாயகி கோயில் மகாமண்டபத்தின் வடமேற்கில் அலங்காரவல்லி கோயிலுக்குள் செல்லும் வாயிலும் வடகிழக்கில் அலங்காரவல்லிக்கு நேராக விளங்கும் வெளிவாயிலும் உள்ளன. இவ்வெளிவாயிலின் முன்னால் குபேரவிநாயகர் வீற்றிருக்கிறார். இரண்டு தேவியரின் அர்த்தமண்டப வாயில்களுக்கு அருகிலும் மூத்தபிள்ளையார் காட்சியளிக்கிறார்.

அம்மையின் அருட்தோற்றம்

 இங்குள்ள அம்மைகளின் திருமேனி ஒரே தோற்றத்தில் அமைந்துள்ளன. இரண்டிலும் திருவாசி கல்லிலேயே வடிக்கப் பெற்றுள்ளது. இரண்டு தேவியரும் நான்கு திருக்கைகளுடன் நின்ற கோலத்திலேயே விளங்குகின்றனர். இருவரும் மேற்கைகளில் தாமரை மலரையும் கருங்குவளை மலரையும் ஏந்தியுள்ளனர். இருவரது கீழ்க்கைகளும் அபயவரதமாகவே உள்ளன. இரண்டு திருமேனிகளும் நல்ல உயரத்தில் விளங்குகின்றன. இருவடிவங்களும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளோடு அருளொழுக அமைந்துள்ளன. இங்கு அம்மைகளுக்குச் சிறப்பாக அலங்காரம் செய்யப் பெறுகின்றது. இரண்டு சன்னிதிகளும் அன்பர்களை அகலவிடாத அருட்சூழல் கொண்டு விளங்குகின்றன. அலங்காரவல்லிக்கு வடபால் சண்டிகேசுவரி உள்ளார். சௌந்தரநாயகி சன்னிதியை அடுத்துப் பள்ளியறை உள்ளது. இத்தலத்தில் அம்மைக்கு இரண்டு சன்னிதிகள் இருப்பது போலவே தேவாரப் பாடல் பெற்ற தலங்களான திருவாரூர், திருஆவூர்ப் பசுபதீச்சரம், திருநாகேச்சரம், திருந்துதேவன்குடி, திருநீலக்குடி, திருஇன்னம்பர், திருக்கற்குடிமலை முதலிய தலங்களிலும் அம்மைக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் இறைவிக்கு இரண்டு சன்னிதிகள் இருப்பதற்கு மூன்று வரலாறுகள் சொல்லப் பெறுகின்றன. அவை வருமாறு:

 இங்கு முன்பு அலங்காரவல்லி சன்னிதி மட்டுமே இருந்தது. ஒருசமயம் இத்தேவியின் திருமேனியில் சிறிது பின்னம் ஏற்பட்டது. எனவே அரசன் அதேபோல வேறொரு சிலையைச் செய்வித்தான். பழைய சிலையை அகற்றிப் புதிய சிலையைப் பிரதிட்டை செய்ய ஏற்பாடு செய்தான். அப்போது இறைவி அரசன் கனவில் தோன்றிப் பழைய சிலையை மாற்ற வேண்டாம் எனக் கட்டளையிட்டு மறைந்தாள். எனவே புதிய சிலைக்கும் மன்னன் ஒரு கோயில் அமைத்து அதைப் பிரதிட்டை செய்தான். இது முதல் வரலாறு. இரண்டாவது வரலாறு வருமாறு: கருவூருக்கு அருகில் உள்ள அப்பிபாளையம் எனும் ஊரில் வாழ்ந்த செல்வர் ஒருவருக்கு வடிவுடையாள் எனும் மகள் ஒருத்தி இருந்தாள். இப்பெண் ஆனிலையப்பர்மேல் பத்திகொண்டவளாகத் திகழ்ந்தால். நாளும் சிவவழிபாடு செய்து வந்தாள். பெண்ணுக்குப் பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தபோது, 'நான் ஆனிலைப் பெருமானையே மணப்பேன்' என்று வடிவுடையாள் உறுதியாகக் கூறிவிட்டாள். ஊரார் வடிவுடையாளுக்குப் பித்துப் பிடித்து விட்டது என்று சொல்லத் தொடங்கினர். பெற்றோர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் வடிவுடையாள் உறுதியாக நின்றாள்.

 ஒருநாள் ஆனிலையார் அப்பெண்ணின் பெற்றோர் கனவில் தோன்றி, பங்குனி உத்திரத் திருவிழாவின் ஏழாவது நாளில் உம் மகளை நாம் திருமணம் புரிவோம்; அதன் அடையாளமாக அன்று அப்பிபாளையம் முழுவதும் பூச்சொரிந்திருக்கும்' என்று கூறி மறைந்தார். பெற்றோர் வியந்து ஊராரிடம் கூறினர். பெருமான் குறிப்பிட்ட நாளில் ஊர் முழுவதும் மலர் மழை பெய்திருந்தது. ஊரார் வடிவுடையாள் வீட்டை நோக்கிச் சென்றனர். அங்கே வழிபாட்டில் மூழ்கியிருந்த வடிவுடையாள். கழுத்தில் ஒளிவீசும் தெய்வமாலை ஒன்று விளங்கியது. அனைவரும் அவளைத் தொழுது பல்லக்கில் ஏற்றிப் பசுபதியீசர் திருக்கோயிலுக்கு அழைத்து வந்தனர். கருவறைக்குள் சென்ற வடிவுடையாள் இறைவனோடு இரண்டறக் கலந்தாள். இன்றுவரை பங்குனி உத்திரத்திருவிழாவின் ஆறாம் நாள் ஆனிலையப்பர் அப்பிபாளையம் சென்று ஏழாம் நாள் வடிவுடையாளோடு கருவூர் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருவூர்ப் புராணத்தில் இவ்வரலாறு இடம்பெறவில்லை. அதேபோல கொங்குநாட்டின் பல்வேறு சிறப்புகளை எல்லாம் தொகுத்துரைக்கும் கொங்குமண்டல சதகங்களிலும் இவ்வரலாறு கூறப்பெறவில்லை.

 மூன்றாவது வரலாறு வருமாறு: தென்னகத்தில் அயலவர் படையெடுப்பின்போது பல கோயில்கள் அழிக்கப்பட்டன. அப்போது அலங்காரவல்லியின் சிலை பாதுகாப்புக்காக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்துச் சிலையை நிறுவத் தோண்டிய போது சிலை அகப்படவில்லை. எனவே புதியதாக ஒரு சிலை செய்து பிரதிட்டை செய்தனர். பின்னர்ப் பழைய சிலையும் கிடைக்க அதையும் பிரதிட்டை செய்தனர். எனவே இங்கு இரண்டு அம்மன் சன்னிதிகள் ஏற்பட்டன.

 அலங்காரவல்லிக்கு அலங்காரவதி என்ற திருப்பெயரும் இத்தலபுராணத்தில் கூறப்பெற்றுள்ளது. இவை இரண்டும் வட மொழிப் பெயர்களாகும். அலங்காரம் என்றால் அழகு (வடிவு) என்பது பொருள். வல்லி என்றால் கொடி என்றும் வதி என்றால் உடையவள் என்றும் பொருள். எனவே அலங்காரவல்லியைத் தமிழில் வடிவுடையம்மை வடிவுடையாள், வடிவாள் என்றெல்லாம் கூறுவர். கருவூர்த் தலபுராணத்தில் வடிவுடைநாயகி எனும் பெயரிலேயே இத்தலத்து இறைவியின் வணக்கப் பாடல் பாடப்பெற்றறுள்ளது. (இன்னொரு பாடலில் (பா.எ.31) வடிவாள் என இவ்விறைவி சுட்டப் பெறுகிறாள்) சௌந்தரம் என்ற சொல்லுக்கும் அழகு என்பதே பொருள். எனவே சௌந்தரநாயகி என்ற வடமொழிப் பெயருக்கும் தமிழில் வடிவுடையம்மை, வடிவுடையாள், வடிவாள் எனும் பெயர்களே இணையான பெயர்களாகும். எனவே இங்குள்ள இரண்டு அம்மைகளின் பெயரும் ஒரே பொருளுடையன என்பது விளங்கும். இரண்டு திருமேனிகளில் அருள்காட்சி வழங்கும் இறைவியைத் தொழுது தெற்கே உள்ள இறைவன் கோயிலின் முகப்பு மண்டபத்தை அடைகிறோம். இங்கு வடகிழக்கில் காலவயிரவர் சன்னிதியும் அதன் தென்பால் நவநாயகர்களின் சன்னிதியும் அமைந்துள்ளன. இங்குதான் தாடகைதீர்த்தம் விளங்குகிறது. வலம் வருதலைத் தொடர்ந்து இறைவனது கொடிமரத்தை அடைகிறோம். ஆனிலையப்பரின் அடித்தாமரைகளை மீண்டும் வணங்கி மகிழ்கிறோம். வெளிச்சுற்றில் வலம் வந்தால் தென்கிழக்கில் உள்ள வன்னிமரத்தடியில் நான்முகன் வடக்குநோக்கி வீற்றிருப்பதைக் காணலாம்.

 வெளிச்சுற்றில் தென்மேற்கில் கருவூர்த்தேவர் கோயில் உள்ளது. இது கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் எனும் அமைப்பில் விளங்குகிறது. இங்கு கருவறையில் கருவூர்த் தேவர் உருவத்திருமேனி கொண்டு விளங்குகிறார். இக்கோயில் அருட்பொலிவு மிக்கதாகத் திகழ்கிறது. மேற்குச்சுற்றில் பசுபதி விநாயகர் காட்சி தருகிறார். வடக்குச்சுற்றில் சன்னிதிகள் இல்லை . வலம் வருதலைத் தொடர்ந்தால் கிழக்குச்சுற்றில் உள்ள விளக்குத் தூணை அடையலாம். ஆனிலையப்பர் கோயில் உள்ள மண்டபத் தூண்களில் புராண வரலாற்றை உணர்த்தும் சிற்பங்கள் பல காட்சி தருகின்றன. ஒரு தூணில் நான்காரைச் சக்கரபந்தத்தில் செதுக்கப்பெற்றுள்ள,

'வாமயாமளி யாசிவா

வாசியானிலை வானவா

வானவாபல றாயவா

வாயறாவண யாமவா'

 எனும் சித்திரகவி ஒன்று காட்சி தருகிறது. இத்தூண் திருக்கோயிலின் உட்புறம் செல்லும் நுழைவு வாயிலின் அருகில் உள்ளது.

தல இலக்கியங்கள்

 கருவூர்ப் புராணம் இளையான் கவிராயரால் பாடப் பெற்றுள்ளது. இதில் ஆயிரத்து நூற்று முப்பத்தொரு பாடல்கள் உள்ளன. இது இத்தலத்துக்கு அமைந்த சிறந்த இலக்கியமாகும். பெரிய புராணத்திலும் கருவூரின் பெருமை பேசப்பெற்றுள்ளது. இத்தலத்து முருகனை அருணகிரிநாதர் போற்றிப் பாடிய அழகிய திருப்புகழ்ப் பாடல்கள் ஏழு உள்ளன. திரு.சி.சு.கண்ணாயிரம் அவர்கள் பாடிய கருவூர் ஆநிலை அந்தாதி அற்புதமான பத்திப்பனுவலாகத் திகழ்கிறது. இது எளிமையும் இனிமையும் பொருளாழமும் நிறைந்த நூலாகும்.

‘திருநல்கும் கல்விச்சிறப்பளிக்கும் பீடார்

உருநல்கும் மண்மிசை ஒப்பில் - அருநல்ல

நற்பதங்கள் மேவு நலமருளும் ஆநிலையான்

பொற்பதங்கள் நெஞ்சே புகழ்' முதலிய பாடல்களில் பத்திச்சுவை பொங்குவதைக் காணலாம்.

தல அற்புதம்

 கொங்குநாட்டின் உட்பிரிவுகளாக இருபத்து நான்கு நாடுகள் விளங்குகின்றன. அவற்றுள் பூந்துறை நாடு தலைமையானதாகும். இது கீழ்க்கரைப் பூந்துறை நாடு, மேல்கரைப் பூந்துறை நாடு என இரு பிரிவுகளை உடையது. இவற்றைப் பிரிப்பது இவ்விரண்டுக்கும் இடையில் ஓடும் காவிரியாறு ஆகும். இந்நாடு முதன்மை பெறக் காரணமாக இருந்தது. ஆனிலையப்பர் நிகழ்த்திய ஒரு திருவிளையாடலாகும். ஒருசமயம் மழைவளம் குன்றியது. அதனால் உயிர்கள் துன்புற்றன. மூவேந்தர்களும் கூடி அடுத்து என்ன செய்வது? என்று ஆராய்ந்தனர். சிவபிரான் அருளால் மட்டுமே மழைபெய்யும் என்பதை உணர்ந்தனர். அப்போது எல்லா உயிர்களுக்கும் தலைவராக விளங்கும் ஆனிலைப் பெருமான் வீற்றிருக்கும் கருவூர்த் திருக்கோயில் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. எனவே, அரசர்கள் ஆனிலையப்பர் கோயிலைத் திருப்பணி செய்ய முடிவு செய்தனர். திருப்பணி தொடங்கி விரைவாக நடைபெற்றது. புதியதாகக் கோபுரமும் கட்டினர். திருக்குட நன்னீராட்டுக்கு நாள் குறித்தனர். புதிய கோபுரத்தில் மூவேந்தர்களும் கலசங்களை வைத்தனர்.

 ஆனால், மறுநாள் காலையில் பார்த்தபோது அக்கலசங்கள் கீழே விழுந்து கிடந்தன. மன்னர்களும் மக்களும் அதைக்கண்டு அஞ்சினர். முறைப்படி மீண்டும் கலசங்களைப் பொருத்தி வைத்தனர். அப்போதும் அவை நில்லாமல் கீழே விழுந்து கிடந்தன. மீண்டும் அவற்றை வைத்துப் பாதுகாப்புக்காகப் படைவீரர்களையும் நிறுத்தி வைத்தனர். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. எப்போதும் போல கலசங்கள் கீழே கிடந்தன. அப்போது கொங்கு இருபத்துநான்கு நாட்டை ஆண்டுவந்த கொங்கு வேளாள இனத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்களில் இருபத்து மூவர் மூவேந்தர்கள் முன்னிலையில் ஒருவருக் கொருவர் உயர்வுபேசி, ஒவ்வொருவரும் தாம் வைத்தால் கலசங்கள் நிற்கும் எனத் தற்பெருமை பேசினர். அரசர்கள் கூடிச் சிந்தித்தனர். பின்னர், 'உங்களில் யார் வைக்கும்போது கலசங்கள் நிற்கின்றனவோ அவரது நாடுதான் இருபத்துநான்கு நாடுகளில் முதன்மையான நாடாக அறிவிக்கப்பெறும் அவருக்கே கொங்குநாட்டில் எல்லா நிகழ்ச்சிகளிலும் முதல் மரியாதை வழங்கப்பெறும்' என அறிவித்தனர்.

 இருபத்து மூன்று குறுநில மன்னர்களும் கலசங்கள் வைத்துப் பார்த்தனர். அவை கீழே விழுந்து கொண்டே இருந்தன. இருபத்து நாலாம் நாள் பூந்துறை நாட்டைச் சேர்ந்த காடை குலத்தவனான நன்னன் என்பவன் கலசங்களை வைத்தான். அவை கீழே விழாமல் நின்றன. எல்லோரும் வியந்து நன்னனின் சிவபத்தியைப் பாராட்டினர். சேரசோழ பாண்டியர் தாம் வாக்களித்தபடி இருபத்துநான்கு நாடுகளில் பூந்துறை நாட்டுக்கு முதன்மையும் நன்னனுக்கு முதல் மரியாதையும் வழங்க ஆணை பிறப்பித்தனர். அப்போதே ஆனிலையப்பருக்கு வழிபாடுகள் செய்து நன்னனுக்கு முதலில் திருநீறு வழங்கச் செய்து தமது ஆணையை நிலைநாட்டினர். இந்நன்னனை நன்னாவுடையார் என்றும் கூறுவர்.

'மூவரையர் பசுபதியார்க்கு அன்புகூர்ந்து

முந்திய கோபுரம் கட்டி முடிநில்லாமல்

காவலரும் மற்றவரும் பிடிமண் வைக்கக் கலசம்

நில்லாது இந்நாட்டைக் கருதித்தேடி

ஆவலுடன் இவர்கையால் கலசம் வைக்க

அதுநிற்க மூவர் முடி அன்பாய்ச் சூட்டிப்

பூவுலகில் கொங்கில் இருபத்துநாலில் பூந்துறை

நாடு அதிகமெனப் புகன்றிட்டாரே'

 என்னும் பூந்துறைப் புராணப் பாடலும் இவ்வரலாற்றை எடுத்துரைக்கிறது.

பின்னர் ஆனிலை அடிகள் அருளால் மழை பெய்து உலகம் செழித்தது. இவ்வாறு எத்தனையோ திருவிளையாடல்கள் கருவூர்க் கண்ணுதற் பெருமான் அருளால் இத்தலத்தில் நடைபெற்றுள்ளன. தன்னைச் சரணடைந்த அன்பர்களைக் காப்பதையே தொழிலாகக் கொண்டு ஆனிலையப்பர் இங்கு அருளாட்சி புரிந்து வருகிறார்.

 இங்கு நாள் வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. பிரதோசம், ஒன்பான் இரவு, கார்த்திகை விளக்கீடு, மார்க்கழித் திருவாதிரை, சிவனிரவு முதலில் சிறப்பு நாட்களில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் முன்னிலையில் விரிவான சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இங்கு பங்குனி உத்திரத்தை மையமாகக் கொண்டு பெருந்திருவிழா தேரோட்டத்தோடு இரண்டுவார காலம் நடைபெறுகிறது. அன்பர் பெருமக்கள் வாழ்வில் ஒருமுறையேனும் ஆனிலையில் விளங்கும் அருட்கடலில் மூழ்கி இன்புற வேண்டுகிறோம்.

bottom of page