top of page

விகிர்தேசுவரர் திருக்கோயில்,
வெஞ்சமாங்கூடலூர்

சுந்தரர் தேவாரப்பதிகம் பெற்ற கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்று வெஞ்சமாக்கூடல். இது இன்று வெஞ்சமாங்கூடலூர் என்றும் கோயிலூர் என்றும் மக்களால் அழைக்கப் பெறுகிறது. கரூரிலிருந்து இருபத்திரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. கரூரிலிருந்து சில பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன. இது கொங்குநாட்டு உட்பிரிவுகளுள் ஒன்றான வெங்கால நாட்டைச் சேர்ந்ததாகும். இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் விகிர்தேசுவரர் என்றும் இறைவி விகிர்தேசுவரி என்றும் திருப்பெயர்கள் கொண்டுள்ளனர். சுந்தரர் தேவாரத்திலும் இத்தலத்து இறைவன் விகிர்தன் என்றே ஒவ்வொரு பாடலிலும் போற்றப் பெறுகிறார். விகிர்தன் என்ற சொல்லுக்குக் கடவுள் என்பது பொருள். எனவே கடவுளாக விளங்கும் ஈசுவரன், ஈசுவரி என்பதே இப்பெயர்களுக்குப் பொருளாகும். ஈசுவரன், ஈசுவரி என்ற வடசொற்களுக்குத் தமிழில் செல்வன், செல்வி என்பன இணையான சொற்களாகும். இங்குள்ள இறைவிக்குப் பண்ணேர் மொழியாள் (வடமொழியில் மதுரசுபாசினி) என்ற பெயரும் உண்டு. விகிர்தேசுவரரை விகிர்தநாதர், விகிர்தநாதேசுவரர் என்றும் விகிர்தேசுவரியை விகிர்தநாயகி என்றும் கூறுவதுண்டு. பண்ணேர் மொழியாள் என்னும் பெயர் சுந்தரர் தேவாரத்தில் இடம்பெற்றுள்ள பெயராகும். இது கல்வெட்டிலும் 'தம்பிராட்டியார் பண்ணேர் மொழியார்' என்று சுட்டப்பெற்றுள்ளது. கல்வெட்டில் இறைவன் பெயர் திருவெஞ்சமாக்கூடல் நாயனார், வெஞ்சமாக்கூடல் ஆளுடையார், திருவெஞ்சமாக்கூடல் ஆளுடைய நாயனார், திருவெஞ்சமாக் கூடல் ஆளுடைய விகிர்தர், திருவெஞ்சமாக்கூடல் ஆளுடைய தேவர், திருவெஞ்சமாக்கூடல் உடையார் என்றெல்லாம் குறிப்பிடப் பெற்றுள்ளது. தற்காலத்தில் இங்குள்ள இறைவன் கல்யாண விகிர்தேசுவரர் என்றும் இறைவி கல்யாண விகிர்தேசுவரி என்றும் அழைக்கப் பெறுகின்றனர்.

பழைய வரலாறுகள்

 இத்தலம் சிற்றாறு எனச் சுந்தரர் தேவாரம் குறிப்பிடும் ஆற்றின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது. தற்போது இவ்வாறு குடகனாறு, குடவனாறு, குழகனாறு என்றெல்லாம் கூறப்பெறுகிறது. இது வடக்கு நோக்கி ஓடுகிறது. சிறிது தொலைவு சென்று ஆன்பொருநை எனப்படும் அமராவதியாற்றில் கலந்து விடுகிறது. சிற்றாற்றில் மழைக்காலத்தில் நல்ல தண்ணீர் வரத்து இருக்கும். இவ்வாறு இத்தலத்துக்குரிய தீர்த்தமாகவும் விளங்குகிறது. வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் முன்பு இப்பகுதியில் ஆட்சி செய்துள்ளான். அம்மன்னன் இத்தலத்து இறைவன்மீது மிகுந்த அன்புடையவன். இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தவன். வெஞ்சமன் திறை செலுத்த மறுத்த காரணத்தால் அக்காலத்தில் கருவூரிலிருந்த சோழமன்னன் ஒருவன் படையெடுத்து வந்தான். இவ்வூரைச் சுற்றி மிகவும் ஆழமாக அகழிவெட்டப்பட்டிருந்ததால் சோழனால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. முற்றுகை பலகாலம் நீடித்தது. இறுதியில் அகழிக்கு நீர்வரும் வாய்க்காலும் தண்ணீர் வெளியேறும் வடிகாலும் உள்ள மறைவிடங்களைச் சோழன் ஒற்றர் மூலம் கண்டறிந்தான். நீர்வரும் வழியை அடைத்து அகழிநீரை வடிகால் வழியாக வெளியேற்றினான். முற்றுகை முடிவுக்கு வந்தது. சோழனின் பெரும்படையோடு தீரத்தோடு போரிட்டாலும் வெஞ்சமனால் வெற்றிபெற முடியவில்லை. களத்தில் வீரமரணம் அடைந்தான்.

 வெஞ்சமனின் வீரத்தைப் போற்றும் வகையில் சோழன் அவனுக்கு ஒரு கற்சிலை வைத்தான். அது சிற்றாற்றின் கரையில் வடமேற்கில் உள்ளது. ஊரார் இன்றும் அம்மன்னனுக்கு ஆண்டுக்கொருநாள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். வெஞ்சமாக்கூடலூர் என்பது இம்மன்னன் பெயராலும் சிற்றாறு அமராவதியோடு கூடுமிடம் (கூடல்) இதற்கு அருகில் இருப்பதாலும் ஏற்பட்ட பெயராகும். 'வரிசையினிறுத்த வாய்மொழி வஞ்சன், நகைவர் குறுகினல்லது பகைவர்க்குப், புலியினம் மடிந்த கல்லளை போலத், துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்....' எனப் புறநானூற்றில் திருத்தாமனாரால் பாடப்பெற்ற சேரமான் வஞ்சன் என்பவன் பெயரால் இவ்வூர் ஏற்பட்டதாகவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். வஞ்சமன் கூடலே இவர்தம் கருத்துப்படி வெஞ்சமாக் கூடல் ஆனது. இத்தலத்தைத் திருஞானசம்பந்தரும் பணிந்ததைப் பெரிய புராணம்,

'பருவம் அறாப்பொன்னிப் பாண்டிக் கொடுமுடியார் தம்பாதம்

மருவி வணங்கி வளத்தமிழ்மாலை மகிழ்ந்து சாத்தி

விரிசுடர் மாளிகை வெஞ்சமாக் கூடல் விடையவர்தம்

பொருவில் தானம்பலபோற்றிக் குணதிசைப் போதுகின்றார்'

                                                                                                                                  (பா.எ.2241)

 என்று எடுத்துரைக்கிறது. அப்பர் பெருமானும் தாம் பாடிய சேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் இத்தலத்தை,

‘உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்

உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்

மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்

வீரட்டம் மாதானம் கேதாரத்தும்

வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா

வேதீச்சுரம் விவீசுரம் வெற்றியூரும்

கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்

கயிலாய நாதனையே காணலாமே'

 எனும் பாடலில் குறிப்பிட்டுப் போற்றுகிறார். எனவே தேவார மூவரும் போற்றிய திருப்பதியாகத் திருவெஞ்சமாக்கூடல் திகழ்கிறது.

 சுந்தரர் காலத்தில் வளமான பெரிய ஊராக இயற்கை எழில் கொஞ்சும் ஊராக இருந்த வெஞ்சமாக்கூடல் இன்று ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கிறது. சுந்தரர் தம் பதிகத்தில் காட்டும் இயற்கைக் காட்சிகளை இன்று காணமுடியாது.

புராண வரலாறு

 வெஞ்சமாக்கூடலில் கந்தரர் காலத்தில் மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். விகிர்தேசர் மேல் அளவற்ற பத்தி கொண்டவராக அவர் விளங்கினார். அவரது அன்பை உலகிற்குப் புலப்படுத்த இறைவர் திருவுள்ளம் கொண்டார். மூத்தபிள்ளையாரையும் முருகப்பெருமானையும் சிறுவர்களாக மாற்றித் தாமும் ஒரு வயது முதிர்ந்த அந்தணர் கோலம் கொண்டு அம்மூதாட்டியிடம் சென்றார். தம்பிள்ளைகளை அடகாக வைத்துக்கொண்டு பொன்தர வேண்டுமென்று கேட்டார். அவ்வன்னையும் பிள்ளைகளை ஏற்றுக்கொண்டு இறைவருக்கு வேண்டிய பொன்னை அளித்தார். இப்பொன்னையே தம்முன் பதிகம் பாடிய சுந்தரருக்கு இறைவர் வழங்கினார். மூதாட்டியின் பத்திக்கு ஈடாகத் தம் பிள்ளைகளையே அவருக்குக் கொடுத்த இறைவர் அதன்மூலம் மற்றொரு உண்மையையும் உலகிற்கு உணர்த்தினார். அதாவது, 'சுந்தரரது தமிழ்ப்பாடல்கள் மிக உயர்ந்தவை. அவற்றுக்காகத் தாம் எதையும் செய்வோம்' என்பதே அது. இவ்வாறு அடியவரின் அன்பையும் அருந்தமிழின் மேன்மையையும் சிவபிரான் ஒருசேர உலகிற்குக் காட்டியருளினார். இவ்வரலாறு பெரிய புராணத்தில் கூறப்படவில்லை. ஆனால் வெஞ்சமாக்கூடல் புராணத்தில் இடம்பெற்றுள்ளது.

'கொள்ளை வண்டு இமிரும் நாட்பூங்கோதையோர் பாகர்முன்பு

கள்ளமில் உள்ளத்து அன்பு கனிந்துள கிழவியார்பால்

பிள்ளைகள் ஈடுகாட்டிப் பெற்ற செம்பொன்னை எல்லாம்

தெள்ளிய தமிழ்ப்பா சொன்ன திருத்தொண்டர்க்கு உவந்து அளித்தார்'

 என இப்புராணம் இவ்வரலாற்றை எடுத்துரைக்கிறது. இதைக் கார்மேகக் கவிஞர் பாடிய கொங்குமண்டல சதகமும்,

'கிழவேதிய வடிவாகி விருத்தையைக் கிட்டியென்றன்

அழகாரும் மக்கள் அடகுகொண்டு அம்பொன் அருளுதிஎன்று ஏற்று

எழுகாதலால் தமிழ் பாடிய சுந்தரர்க்கு ஈந்த ஒரு

மழுவேந்திய விகிர்தேசுவரன் வாழ்கொங்கு மண்டலமே'                   (பா.எ.10)

 எனும் பாடலில் குறிப்பிட்டுப் போற்றுகின்றது. வெஞ்சமாக் கூடலுக்குத் திருச்செங்கோடு தி.அ.முத்துசாமிக் கோனார் அவர்கள் தலபுராணம் பாடியுள்ளார். அதேபோல கோவை சி.சு.கண்ணாயிரம் அவர்களும் இத்தலத்திற்கு ஒரு தலபுராணம் பாடியுள்ளார்.

 வெஞ்சமாக்கூடலூரில் பொன்பரப்பியம்மன் என்னும் பெயர் கொண்ட அம்மன் கோயில் ஒன்றுள்ளது. அம்பிகையே பொன்பரப்பி அம்மனாக வீற்றிருக்கிறாள் என்றும் இந்த அம்மனிடம்தான் விகிர்தநாதர் தம்பிள்ளைகளை அடகுவைத்துப் பொன்பெற்று நம்பியாரூரருக்கு அளித்தார் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்திரன் கௌதம முனிவரின் மனைவியான அகலியைக் கண்டு ஆசை கொண்டான். ஒருநாள் பின்னிரவில் சேவல் போலக் கூவினான். அதனால் விழித்துக்கொண்ட கௌதமர் காலைக் கடன்களை முடிக்க ஆற்றுக்குச் சென்றார். அந்த நேரத்தில் இந்திரன் அகலிகையை வஞ்சகமாகக் கூடி மகிழ்ந்தான். நீராடச் சென்ற முனிவர் உண்மையை அறிந்து அகலிகையைக் கல்லாகப் போகும்படி சபித்தார். இந்திரனுக்கு உடலெங்கும் ஆயிரம் கண்கள் ஏற்படச்சாபமிட்டார். அந்தப் பாவமும் சாபமும் நீங்க இந்திரன் வெஞ்சமாக்கூடல் வந்து வழிபட்டான். அதனால் நலம் பெற்றான் என்று இத்தலவரலாறு கூறுகிறது. அகலிகையின் சாபம் இராமனால் நீங்கியதை அனைவரும் அறிவர். வெஞ்சன் எனும் அசுரன், அகத்தியர், கலைமகள், அம்பிகை முதலியோர் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். தலத்தின் பெருமைகளைக் கண்ட நாம் இனித் திருக்கோயில் வழிபாட்டைத் தொடங்கலாம்.

கோயில் அமைப்பு

 விகிர்தேசுவரர் திருக்கோயில் சாலையிலிருந்து சற்றுத் தாழ்வான இடத்தில் உள்ளது. கோயிலை அடுத்துள்ள ஊர்ப்பகுதி மண்மூடி மேடாகிவிட்டதால் இந்நிலை. கோயிலுக்குப் பின்னால் சிற்றாறு ஓடுகிறது. இக்கோயில் கிழக்குப் பார்த்த அமைப்புடையது. நாற்புறமும் திருமதில் கட்டப்பெற்றுள்ளது. முன்புறம் ஐந்துநிலை இராசகோபுரம் விளங்குகிறது. கோபுரத்துக்கு முன்னால் விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. இதன் கீழ்ப்பகுதியில் உள்ள சதுரமான அமைப்பில் கிழக்கில் காமதேனு சிவலிங்கத்துக்குப் பால் பொழியும் காட்சி செதுக்கப் பெற்றுள்ளது. தெற்கில் மூத்தபிள்ளையாரும் மேற்கில் நந்தியும் வடக்கில் முருகனும் காட்சி தருகின்றனர். கோபுரவாயிலின் தென்பால் விநாயகப்பெருமானும் வடபால் முருகப்பெருமானும் கோயில் கொண்டுள்ளனர். கோபுரவாயிலைக் கடந்தால் படிகள்வழியாகக் கீழே இறங்கிக் கோயில் வளாகத்தை அடையலாம். கீழே படிகளின் இருபுறமும் கதிரவனும் சந்திரனும் காட்சியளிக்கின்றனர்.

 அடுத்துக் கொடிமரமும் நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. நந்தியெம் பெருமானை வணங்கிக்கொண்டு சென்றால் தென்வடலாக நீளமாகக் கட்டப்பெற்றுள்ள வெளிமண்டபத்தை அடையலாம். இதன் வடகோடியில்தெற்கு நோக்கிய நிலையில் ஆடல்வல்லான் சிவகாமியம்மையோடு அருட்காட்சி தரும் கோயில் விளங்குகிறது. விகிர்தநாதர் கோயிலும் அதன் இடப்புறம் அமைந்துள்ள இறைவி கோயிலும் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்னும் அமைப்பில் விளங்குகின்றன. இவ்விரண்டு கோயில்களின் மகாமண்டபங்களும் வெளிமண்டபத்தோடு இணைக்கப் பெற்றுள்ளன. எனவே வெளிமண்டபம் இருகோயில்களுக்கும் பொதுவானதாக அமைந்துள்ளது.

 இறைவர் கோயில் மகாமண்டபத்தில் விநாயகரும் நந்தியும் வீற்றிருக்கின்றனர். அர்த்தமண்டப வாயிலின் இருபுறமும் வாயிற் காவலர்கள் காட்சி தருகின்றனர். கருவறையில் வட்ட ஆவுடையாரோடு விளங்கும் அழகிய இலிங்கத் திருமேனியில் விகிர்தேசுவரர் அருட்காட்சி அளிக்கிறார். அன்பர்களை அன்பால் ஆட்கொண்டு அருள்புரியும் ஐயனை,

'துளைவெண் குழையும் சுருள்வெண் தோடும்

தூங்கும் காதில் துளங்கும் படியாய்

களையே கமழும் மலர்க்கொன்றையினாய்

கலந்தார்க்கு அருள் செய்திடுங்கற்பகமே

பிளைவெண்பிறையாய் பிறங்குஞ்சடையாய்

பிறவாதவனே பெறுதற்கு அரியாய்

வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல்

விகிர்தா அடியேனையும் வேண்டுதியே'

 என்று சுந்தரர் பாடிப் பரவி வேண்டியதைப் போலவே நாமும் வேண்டி நிற்கிறோம். பெருமானைப் பிரிய மனமின்றி வெளியே வருகிறோம். வலம்வரத் தொடங்கினால் தென்பால் நால்வர், பொல்லாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், அறுபத்து மூவர் ஆகியோர் எழுந்தருளியிருப்பதைக் கண்டு போற்றலாம்.

 தென்மேற்கில் விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். இறைவனது தேவகோட்டங்களில் மூத்தபிள்ளையார், தென்முகக் கடவுள், அண்ணாமலையார், நான்முகன், கொற்றவை ஆகியோர் காட்சியளிக் கின்றனர். கருவறையின் வடபால் சண்டீசர் வீற்றுள்ளார். மேற்குச் சுற்றில் ஐந்து பெரிய இலிங்கத்திருமேனிகள் விளங்குகின்றன. மேற்குச்சுற்றின் நடுவில் ஆறுமுகப்பெருமான் கோயில் அமைந்துள்ளது. இது கருவறையும் அர்த்தமண்டபமும் மட்டும் அமைந்த கோயிலாகும். அர்த்தமண்டபத்தில் அருணகிரிநாதர் காட்சி தருகிறார். கருவறையில் வள்ளி, தெய்வயானையுடன் அறுமுகச்செவ்வேள் பன்னிரு திருக்கை களுடன் திருக்காட்சியளிக்கிறார். இப்பெருமான் மயில்மீது அமர்ந்த நிலையில் விளங்குகிறார். இச்செந்தமிழ்க்கடவுளை,

‘வண்டுபோற் சாரத்                           தருள்தேடி

மந்திபோற்காலப்                  பிணிசாடிச்

செண்டு போற் பாசத்                      துடனாடிச்

சிந்தை மாய்த்தேசித்        தருள்வாயே

தொண்டராற் காணப்                      பெறுவோனே

துங்கவேற் கானத்              துறைவோனே

மிண்டராற்காணக்                              கிடையானே

வெஞ்சமாக் கூடற்              பெருமாளே'

 என்று அருணகிரிநாதர் போற்றிப் பரவுகின்றார். நாமும் திருப்புகழ் பாடி தேவர்சிறை மீட்ட பெருமாளை வணங்குகிறோம். வடக்குச் சுற்றின் கீழ்ப்பால் நவகோள்கள், சனி ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. அடுத்து வயிரவப்பெருமான் சன்னிதி விளங்குகிறது.

 இறைவிகோயில் மகாமண்டபத்திலும் நந்திதேவர் வீற்றிருக்கிறார். இங்கு பள்ளியறை உள்ளது. அர்த்தமண்டப வாயிலின் இருபுறமும் வாயிற்காவல் தேவியர் காட்சி தருகின்றனர். கருவறையில் பண்ணேர் மொழியம்மை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி வழங்குகிறார். இவருக்கு நான்கு திருக்கைகள் உள்ளன. மேல் வலக்கையில் தாமரை மலரும் மேல் இடக்கையில் கருங்குவளை மலரும் விளங்குகின்றன. கீழ்க்கைகள் அபயவரதமாகத் திகழ்கின்றன. திருவாசியும் திருமேனியோடு சேர்த்துக் கல்லிலேயே உருவாக்கப் பெற்றுள்ளது. அருளொழுகும் திருமுகம் கொண்ட அன்னையின் திருவடித் தாமரைகளைப் போற்றி மகிழ்கிறோம். இறைவியை வணங்கிவிட்டுத் தெற்கே வந்தால் இறைவன் திருமுன்பை அடையலாம்.

  இங்கு நாள் வழிபாடுகளும் பிரதோசம், ஒன்பான் இரவு, கார்த்திகை விளக்கீடு, சிவனிரவு முதலிய சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. மாசித்திங்களில் பெருந்திருவிழா தேரோட்டத்தோடு நடைபெறுகிறது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு விரிவான சிறப்பு வழிபாடு செய்யப் பெறுகிறது. அன்பர்கள் வெஞ்சமாக்கூடல் சென்று விகிர்தேசுவரர் திருவடிகளை வணங்கி விரும்பிய வரங்களைப் பெற்று மகிழ வேண்டுகிறோம்.

bottom of page