
சித்திரத் தேர்
அருள்மிகு தண்டபாணிக் கடவுள் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானின் திருவடிகளுக்குச் சமர்ப்பிக்க சிறிய சித்திரத்தேர் உருவாக்க வேண்டும் என சுவாமிகள் எண்ணம் கொண்டார். அதன் காரணமாக சித்திரத்தேர் பல அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
திருப்பதி கோவில் தேரை உருவாக்கிய காஞ்சிபுரம் ஸ்தபதி.ஆர். கோவிந்தராஜ் தலைமையில் சுமார் 20 கைதேர்ந்த சிற்பக் கலைஞர்களால் 7 மாதகாலத்தில் இரவு பகல் இடையறாது உழைப்பினால் இச்சிறப்புத்தேர் உருவம் பெற்றது.
தேரின் தனிச்சிறப்பு
பொதுவாக எல்லா தேர்களிலும் ஐந்து பூதப்பார் தான் இருக்கும் தேரின் அடிப்பகுதியில் தாங்கக்கூடிய குறுக்குக் கட்டைகள் ஒவ்வொன்றுக்கும் ''பூதப்பார்” என்று பெயர். ஆனால் இத்தேரில் ஆறு பூதப்பார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தனிச்சிறப்பு மேலும் 12 கோணத்தில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது.
தேரின் அடிப்பாகத்தைப் பூதங்களும் அதற்கு மேலாக கூர்மம் (ஆமை) தாங்குவதாகவும். அதற்கு மேலாக பூமாதேவியும், அதற்கு மேலாக ஆதிசேஷனும் தாங்குவதாகச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிக்குமேல் உள்ள பகுதி ''சித்தூர் மட்டம” என்பதாகும். இப்பகுதியில் முருகக்கடவுளின் "பாலரூப” சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன.
வடிவங்கள்
சிவபெருமான் நெற்றிக்கண் திறந்து ஆறு குழந்தைகளை உண்டாக்கும் காட்சியும், அம்மன் ஆறு குழந்தைகளையும் ஒன்றுசேர்க்கும் காட்சியும், தம்பதி சமேதராய் சிவன் - பார்வதி காளை வாகனத்தில் குழந்தையை எடுப்பதற்காக செல்லும் காட்சியும், நாரதரின் வேள்வியில் தோன்றிய ஆட்டை வீரபாகு சிறைப்பிடித்தல், முரட்டு ஆட்டை அடக்கி வாகனமாக்கிய முருகன் வீரபாகு நாரதருடன் தோன்றும் காட்சி, கைலாயத்தில் பாலமுருகனை பிரம்மன் மதிக்காமல் சென்ற காட்சி, பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை சிறை வைத்தல் பிரணவ மந்திரத்தின் பொருளை சிவபெருமானுக்கு ஓதுதல் மயிலை அன்புடன் அணைத்து மயூரப்பிரியராக முருகன் காட்சி தருதல்.
மூன்று முகம் ஆறு கைகளுடன் முருகன் கார்த்திகேயராகத் தோன்றுதல், மாம்பழத்திற்காக உலகை மயில் மீது சுற்றி வலம் வருதல். பழத்தை விநாயகப் பெருமான் பெறுதல், இறுதியில் முருகன் பழனியில் ஆண்டியாய் நிற்றல், யானையுடன் கூடி "கஜாரூடர்" என்ற பெயருடன் முருகன் காட்சி தருவது ஆகிய காட்சிகள் தத்ரூபமாக சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
போர்க்கோல சிற்பங்கள்
இச்சித்தூர் மட்டத்திற்கு மேல் உள்ள பகுதி "பேரூர் மட்டம்'' என்பதாகும்.
இப்பகுதியில் கடவுள்களின் போர்க்கோலச் சிற்பங்கள் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
பேரூர் மட்டத்தின் முன் பகுதியில் சிவன், முருகன், விநாயகர், அம்பிகை, திருமால், சூரியன் சிற்பங்களும் முருகன் கிரவுஞ்சமலை மீது வேல் ஏவும் காட்சி தாரகாசுரனை அழிக்கும் காட்சி, சூரபத்மனுடன் தர்பார் காட்சி, பானுகோபன் வீரபாகு போர்க்கோலம், சிங்கமுகன் முருகன் போர்க் காட்சி, சூரபத்மனுடன் முருகன் போர், மாமரமாய் மாறி நின்ற சூரபதுமன் மேல் வேல் ஏவும் காட்சி, மாமரம் பிளந்து அது சேவலாகவும், கொடியாகவும் மாறிய காட்சி, சிவபெருமான் யானை உரி போர்த்த மூர்த்தியாய் நின்ற காட்சி, சிவன் எமனை எட்டி உதைத்த காட்சி, ராமன் ராவணன் போர்க்கோலம், கம்சன் கண்ணன் போர், கண்ணன் மோகினி உருவில் பத்மாசுரனை வஞ்சம் தீர்த்த காட்சி, துர்க்கை மகிஷாசுரன் போர்க் காட்சி போன்ற போர்க்கோலச் சிற்பங்கள் காண்போரைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன.
இதயப்பகுதி
இதற்கு அடுத்த பகுதி தேரின் நடுவில் அமைந்த இதயப்பகுதி என்றும் துடிப்புள்ளது என்பதால் இப்பகுதியில் அமைந்த எல்லா சிற்பங்களும் நடனம் ஆடுவது போன்ற தோற்றம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளன.
நராசனம்
இவ்விதயப் பகுதிக்கு மேல் அமைந்துள்ளது "நராசனம்" என்ற பகுதி. இதில் முருகனைப் போற்றிப் புகழ்ந்த அடியார்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்பகுதியில் அகத்தியர், நக்கீரர், அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள், இராமானந்த சுவாமிகள், கந்தசாமி சுவாமிகள் ஆகியோரின் சிற்பங்களும் இதையடுத்து குமரகுருபரர், சிதம்பரம் சுவாமிகள், சிவப்பிரகாசர், சிவஞான பாலைய சுவாமிகள், வள்ளலார், பாம்பன் சுவாமி போன்ற அடியார்களும், அடுத்து சைவ அடியார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்பர், திலகவதியார் ஆகியோரும், அடுத்து வைணவ அடியார்களான பெரியாழ்வார், இராமானுஜர், திருமங்கையாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மத்வாச்சாரியார் ஆகியோரும், அடுத்து தத்துவ ஆசிரியர்களான மெய்கண்ட தேவர் அருணந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம், சாந்தலிங்க சுவாமிகள், திருவள்ளுவர் ஆகியோரும், அடுத்த முருகனடியார்கள் ஆதிசங்கரர், போகர், பாம்பாட்டி சித்தர், செந்தில் நாயக சுவாமி, சுந்தரத்தம்மையார், முருகானந்த சுவாமிகள் ஆகியோரும், அடுத்து கௌமார அடியார்கள் பேரூர் சுந்தர சுவாமிகள், சபாபதி சுவாமிகள், பாப்பநாயக்கன் பாளையம் சுவாமிகள், ராசு சுவாமிகள், தாயம்மாள், முருகதாஸ் ஸ்வாமிகள் ஆகியோரும் அடுத்து கிருபானந்தவாரியார் சுவாமிகள், குமாரசாமி சுவாமிகள், சாந்தலிங்க ராமசாமி அடிகளார், ராமகிருஷ்ணன் சுவாமிகள், தம்பி சுவாமிகள் ஆகியோரும் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கின்றன.
தேவாசனம்
இப்பகுதிக்கு மேல் உள்ள பாகம் பூசை செய்வோருக்குரியது. இதற்கு தேவாசனம் என்று பெயர். இத்தேவாசனப் பகுதியில் இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈஸானன் முதலியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக முருகப்பெருமான் அமர சந்தன மரத்தாலான நவரத்தின சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சுந்தர சுவாமிகள், இராமானந்த சுவாமிகள், கந்தசாமி சுவாமிகள் உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அஷ்டலட்சுமிகளின் திருவுருவங்களும் இதில் செதுக்கப் பட்டுள்ளன.
மகுடங்கள்
இச்சிம்மாசனப் பகுதிக்கு மேல் முழுவதும் மரத்தாலான மூன்று மகுடங்கள் தேரை அலங்கரிக்கின்றன. சுமார் லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு நெடி துயர்ந்து இத்தேர் 29 அடி உயரமும் 30 டன் எடையும் 500-க்கும் மேற்பட்ட சிற்பங்களும் கொண்டதாகும்.
மேலும் இதில் ஒவ்வொரு சிற்பத்திற்கும் ஒரு கோவில் போன்ற அமைப்புடன் செதுக்கியதோடல்லாமல் ஒவ்வொரு சிற்பத்தின் கால் நகங்கள் கூட சரியாகத் தெரிகின்ற அளவுக்கு மிக நுட்பமாகச் செதுக்கி இருப்பது இதை உருவாக்கிய சிற்பக் கலைஞர்களின் தனிச்சிறப்பை எடுத்தியம்ப வல்லன என்று கூறினால் அது மிகையாகாது.