
கஜபூஜை
சிரவையாதீனத்தில் 1987ஆம் ஆண்டு சுவாமிகள் நிகழ்த்திய உலகப் பெருவேள்வியாகிய கஜபூசை தனிக்காவியம் பாடிப் பாராட்டப்பட வேண்டியதொரு மாபெரும் சமயசாதனை.
ஞானத்தின் சின்னம் யானை. ஓங்காரமாகிய பிரணவத்தின் வடிவம் யானை, இத்தகைய சிறப்புமிக்க யானைக்குச் சிறப்பு சேர்க்க கௌமார மடாலயத்தில் அட்சய ஆண்டு பங்குனித் திங்கள் 11, 12, 13, (1987 மார்ச் 25, 26, 27) ஆகிய தேதிகளில் 108 ஆண் யானைகளை வைத்து உலகப் பெரு வேள்வி நடைபெற்றது.
மிகப்பெரியப் பந்தலில் 108 ஆண் யானைகளை நிறுத்தி 108 கலசங்களில் விநாயகரை ஆவாகணம் செய்து 108 வேள்வி குண்டங்கள் அமைத்து உலகில் அமைதி ஏற்படும் தமிழ் ஆண்டுகளில் இறுதியான அட்சய ஆண்டு முடிந்து, மீண்டும் பிரபவ ஆண்டு தொடங்குவதை ஒட்டியும் வளம் பெருகவும் ஏற்பாடு செய்யப்பெற்றன.
11ஏக்கர் நிலப்பரப்பில் நீள் வட்ட வடிவில் யானைகள் நிற்பதற்காக பந்தல் போடப்பட்டு வேலிகள் அமைக்கப் பெற்றன. நடுவில் மிகப் பெரிய பந்தல் போடப்பட்டு சித்தி மகோற்கட விநாயகர், தண்டபாணிக் கடவுள், அவிநாசியப்பர், கருணாம்பிகை, பாண்டுரங்கர், சூரியன் முதலான மூர்த்திகளும், தவத்திரு இராமானந்த சுவாமிகள், தவத்திரு கந்தசாமி சுவாமிகள் ஆகிய திருமேனிகளும் வேள்விக் குண்டத்தின் அருகில் எழுந்தருளச் செய்யப்பெற்றன.
73 யானைகள் சர்வ அலங்காரத் துடன் அணிவகுத்து ஒரே வரிசையில் நிறுத்தி வைத்து பூர விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து வணங்கி தங்கள் பிறவியின் பயனை அடைந்தனர்.
இதன் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களை ஒட்டியே இந்த வரலாற்று நூலின் நான்காம் பதிப்பு வெளியிடப்பட்டது.