top of page
அறுவகைச் சமயம் அன்றும் இன்றும்

 இப்பொழுது அறுவகைச் சமயங்கள் என்று சூரியன், சிவபெருமான், பராசக்தி, திருமால், விநாயகர், முருகப் பெருமான் என்னும் கடவுளர்களுள் ஒருவரை முதன்மையாகக் கொண்டு வழிபடுவதும், முறையே சௌரம், சைவம், சாக்தம், வைணவம், காணாபத்தியம், கௌமாரம் என வழங்கப்படுவதும் ஆகிய ஆறுதான் பரவலாகப் பேசப்படுகின்றன. இவை வழிபாட்டுச் சமயங்கள்;  மெய்யியற் கோட்பாடுகள் அல்ல. யார் எந்தக் கடவுளை வழிபடுகிறார் என்னும் அடிப்படையில் அமைந்தவை. இந்த அறுசமய நெறியை வகுத்தவர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஆதி சங்கராசாரியார் எனக் கூறப்படுகிறது.
ஆனால் பழங்காலத்தில் சமயம் என்னும் சொல் தத்துவக்கோட்பாடு என்னும் பொருளில்தான் வழங்கிவந்தது; தரிசனம் என்பது இதன் மற்றொரு பரியாயப்பெயர். தத்துவம் என்னும் சொல்லுக்கு உண்மையாம் தன்மை (தத்+த்வம்) என்பது பொருள். இது பற்றியே இச்சொல் தமிழில் மெய்யியல் (மெய் + இயல்) என வழங்கப்படுகிறது. உலகம், உயிர், கடவுள் ஆகியவற்றின் உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியே தத்துவவாதம் ஆகும். இவ்வாறு ஆராய்ந்து ஓர் ஆசிரியர் கண்ட முடிவு தரிசனம் அல்லது காட்சி எனப்படும். இவ்வகையில் முற்காலத்தில் சமயம் என்னும் சொல் தத்துவக் கோட்பாட்டைக் குறிப்பதாக இருந்தது.
இந்தச் சமயங்களை எப்போதும் ஆறாகக் கூறுவது தொன்றுதொட்ட ஒரு மரபாக உள்ளது. முதன்முதலாகத் தம் மணிமேகலையில்தான்,
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் 
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் 
மீமாம்சம் ஆம் சமயம்சு        (மணிமேகலை 27:78-30)
என அறு சமயங்களைப் பற்றிய குறிப்பைக் காண்கிறோம். பிறகு பல நூல்களில் இவை இவ்வாறாகவும் சிலசில வேறுபாடுகளுடனும் கூறப்பட்டுள்ளன. சைவ சித்தாந்தத்தில் புறப்புறச் சமயம், புறச்சமயம், அகப்புறச் சமயம், அகச்சமயம் என நான்கு கூறுகள் ஆக்கி, ஒவ்வொரு கூறிலும் ஆறு ஆறு ஆக மொத்தம் இருபத்து நான்கு சமயங்கள் கூறப்படுகின்றன. இவையாவும் மெய்யியற் கோட்பாடுகள் பற்றி அமைந்தனவே. இவற்றை விரிக்காமல் பெயர்களை மட்டும் கண்டு அமைவோம்.
1. புறப்புறச் சமயங்கள்
அ. உலகாயதம் (பொருள் முதல்வாதம்) 
ஆ. சௌத்திராந்திக பௌத்தம் 
இ. வைபாடிக பௌத்தம் 
ஈ. யோகாசார பௌத்தம் 
உ. மாத்தியமிக பௌத்தம் 
ஊ. ஆருகதம் (சமணம்)
2. புறச் சமயங்கள்
அ. தருக்கம் (வைசேடிகம், நையாயிகம் என இருபிரிவு) 
ஆ. மீமாஞ்சை  
இ. ஏகான்மவாதம் 
ஈ. சாங்கியம் 
உ. யோகம் 
ஊ. பாஞ்சராத்திரம் (வைணவம்)
3. அகப்புறச் சமயங்கள்
அ. பாசுபதம் 
ஆ. மாவிரதம் 
இ. காபாலம் 
ஈ. வாமம் 
உ. வையிரவம் 
ஊ. ஐக்கிய வாத சைவம்
4. அகச் சமயங்கள்
அ. பாடாணவாத சைவம் 
ஆ. பேதவாத சைவம் 
இ. சிவசமவாத சைவம் 
ஈ. சிவசங்கிராந்தவாத சைவம்
உ. ஈசுவர அவிகாரவாத சைவம் 
ஊ. சிவாத்துவித சைவம். 
இவற்றின் விரிவான விளக்கங்களை மாதவச் சிவஞான யோகிகளின் சிவஞானபோத மாபாடியத்தின் அவையடக்கப் பகுதியில் காணலாம்.
இந்த மெய்யியல் கோட்பாட்டுச் சமயங்கள் யாவும் இன்று மெய்யியல் ஆய்வாளர்கள் சிலரால் மட்டும் பேசப்படுகின்றனவே அன்றிப் பொதுமக்களால் நினைக்கப்படுவதுகூட இல்லை. மக்கள் பேசுவது எல்லாம் சைவம், வைணவம் முதலிய வழிபாட்டுச் சமயங்களைப் பற்றித்தான். இவற்றை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,
சூரியனே பிரமம் எனச் சொல்லல் ஒன்று,
சுடர் மழுவான் தெய்வம் எனத் துதிப்பது ஒன்று, 
வீரிய சத்தியைப் பொருளா மொழிவது ஒன்று,
விட்டுணுவே தலைவன் என விளம்பல் ஒன்று, 
சீரிய கணேசன் எனக் கூறல் ஒன்று,
செவ்வேல்க்கைச் சேந்தன் எனச் செப்பல் ஒன்று, 
ஆரிய நூல்த் தலைவர் உணர் சமய பேதம் 
ஆறும்....      (கௌமார முறைமை, 1,21) 
என அறிமுகப்படுத்துகிறார். இதுவேதான் இந்தத் தெய்வங்களின் வைப்புமுறை என்பதுவும், இவற்றின் வழிபாட்டிற்காகவே வாரத்தின் ஏழு நாள்கள் அமைந்துள்ளன என்பதுவும் (சனிக்கிழமை பெயரோ வடிவமோ இல்லாத அருவப் பரம்பொருள் வழிபாட்டிற்கு உரிய நாள்) அவர் கோட்பாடு. இதனை,
பரிதி ஈசன் பராசக்தி மாயவன் 
கரிமுகன் குகன் என்னக் கவின்தருசு
                       (குருபரதத்துவம், பாயிரம், 1)
அனந்த பேதத்து அறுவகைச் சமயமும் 
அவை முழுது ஒருவலும் தழுவலும் ஆகும் 
அதீத நெறி ஒன்றும் ஆய ஏழும் 
வழிபடற்பொருட்டே வாரம் ஏழு ஆயவேசு
                   (சத்திய சூத்திரம் 117) 
என்பன போன்ற அவர் வாக்குகளால் உணரலாம்.
இவ்வறுவகை வழிபாடுகளுள் சூரிய வழிபாடு தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் குறிப்பிட்டுக் கூறுமளவு சிறப்பிடத்தைப் பெறவில்லை. சிவாலயங்களில் பரிவார தெய்வங்களுள் ஒன்றாகவும், ஒன்பான் கோள்களில் முதன்மைக் கோளாகவும், பெரிய சடங்குகளின் ஒரு பகுதியாகவும், காலையில் குளித்தவுடன் அண்ணாந்து பார்த்து வணங்கும் ஒரு வணக்கத்தைத் தவிர வேறு சிறப்பு வழிபாடுகளை எதிர்பார்க்காத ஒன்றாகவும்தான் சௌரம் இருக்கிறது. தமிழகத்தில் இது தனித்துவமான தலைமை இடம்பெறவில்லை எனவே கூறலாம்.
சிவவழிபாடாகிய சைவம் வரலாற்றுக்கு மிக முற்பட்ட தொல்பழங்காலத்தில் இருந்து இன்றுவரை தமிழகத்தில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுச் செழிப்பாக நாளும் வளர்ந்து வருகிறது. சைவத்தைக் கௌமாரத்துடன் இணைத்துப் பின்னால் காண்போம்.
மூன்றாவது ஆகிய சக்தி வழிபாடு பற்பல நிலைகளில் சிறப்பிடம் பெற்று நடைமுறையில் உள்ளது. சைவ, வைணவ ஆலயங்களில் இறைவனின் சத்தியாகப் பரவலாகத் தேவி பற்பல பெயர்களில் வழிபடப்படுகிறாள். சத்தி இறைவனோடு கூடியிருக்கும் நிலையில் அபின்னா சக்தி எனவும், தனித்துக் கோவில் கொண்டிருக்கும் போது பின்னா சக்தி எனவும் வழங்கப்படுவாள். சிவகாமி, அங்கயற்கண்ணி, பச்சைநாயகி கருணாம்பிகை முதலியன அபின்னா சத்தி வடிவங்கள் ஆகும். மாரியம்மன், காளியம்மன், துர்க்கை முதலியன பின்னா சக்தி வடிவங்கள் ஆம். இந்த இருவேறு நிலைகளிலும் தமிழகம் முழுவதும் சக்தி வழிபாடு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. 
அடுத்த திருமால் வழிபாடும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே தமிழகத்தில் சிறப்பிடத்தைப் பெற்றுத் தனக்குரிய தலைமையுடன் மிளிர்கிறது. இது முல்லை நிலத்திற்கு உரிய திணைக் கடவுள் என்ற அளவில் நின்றுவிடவில்லை. இராமாநுஜரின் விசிஷ்டாத்துவிதக் கொள்கையை ஏற்கும் வைணவர்கள், மத்துவரின் துவைதத்தைக் கைக்கொள்ளும் மாத்துவர்கள் மட்டும் அன்றிச் சங்கர அத்துவைதிகளிலும் பெரும்பாலோர் திருமாலை நாள்தோறும் ஏதாவது ஒரு வடிவத்தில் வழிபடுகின்றனர். வைணவப் பண்டிகைகளுக்கும் குறைவில்லை. மராட்டிய மாநிலத்திற்குச் சிறப்புரிமை வாய்ந்த வர்க்கரி சம்ப்ரதாயம் என்னும் பாண்டுரங்க பக்திநெறி இப்பொழுது தமிழ்நாட்டில் மெல்லமெல்லப் பரவி வருகிறது.
ஐந்தாவதாகிய விநாயகர் வழிபாடு தலைமை வாய்ந்ததாக இல்லாவிட்டாலும் தமிழகத்தில் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. விநாயகர் கோயில் இல்லாத தெருவோ கிராமமோ, நீர் நிலையோ எங்கும் இல்லை எனலாம். மேலும் எல்லாச் செயல்களும் பிள்ளையார் பூசையுடன்தான் தொடங்கப்படுகின்றன. எடுத்த காரியத்தை எவ்விதத்தடங்கலும் இன்றிச் செவ்வனே நிறைவேற்றித் தரும் கடவுள் என்னும் அளவில்தான் இந்த வழிபாடு அமைந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை காணாபத்தியம் என்பது விநாயக பரத்துவம் கூறும் ஒரு தலைமை நெறியாக இல்லாமல் சைவத்தின் ஓர் உறுப்பாக மட்டுமே உள்ளது எனலாம். தம்மைக் காணாபத்தியர்கள் என இனங்காட்டிக் கொள்ளும் எவரும் தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
முருகப்பெருமானுக்குரிய கௌமாரம் பற்றிச் சற்று விரிவாகவும் ஆழமாகவும் சிந்திக்க வேண்டியது இந்த நூல் முறைக்கு இன்றியமையாதது ஆகிறது. முருகப்பெருமான் தமிழ்க்கடவுளாகப் போற்றப்படுகிறார். குறிஞ்சிக்கு உரிய திணைக்கடவுளாக மட்டும் அல்லாமல் தமிழர்களின் அன்றாட வாழ்வின் இன்றியமையாத பல துறைகளிலும் இடம் பெறுகிறார். அகப்பொருள் இலக்கண இலக்கியங்களுள் கந்தவேள் பெற்றுள்ள இடம் குறிப்பிடத்தக்கது. வெறியாடும் வேலனாக, களவுநெறியின் முன்னோடியாகக் குமரவேள் விளங்குகிறார். புறப்பொருளிலும் வீரத்திற்கும் வெற்றிக்கும் உரியவர் வேலாயுதப் பெம்மானே.
தமிழ்க் கல்வித்துறையில் சங்கத்தமிழின் தலைமைப் புலவனாக, முத்தமிழை ஆயும் வரிசைக்காரனாக,  இறையனார்அகப்பொருளின் உரைகளைக் கேட்டுச் சிறந்ததைக் காட்டும் இலக்கணியாக, தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்த அகத்திய முனிவருக்கே போதகாசிரியராக, செந்தமிழில் வைதாரையும் வாழவைக்கும் மொழிநேயராக முருகப்பெருமான் போற்றப்படுகிறார். முருகவேளுக்கும் தமிழ்மொழிக்கும் வடிவம் ஒன்றே என்பதாக வண்ணச்சரபர் தம் புலவர் புராணத்தில், 
“கண்நிகர் மெய்யும் சென்னிக்
கணம்உறழ் சேர்க்கைச் சீரும் 
திண்ணிய புயங்களேபோல்
திகழ்தரும் உயிரும் வேறுஒன்று 
எண்ணிடற்கு அரியது ஆகும்
எஃகமும் இயலில் காட்டும் 
புண்ணிய முனிக்கோன் செவ்வேள் 
பொற்பதத்து அடிமை தானே"
                  (அகத்திய மகாமுனி சருக்கம் 32) 
என உறுதிபடக் கூறுகிறார். தமிழ்மொழியில் இயல், இசை, நாடகம், ஓவியம், சிற்பம், நாடகத்தின் இன்றைய வடிவான வெள்ளித்திரை, சின்னத்திரை முதலிய எல்லாவற்றிலும் வேல்முருகனின் தாக்கம் நீக்கமற நிறைந்துள்ளது.
தமிழகத்தில் குன்றுகள் தோறும் குமரன் குடி இருக்கிறான் அறுமுகவனுக்கே சிறப்புடைய அறுபடை வீடுகளைத் தவிரக் கணக்கற்ற தனிக்கோவில்கள் உள்ளன. முருகவேளுக்குத் தனிச் சந்நிதி இல்லாத சிவாலயமே இல்லை எனலாம். இங்கெல்லாம் சிறப்பான நாள்வழிபாட்டோடு கிருத்திகை, விசாகம், சட்டி, தைப்பூசம், பங்குனி உத்தரம் போன்ற சிறப்பு வழிபாடுகளும் முறையாக நடைபெறுகின்றன. கந்தக்கடவுளின் பழைய ஆலயங்கள் திருப்பணி செய்யப்படுவதோடு புதிய கோவில்களும் தோன்றிக்கொண்டே உள்ளன. இவற்றால் தமிழகத்தில் மிக அதிகமாக வழிபடப்படுபவர் தமிழர்தம் சொந்தக் கடவுள் ஆகிய கந்தக் கடவுளே என உறுதியாகக் கூறலாம்.
வழிபாட்டு நெறியில் முருக வழிபாடு தமிழகத்தில் மிகச் செழித்து விளங்கினாலும் மெய்யியல் துறையில் இது சைவசித்தாந்தத்தின் ஓர் அங்கமாகவே உள்ளது. ஐந்துமுகச் சிவனாரின் ஒரு வடிவபேதம் தான் ஆறுமுகச்சிவன் என்னும் கருத்து நன்கு ஆழங்கால்பட்டுள்ளது. கௌமாரத்திற்குரிய கந்தபுராணம் கூட முருகன்தான் ஒப்புயர்வற்ற முழுமுதற்கடவுளாகிய பரம்பொருள், அவனுக்குமேல் எதுவும் யாரும் இல்லை என எங்குமே அறுதியிட்டுக் கூறவில்லை. தேவர்கள் சிவபிரானிடம் வேண்டும்போதே,
"வேதமும் கடந்து நின்ற
விமல! ஓர் குமரன்றன்னை 
நீதரல் வேண்டும் நின்பால்
நின்னையே நிகர்க்க" (கந்தபுராணம் 1-11-42)
என்றுதான் வேண்டுகின்றனர். சரவணத்தில் அவர் வளர்ந்த நிலை,
"அரன், 
தன்நிகர் திருமகன் சரவணத்திடை 
மன்னுபு குழவியாய் வளர நல்கினான்"   (1-11-80)
எனப்படுகிறது. மேலும் முருகப் பெருமான் சிவபூசை செய்ததாகப் பல இடங்களில் கூறப்படுகிறது. கந்த புராணம் என்பதே பதினெண் புராணங்களில் சிவபிரானுக்கு உரிய பத்துப் புராணங்களில் ஒன்றுதான். கௌமாரத்திற்காகத் தனிப் புராணம் இல்லை என்பது மனங்கொள்ளத் தக்கது.
மேலும் முருக வழிபாட்டிலும் சைவத் திருமுறைகள் ஆகிய பஞ்சபுராணத்திற்குப் பிறகுதான் திருப்புகழ் முதலியன பாடப்படுகின்றன. இவற்றால் கௌமாரம் என்பது சைவ சமயத்தின் வழிபாட்டு நெறிகளுள் ஒன்று எனக் கொள்வதில் தவறில்லை. பழமையான பிறவா யாக்கைப் பெருமானாகிய சிவபரம்பொருள் வழிபாட்டோடு குறிஞ்சித் திணைக்கும் காதலுக்கும் வீரத்திற்கும் உரிய தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானின் வழிபாடும் கலந்ததுதான் கௌமாரம் எனலாம். இதனை வண்ணச்சரபம் சுவாமிகள் மாவிரத கவுமாரம் என்பார்.
என்றாலும் தம்மைக் கௌமாரர்கள் எனச் சிறப்பாக அடையாளங் காட்டிக்கொள்ளும் முருகபக்தர்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளனர். இவர்களுக்கும் தனிச் சைவர்களுக்கும் குறிப்பிடத்தக்க ஒரு வித்தியாசம் உள்ளது.
முருகனடியார்கள் - தனிச் சைவர்களைப் போல் அல்லாது - திருமால் முதலிய அறுசமயத் தெய்வங்களுள் பிறவற்றையும் வெறுப்பின்றி நோக்குவர். இந்தச் சமரச உணர்விற்கு மூல முதல்வர் அருணகிரிநாதர் எனில், அதனைத் தனித்ததொரு நெறியாக வளர்த்தெடுத்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆவார். முருகப்பெருமானின் ஆறு திருமுகங்கள் என்பன ஆறு வழிபாட்டுச் சமயங்களே என்னும் கருத்தைச் சுவாமிகள்,
"மருமுளரிப் புங்கவன் நூல் வாய்ந்த நெறி ஆறும் 
திருமுகங்கள் ஆம் பழனித் தேவே"
                       (பழனித்திருவாயிரம், பாயிரம் 3) 
என்பதுபோலப் பல இடங்களில் கூறியுள்ளார். இது,
"அறுசமய சாத்திரப் பொருளோனே"       (திருப்புகழ் 1099)
என்னும் அருணகிரிநாதரின் அமுதத் திருவாக்கின் வழித்தோன்றல் என்பது வெளிப்படை. இவ்வாறு கௌமாரம் என்பது சைவத்தோடு பெரும்பான்மையும் இரண்டன்மையும், பிற சமயங்களோடு மாறுபாடின்மையும் கொண்ட ஒரு வழிபாட்டு நெறி எனப் புலப்படுகிறது.
தமிழகத்தில் பிறதெய்வ வழிபாட்டைவிட முருகக் கடவுள் வழிபாடு பரவலாகவும் மிகுதியாகவும் உள்ளது என முன்பே கூறப்பட்டது.

bottom of page