top of page
ஆதீனங்கள் - ஓர் அறிமுகம்

இதற்கான விளக்கத்தை அடுத்த இயலில்சுருக்கமாகக் காண்போம்.

   இந்தியப் பண்பாடு என்பது முழுக்கமுழுக்கச் சமய ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரமே ஆகும். நம் நாட்டில் பயன்கலைகளும் கவின்கலைகளும் நீண்ட நெடும் காலமாகச் சமயஞ் சார்ந்தனவாகவே தோன்றி வளர்ந்துள்ளன. சமயம் என்பது கடவுள் வழிபாடு, சமயக்கல்வி என்னும் இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. இவற்றில் தெய்வ வழிபாட்டிற்கு உரிய இடங்களாகத் திருக்கோவில்களும், சமயக்கல்வி மற்றும் மெய்பொருட் கல்விக்கும் ஆய்வுக்கும் உரிய நிறுவனங்களாகத் திருமடங்களும் திகழ்கின்றன. எனவே இந்தியச் சமயங்கள் அனைத்தினுக்கும் ஆலயங்களும் ஆதீனங்களும் இரு கண்களுக்கு நிகரானவை எனலாம்.


இந்த இரண்டில் திருக்கோவில்கள் என்பன மக்கள் இறைவனை வழிபடும் தலங்கள் ஆகும். இங்கு நாள்வழிபாடு, சிறப்புவழிபாடு, பெருஞ்சாந்தி என வழிபாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இவை சற்றேறக்குறைய குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் பொதுவானவை எனலாம். திருக்கோவில்களைப் பற்றி ஓரளவு அனைவரும் அறிவர்.
சமயக்கல்வி என்பதில் சிற்பம், கட்டடக் கலை, ஓவியம், இசை, நாட்டியம், ஒப்பனை முதலிய கவின்கலைகளும் மெய்பொருள் ஆய்வு (தத்துவ விசாரணை), அதற்கு அடிப்படை ஆகிய மொழி, மொழியைச் செம்மைப்படுத்தும் இலக்கணம், வழிபாட்டில் பயன்படுத்தப்படும் தோத்திரங்கள் முதலிய பலவற்றைத் தன்பாற் பெற்றது ஆகும். இத்தகைய கோயிற்கலைகளை எல்லாம் பேணிப் பாதுகாத்து வளர்த்து வரும் பொறுப்புக்கு உரிய நிறுவனம் ஆதீனம் ஆகும். ஆதீனங்கள் பல திருக்கோவில்களையும் நிருவகித்து வருவதாலும், சமய ஆசாரியர் இறைவனாகவே போற்றப்பெறுவதாலும் இவை மடாலயங்கள் என்றும் வழங்கப்படுகின்றன. இத்தகைய மடாலயங்களே சைவ உலகில் ஆதீனங்கள் என்ற சிறப்புப்பெயரால் வழங்கப்படுகின்றன.
உரிமை என்னும் பொருளைத்தரும் அதினம் என்ற சொல் தமிழில் ஆதீனம் என வழங்கப்படுகிறது. ஆதீனம் என்னும் சொல் உரிமை, வசம் (அநுபவம்) என்னும் இருபொருள் தரும். குறிப்பிட்ட சமயப் பிரிவு ஒன்றின் தத்துவ விளக்கங்களும், வழிபாட்டு மரபுகளும் எந்த ஒரு நிறுவனத்திற்குச் சிறப்புரிமை வாய்ந்ததோ - சற்றேறக் குறைய இன்றைய காப்பிரைட் உரிமை போல - அந்தச் சமயப் பிரிவை வளர்ப்பதற்காகப் பலராலும் வழங்கப்பெற்ற அறக்கொடைகள் எல்லாம் எந்த ஒரு நிறுவனத்தின் வசம் (Possession) உள்ளனவோ அது அந்தச் சமய ஆதீனம் எனப் பெயர் பெறுகிறது. தமிழகத்தில் மட்டும் வழக்கில் உள்ள இப்பெயர் பெரும்பாலும் அந்தத் திருமடம் அமைந்துள்ள தலத்தின் பெயரைக் கொண்டே வழங்கப்படுகிறது - திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் என்பன போல.


   அடுத்து மடம் என்னும் சொற்பொருளைக் காண்போம். பிங்கல நிகண்டு, தவம்புரிபவர்களின் வாழிடம் மடம் எனப்படும் என்கிறது (703). தமிழ்ப் பேரகராதி (Lexicon) இச்சொல்லிற்கு முனிவர் வாழிடம், நைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம், சத்திரம், சாவடி என்பனவற்றைப் பொருள்களாகக் காட்டுகிறது.


யாம் அறிந்தவரையில் தமிழ் இலக்கியத்தில் மடம் (மடமை அன்று) என்னும் சொல் முதன்முதலாகத் திருமந்திரத்தில் தான் காணப்படுகிறது. "வந்த மடம் ஏழு ; ... மூலன் மடம்வரை" (101)
என்பதால் அவர் காலத்தில் ஏழு சைவ மடங்கள் இருந்தமை அறியப்படுகிறது.


"பலியும் அவியும் பரந்து புகையும் 
ஒலியும் எம் ஈசன் தனக்கென்றே உள்கிக் 
குவியும் குருமடம்"    (2649) 
என்பதனால் அங்கு நிவேதனம், வேள்வி, மந்திர செபம், தியானம் முதலிய எல்லாம் சிவபெருமானுக்கே ஆக்கிய அடியார்கள் நிறைந்திருந்தனர் என உணரப்படுகிறது.
எனினும் சைவமடங்களைப் பற்றிய ஆழ்நோக்காய்வுக்குச் சேக்கிழார் பெருமான் தம் பெரிய புராணத்தில் இந்த மடம் என்னும் சொல்லை எவ்வாறெல்லாம் ஆண்டுள்ளார் எனக் காண்பது சாலப் பொருத்தமாக இருக்கும்.
சேக்கிழார் பெருமான் தம் பெரிய புராணத்தில் மடம் என்னும் சொல்லை ஐம்பது இடங்களில் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள் பல இடங்களில் திரு என்னும் அடை புணர்க்கப்பட்டுள்ளது. இரண்டு செய்யுள்களில் மட்டும் (231, 3586) பொது என்னும் அடை சேர்த்துப் பொதுமடம் எனக் காணப்படுகிறது.


   வெளியூர்களிலிருந்து தலயாத்திரை வரும் அடியார்கள், வணிகர் முதலிய வழிப்போக்கர்கள் ஆகியோர் உணவு கொள்ளவும், தங்கி ஓய்வெடுக்கவும், இரவைக் கழிப்பதற்கும் உரிய இடமாகவே பெரும்பாலும் மடம் குறிக்கப்படுகிறது. இந்தப் பொருள்தரும் மடம் என்பது இப்பொழுது சத்திரம் என வழங்கப்படுகிறது. அப்பரும் திருஞானசம்பந்தரும் தம் தலப்பயணங்களில் பெரும்பாலும் இத்தகைய சத்திரங்களிலேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. (1531, 2415, 2450, 2455, 2470, 2493, 2579, 2552, 2591, 2600, 2601, 2603 - 2605, 2612, 2627 - 2629, 2640, 2771, 2780, 2781, 2981, 2927, 3207) திருவதிகை வீரட்டத்தில் சுந்தர மூர்த்தி நாயனாரும் (231), திருமருகலில் காதலியோடு உடன்போக்கில் வந்து பாம்பு கடித்து மாண்ட வணிகனும் (2376), திருவாவடுதுறையில் மூலனின் உடலில் புகுந்த சிவயோகியும் (3586 ) தங்கியது இத்தகைய மடத்தில்தான். திருப்புகலூரில் மடம் இருந்தும் சுந்தரர் அங்கு தங்கவில்லை எனச் சேக்கிழார் விதந்துரைக்கிறார் (3207).


   இத்தகைய மடங்கள் பெரும்பாலும் திருக்கோயிலுக்கு வெளியே அருகில் அமைந்திருந்தன என்பதனை, "கோயில்மாடு புறத்தில் ஒரு மடத்து” (2376), "மதிற்புறத்து ஓர் மாமடம்” (2450), "கோபுரத்துச் சார்ந்த வடபால் ஓர் மடம்" (2450) "அயல் மடம்" (3202) என்பன போன்ற குறிப்புக்களால் உணரமுடிகிறது. மக்களுக்குப் பெரிதும் உதவும் இத்தகைய மடங்களைக் கட்டித் தொடர்ந்து நடத்திவருவது ஓர் அறமாகக் கருதப்பட்டது என்பதையும் பலர் இதனைச் செய்தனர் என்பதையும் அறிய முடிகிறது. அமர்நீதியார் (570), அப்பர் பெருமான் (1659), அப்பூதி அடிகள் (1790) ஆகியோர் மடங்களை அமைத்த செய்தி பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ளது.


   சில நாள்கள் தங்குமிடமாக அமையாமல் தேவைப்பட்டவர்களுக்கு உணவு மட்டும் வழங்குவனவாகவும் சில நிறுவனங்கள் மடம் என்னும் பெயரில் விளங்கியிருக்கலாம். பிற்கால வழக்கில் இது அன்னசத்திரம் எனப்படும்.
"தக்க அன்பர்கள் அமுதுசெய் திருமடம் சமைத்தார்" (505) 
"திருமடத்து அடியார் பெருகும் இன்பமொடு அமுதுசெய்திட"   (506) 
"செந்நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திருமடங்கள்" (4028) என்பனவற்றால் தனியாக அன்னசத்திரங்களும் இருந்ததை யூகிக்கலாம்.


   பொதுவாக மடங்களில் இல்லறத்தோர் நிலையாக இடம்பெறாமல் பிரமசாரிகளும் துறவிகளும் தங்கியிருந்திருக்க வேண்டும். "மடம் எங்கும் தொண்டர் குழாம்" எனச் சிறப்பிக்கும் சேக்கிழார் இதற்கு முரணாக, "மனை எங்கும் புனைவதுவை” (2530) என்பதால் இதனை உணரலாம். இத்துடன் அமையாது திலகவதியார் திருவாமூரில் வாழ்ந்த இடத்தை (தந்தையார் வீடு),
“இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்" (1304) 
எனக் கூறும் சேக்கிழார், அவரே திருவதிகையில் இல்லறம் துறந்து வாழ்ந்த இடத்தை, "திலகவதியார் இருந்த திருமடத்தை” (1332) எனகிறார். துறவியாகிய தண்டியடிகளின் வாழ்விடம்  மடம் - (3608) என்றே கூறப்படுகிறது. சில  மடங்களில் வேத பாடசாலைகள் இருந்தன என்பதை,
“பல்கும் செந்தீ வளர்த்த பயில்வேள்வி எழும் புகையும் 
மல்கு பெரும்கிடை ஓதும் மடங்கள்”            (1068)
“ஓது கிடைசூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் 
போதின் விளங்கும் தாரகையும் மதியும் போலப் புணர்மடங்கள்" (1213) என்னும் குறிப்புக்களால் அறிகிறோம். அது மட்டும் அல்ல; சில திருமடங்களில் சைவசமயத்தின் உண்மைப் பொருள்களும் ஆராயப் பெற்றன என்பது,
"தக்க அன்பர் மடங்கள்தொறும் சைவ மெய்ம்மை சாற்றுவன" (3755)
எனச் சேரநாட்டுச் சிறப்பாகச் சேக்கிழார் உரைப்பதிலிருந்து தெரிய வருகிறது.


   இனி ஒரோவழி மிக அருகிய வழக்காக அடியார்கள் வாழ்ந்த வீடுகளும் மடம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளன. முருக நாயனாரின் இருப்பிடம், "முருகனார் திருமடத்தில் மேவும் காலை" (1501), "முருகனார் திருமடத்தில்" (1513) "முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார்" (2393) எனக் கூறப்படுவதோடு அது, "தாவில்சீர் முருகனார் திருமனைக்கு எய்தி" (2425) எனவும் குறிப்பிடப்படுகிறது.
அவ்வாறே குங்கிலியக் கலையரின் வாழிடமும், "குங்கிலியக் கலையனார் திருமடத்தில் குறைவறுப்ப" (1517) என ஓரிடத்தும், "எதிர்கொண்டு மனையில் எய்தி" (868), "குங்கிலியப் பெரும் கலையர்தம் மனை மேவி" (2438) என ஈரிடங்களிலும் வழங்கப்படுகிறது. சீகாழியில் திருஞானசம்பந்தரின் இல்லமும், "பிள்ளையார்தம் திருமடத்தில் எழுந்தருளி" (1457) "மடத்தில் புக்கார்" (2165), "சோதிமணி மனை முன்றில்" (இந்நிலையில் தந்தையார் வீடு) (1959) என இருவகையாகவும் பயிலப்பட்டுள்ளது.
இதுகாறும் கூறியவற்றால் பெரியபுராணம் காட்டும் மடங்களைப் பற்றிய செய்திகளைச் சேக்கிழார் புராணம்,
“அன்றுமுதல் நாள்தோறும் நாள்தோறும் அண்ணல்
அடியர் அளவிறந்த பெயர் வந்தவர்கள் எல்லாம்
சென்றுஉறையத் திருமடங்கள், திருமடங்கள் தோறும்
திருவிளக்கு, அங்கு அவர் சாத்த உள்ளுடை, மேற்போர்வை 
துன்றிய செந்நெலின் அடிசில், கன்னல் நறும் கனிகள்,
தூய அறுசுவைக் கறி, நெய், தயிர் திரண்டபால், தேன், 
நன்று திருப்பண்ணியம், தண்ணீர் அமுதம், அடைக்காய் 
நரபதி ஏவலின் அமைச்சர் நாள்தொறும் நடத்த" (82)

என ஒரே பாடலில் கூறிச் செல்கிறது. இவற்றைக் கொண்டு பார்க்கும்பொழுது சேக்கிழார் காலத்தில் இன்று இருப்பதை போன்ற ஆதீன மடாலயங்கள் இருக்கவில்லை எனத் தெளிவாகிறது.


   அடுத்துத் தமிழில் வழங்கப்பட்ட சைவத் திருமடங்கள் பதினெட்டு என்பதைப் பற்றிச் சிறிது நோக்குவோம்.
பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சாளுவத் திருமலைராயரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த காளமேகப் புலவரால் இயற்றப்பட்டுள்ள திருவானைக்கா உலா என்னும் சிற்றிலக்கியத்தில் தான் சைவ மடங்கள் பதினெட்டு என்னும் குறிப்பு முதன் முதலாகக் காணக்கிடைக்கிறது.
"பதினெண் மடத்தில் பயிலும் முதலிகளும்”
என்பது அது. அதனை அடியொற்றிப் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சேறைக் கவிராச பிள்ளை தம் திருக்காளத்திநாதர் உலாவில்,
“வெண்ணீற்று, வண்டல் பதினெண் மடத்தாரும்" (194)
என்கிறார். அதற்கு அடுத்த நூற்றாண்டில் எழுந்த கந்தசாமிப் புலவரின் திருப்பூவணநாதர் உலா இந்தச் செய்தியை,
"சைவ மார்க்கப் பதினெண் மடத்தாரும்" (95) 
எனப் பதிவு செய்துள்ளார். பின் இரண்டு உலா நூல்களையும் பதிப்பித்துள்ள தமிழ்த் தாத்தா அவர்கள்,
"பதினெண் மடத்தார் - சிவாகம பத்ததிகள் பதினெட்டும் இயற்றிய சிவாச்சார்யார்கள் பதினெண்மர்களுடைய பரம்பரையினர்; அப்பதினெண்மர்கள் ஆவார்; துர்வாஸ சிவர், பைங்கள சிவர், உக்ரஜ்யோதி, ஸ்ரீகண்டர், விஷ்ணு கண்டர், ஸுபோதர், வித்யா கண்டர், இராம கண்டர், ஞான சிவர், ஞான சங்கரர், ஸோம சம்பு, ப்ரஹ்ம சம்பு, திரிலோசன சிவர், அகோர சிவர், வருணசிவர், ப்ரஸாத சிவர், இராமநாத சிவர், ஈசான சிவர் என்பவர்கள். “பதினெண் மடத்தில் பயிலும் முதலிகளும்" என்றார் திருவானைக்கா உலா உடையாரும் (திருக்காளத்திநாதர் உலா. பதிப்பு 2, 1925, ப.23)
எனக் குறிப்புரை தந்துள்ளார்.

 

   திருப்பூவணநாதர் உலாப் பதிப்பிலும் (பதிப்பு 4, 1956, பக்.12-13) இதையே குறிப்பிடுகிறார்.
பதினைந்தாம் நூற்றாண்டில் சைவ மடங்கள் பதினெட்டு எனக் கூறுமளவு ஆதீனங்கள் தோன்றியிருக்கவில்லை. பெரிய புராணத்திலும் தமிழகக் கோவிற் கல்வெட்டுக்களிலும் இடம்பெற்றுள்ள மடங்கள் எல்லாம் உபதேச பரம்பரைபெற்ற சைவ ஆதீனங்கள் அல்ல. எனவே உலா நூல்கள் கூறுவது வேறாகத்தான் இருக்க முடியும். அவை நம் தமிழ்ச் சைவ மடங்களினின்றும் வேறுபட்டனவும், வடமொழிப் பத்ததிகளை ஆக்கிய சிவாசாரியர் வழிவந்தனவும் ஆகிய மடங்களே ஆகும்.
முதன் முதலாகச் சைவ ஆதீனங்களின் வரலாற்றை ஆராய்ந்து விரிவாக எழுதியுள்ள தவத்திரு ஊரன் அடிகள்,
"தமிழ்ச் சைவ மடங்கள் வேறு. வடமொழிப் பத்ததிகள் செய்த சிவாசாரியார் பதினெண்மர் வழிவந்த மடங்கள் வேறு. அபிதான சிந்தாமணி ஆசிரியரும், சோமசுந்தர தேசிகரும் தமிழ்ச்சைவ மடங்களைக் குறிக்கின்றனர். உலா நூல்கள் மூன்றும் வடமொழிப் பத்ததிகள் செய்த சிவாசாரியார் பதினெண்மர் வழிவந்த மடங்களைக் குறிக்கின்றன. இவ்வேறுபாட்டைத் தெளிவாக உணர வேண்டும்... காளமேகப் புலவர் திருவானைக்கா உலாப்பாடிய பதினைந்தாம் நூற்றாண்டில் பதினெண் மடங்கள் என்றால் பத்ததிகள் செய்த சிவாசாரியர் பரம்பரை மடங்களே. பிற்காலத்தில் அவை இல்லாது போயின... தமிழ்ச் சைவ மடங்கள் இத்தனை என்ற கணக்கு இல்லை. வேண்டுவதுமில்லை."
(சைவ ஆதீனங்கள் பதிப்பு 2, 2009, பக்6-8)
எனத் தெளிவாக விளக்குவது இங்கு உளங்கொள்ளத்தக்கது.


   ஆதீனங்கள் என வழங்கப்படுவனவற்றுள் காலப் பழமை வாய்ந்தது பதினான்காம் நூற்றாண்டில் நிறுவப் பெற்ற திருவாவடுதுறை ஆதீனம் ஆகும். எனவே சைவ ஆதீன வரலாறு என்பது அறுநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கால எல்லையை உடைய ஒன்று ஆகும். கடந்த இந்த ஆறு நூற்றாண்டுகளில் சைவ ஆதீனங்கள் ஆற்றியுள்ள அரும்பணிகள் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுவன. குறிப்பாகத் தமிழ் வளர்ச்சியில் ஆதீனங்களில் பங்கு சிறப்பாகப் போற்றத்தக்கது. "சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக" என்பதே இவற்றின் கொள்கை முழக்கமாக அமைந்துள்ளது எனலாம்.
தமிழ் இலக்கியத் துறையில் ஆதீனங்களின் பெரும் பங்கை உணரத் தமிழ் இலக்கிய வரலாற்றை மிகச் சுருக்கமாகச் சுட்டிக் காட்டிய சி.வை. தாமோதரனார் ஒரு காலப் பகுதியை "ஆதீன காலம்" எனச் சிறப்புப் பெயரிட்டு வழங்குவதே போதுமானதாகும் (வீரசோழியப் பதிப்புரை). முனைவர் மு.வ. அவர்கள் தம் "தமிழ் இலக்கிய வரலாறு" என்னும் நூலில்,
"சைவ சமயத்தைக் காப்பதற்காக ஏற்பட்ட சைவ மடங்கள் சமயத்துறையில் பணிபல புரிந்ததோடு, தமிழிலக்கியத்தை வளர்த்துப் போற்றுவதிலும் ஆர்வம் செலுத்தி வந்தன. பழைய நூல்களைக் காப்பதற்கும் புதிய நூல்களைப் படைப்பதற்கும் அந்த மடங்கள் ஆதரவு தந்தன. அந்த அமைப்புகளுக்குத் தலைமை பூண்டு விளங்கிய சிலர் தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்களாகவும் அவற்றை ஆராய்வதில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அதனால் புலவர் பலர் மடங்களைச் சார்ந்து வாழவாய்ப்பு இருந்தது. சென்ற சில நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற புலவர்கள் சிலர் மடங்களைச் சார்ந்தவர்களாக இருந்ததற்குக் காரணம் அதுவே. அவர்கள் மடங்களில் தங்கிப் பலர்க்குத் தமிழ் நூல்களைக் கற்பித்து இலக்கியத் தொண்டு புரிந்து வந்தார்கள். அவர்களைப் போற்றி ஆதரவு தந்து வந்த மடங்களின் தலைவர்களும் சில சமய நூல்களை இயற்றியுள்ளனர்; அந்தப் புலவர்களும் பல நூல்களை இயற்றியுள்ளனர். பதினான்காம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட திருவாவடுதுறை மடத்திலும் தருமபுர மடத்திலும் வாழ்ந்த புலவர்கள் இயற்றிய நூல்கள் சில இலக்கிய வாழ்வு உடையவை; அவர்களுள் சிலர் பழைய நூல்களுக்கு உரைகளும் எழுதினார்கள். திருவண்ணாமலை மடமும் துறைமங்கல மடமும் வீரசைவ சமயத்தைச் சார்ந்தவை. அவைகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரிந்தன." (பதிப்பு 2, ப.209)
எனத் தெளிவாக ஆதீனங்களில் அருந்தமிழ்த் தொண்டினை ஆவணப்படுத்தியுள்ளார்.


   நாளடைவில் முழுக்க முழுக்கச் சமய நிறுவனங்களாகத் தோன்றிய இந்த ஆதீனங்களுக்குத் தமக்கே உரிய சைவ, தமிழ்த் தொண்டுகளோடு பொதுப்பள்ளிக்கல்வி, மருத்துவம் போன்ற சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டாக வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. இதனைத் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் திரு.த.ச.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தம் "அரசவனத்து அற நிலையம்" என்னும் மடாலய வரலாற்றில்,
"பொதுமக்களின் ஆதரவு பெருகப்பெருக ஆதீனம் சிவப்பணி தவப்பணிகளோடு கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், கலை, தொழில் இவற்றிற்கெல்லாம் இடம் தந்து வளர்க்க வேண்டிய இன்றியமையாமை விளைந்தது. பொது மக்களும் தாங்கள் தொடங்கும் எவ்வகைக் காரியத்துக்கும் ஆதீனத்தின் அருட்பிரசாதத்தை அன்போடு வரவேற்றனர். அதனால் இத்தகைய பசு புண்ணியங்களை மக்களுக்காகச் செய்து அவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பதிபுண்ணியங்களையும் இடைவிடாமல் இயற்ற வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது." (1962. பக் 6-7)
எனக் குறிப்பிட்டுள்ளார்.


   இத்தகைய வரலாற்றுப் பின்னணியை உடைய சைவ ஆதீனங்களின் மரபில் வாழையடி வாழையாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உதயமானதுதான் சிரவையாதீனம் என்னும் கெளமார மடாலயம்.
இதைப் படிக்கும்பொழுது வாசகர்களுக்கு ஓர் ஐயம் ஏற்படுவது இயல்பு. கெளமாரம் என்பது முருகப்பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் வழிபாட்டு நெறி அல்லவா? இதனைச் சிவனெனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மானை மட்டுமே பரம்பொருளாகக் கொள்ளும் சைவத்தைச் சேர்ந்ததாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? கெளமாரமும் சைவமும் அறுவகைச் சமயங்களுள் வேறுவேறானவை ஆகாவா என்பதே அந்த ஐயம். இதற்கான விளக்கத்தை 

bottom of page