top of page
கல்விப்பணி

1956 ஆம் ஆண்டு தவத்திரு கஜபூசைச் சுவாமிகள் சந்நிதானங்களின் திருப்பெயரில் தவத்திரு இராமானந்த அடிகளார் பள்ளியை உயர்தொடக்கப் பள்ளியாகத் தொடங்கினார். தொடக்கத்தில் 150 மாணவர்களைக் கொண்டிருந்த இப்பள்ளி 14.06.60 இல் உயர்நிலைப் பள்ளியாகவும், 1991 இல் மேனிலைப்பள்ளியாகவும் வளர்ந்தது. திருமடத்தின் அன்பர்கள் பலரின் நன்கொடையால் கட்டடங்கள் கட்டப்பெற்றன. இன்று ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு அடுக்குமாடிக் கட்டடத்தில் 15 வகுப்பறைகளுடன் 17 ஆசிரியர்களையும் மூன்று அலுவலகப் பணியாளர்களையும் கொண்டு 250 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 2007ஆம் ஆண்டு தன் பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிய இப்பள்ளி பத்தாவது பனிரெண்டாவது வகுப்புப் பொதுத்தேர்வுகளிலும் உயர்ந்த தேர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து பெற்று வருகிறது.

 இப்பொழுது சமுதாயத்தில் மிகவேகமாகப் பரவிவருகின்ற ஆங்கிலவழிக் கல்வி மோகத்தால் கவரப்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அத்தகைய பள்ளிகளிலேயே சேர்க்க விரும்புகின்றனர். கல்விக்கூடங்களை மதமாற்றத்திற்கான ஒரு சாதனமாகவோ வணிகச்சாலையாகவோ கருதி நடத்தப்படும் ஆங்கிலவழிக் கல்விக் கூடங்கள் நாட்டில் மிகப் பெருகி வருகின்றன. இது தமிழ் மக்களின் பண்பாட்டுச் சீரழிவுக்கு ஒரு காரணமாக அமைந்துவிடுமோ என அஞ்சிய தவத்திரு கஜபூசைச் சுவாமிகள் இப்பகுதிப் பிள்ளைகளுக்காவது தமிழ்ப்பண்பாட்டோடு ஆங்கிலவழிக் கல்வியை வழங்க ஒரு பரிசோதனை முயற்சியாக ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்க எண்ணினார். அதன்படி எழுந்ததுதான் இன்றைய தவத்திரு கந்தசாமி சுவாமிகள் மெட்ரிக் பள்ளி.  1976 இல் மழலையர் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இது 1994 இல் மெட்ரிக் பள்ளி எனப்படும் நுழைவுரிமைப் பள்ளியாக மலர்ந்தது. இன்று மூன்று அடுக்கு தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியாகவும் விசாலமான இடத்தில் மாடிக் கட்டடத்தில் 46 வகுப்பறைகளுடன் 47 ஆசிரியர்களையும் 14 அலுவலகப் பணியாளர்களையும் கொண்டு 1382 மாணாக்கர்கள் ஆங்கில வழியில் தமிழ்ப்பண்பாடு கெடாமல் கல்விபயின்று வரும் ஒரு இலட்சிய நிறுவனமாக இப்பகுதிவாழ் நடுத்தர மக்கள் பெரும்பயன் அளித்துவருகிறது.

 தவத்திரு கஜபூசைச் சுவாமிகளால் தவத்திரு இராமானந்த சுவாமிகள் கல்வி அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டு, 1985ஆம் ஆண்டு குமரகுரு பொறியியற் கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரிக்குத் திருமடத்திலிருந்து 75 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அந்த அறக்கட்டளையின் நிறுவனராகவும், தொடக்க காலத் தலைவருமாகத் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌமார மடாலயம் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி, மற்றும் சிரவணம்பட்டி, ஜனதாநகர், சிவானந்தபுரம் ஆகிய சுற்றுப் புறப்பகுதிகளில் இளைஞர்களின் கல்வி அளவிலும் தரத்திலும் மேம்பட்டு, பலருக்கு வேலைவாய்ப்புகள் அமைந்து, இப்பகுதி இன்று நிச்சயமான பொருளாதார வசதி பெற்றுள்ளதற்குப் போற்றுதலுக்குரிய தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் தோற்றுவித்த இந்தக் கல்வி நிறுவனங்கள் ஒரு முக்கிய காரணம் ஆகும். ஆனால் தொடக்கத்தில் ஒரு பள்ளியைத் தொடங்க்க கஜபூசைச் சுவாமிகள் எவ்வளவு சிரமப்பட்டார் என்பது மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த செய்தி.

 சிரவையாதீனம் தொழிலதிபர் திரு. தேவப்பிரகாசு அவர்களுடன் இணைந்து கௌமாரம் சுசீலா பன்னாட்டு உறைவிடப் பள்ளி என்னும் கல்விக்கூடத்தை 2007ஆம் நிறுவிச் சிறப்பாக நடத்தி வருகிறது. இப்பொழுது 12 ஆம் வகுப்பு வரை உள்ள அப்பள்ளியில் 1000 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

 ஆதீனப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணாக்கர்களுள்(ஆண்கள் மட்டும்) தேவையானவர்கள் தங்கிப்படிக்க வாய்ப்பாக 1962 இல் விடுதி ஒன்று தொடங்கப்பட்டது. 6 மாணவர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இவ்விடுதியில் இன்று 90 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். விடுதி மாணவர்களுக்கு நாள்தோறும் காலை மாலை தெய்வ வழிபாடு, திருநெறிய தோத்திரங்கள், முன்னிரவில் அன்றன்று பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்களின் மறுவாசிப்பு ஆகியனவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 விடுதிமாணவர்கள் இரவில் வசதியாகத் தூங்க வாய்ப்பாக உணவு விடுதிக் கட்டடத்தின் மேல்மாடியில் இடமகன்ற ஓய்வுக் கூடம் ஒன்று அண்மையில் ரூ.15 இலட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

 இதைத் தவிரச் சிரவையாதீனத்தால் அன்பு இல்லம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்களின் அரவணைப்புக்கு வாய்ப்பில்லாத ஏழை மாணவர்கள் தங்கிப் பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அன்பு இல்லம் 10.6.2008 அன்று தொடங்கப்பட்டது. இப்பொழுது இந்த இல்லத்தில் 21 மாணவர்கள் தங்கி மடாலயக் கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், கல்வி, அதற்கான உபகரணங்கள் முதலிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த அன்பு இல்ல மாணவர்களும் விடுதி மாணவர்களைப் போலவே பள்ளிக் கல்வியிலும் விளையாட்டு முதலியவைகளிலும் ஆர்வம் காட்டி நல்ல மதிப்பெண்களும் பரிசுகளும் பெற்று வருகின்றனர்.

பொன்விழா

 2007 ஆம் ஆண்டு தவத்திரு இராமானந்த அடிகளார் மேல்நிலைப்பள்ளியில் 50 ஆம் ஆண்டு நிறைவு பொன்விழா நடைபெற்றது. பொன்விழா நினைவாக சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

வைரவிழா

 2017 இல் தவத்திரு இராமானந்த அடிகளார் மேல்நிலைப் பள்ளியின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வைரவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணக்கர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வைரவிழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

விளையாட்டுப்போட்டிகள்

 2004 ஆம் ஆண்டு முதல் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் சுழற்கோப்பைப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு ஒருநாள்,  மாணவிகளுக்கு ஒருநாள் எனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 100க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1,000த்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொள்கின்றனர். கபடி, கோகோ, எறிபந்து, சதுரங்கம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்குப் பல்வேறு ஊக்கப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப் படுகின்றன.

பள்ளியில் நடைபெறும் பிற நிகழ்ச்சிகள்

     கணபதித் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் திருக்குறள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. திருக்குறள் ஒப்பித்தல், எழுதுதல், கதை, கவிதை, கட்டுரை எனத் திருக்குறள் தொடர்பாக மட்டும் மாணாக்கர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நடத்தப்பட்டு வருகின்றன. மழலையர் குழந்தைகள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் தனித்தனிப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். பரிசளிப்பு விழா தனியாக ஒரு நாள் வைக்கப்பட்டு சான்றிதழ்கள் நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகிறது.

 திருமடத்தின் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா, காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள்விழா, ஆசிரியர் தினவிழா, குழந்தைகள் தினவிழா என அரசு விழாக்களும் சரஸ்வதி பூஜை, பொங்கல் விழா என அனைத்து விழாக்களும் தவத்திரு குருமகாசந்நிதானங்களின் தலைமையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

கௌமாரம் பிரசாந்தி அறக்கட்டளை

 12.12.2012 ஆம் ஆண்டில் கௌமாரம் பிரசாந்தி அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது. அப்பள்ளி மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

 03.02.2013 அன்று தவத்திரு குமரகுருபர சுவாமிகள் முனைவர் பட்டம் பெற்றமைக்குப் பாராட்டு விழா உலகப் பெருவேள்வி மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு கோவை, பாரதிய வித்யாபவன் தலைவர் திரு.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் தலைமையேற்றுத் தலைமை உரையாற்றினார். அவர் தம் உரையில் சுவாமிகள் முனைவர் பட்டம் பெற்றது மகிழ்ச்சியானது. தமிழ் நாட்டிலும், பிற நாடுகளிலும் மட்டும் அவருடைய குரல் ஒலித்தால் போதாது ஐ.நா.சபையில் ஒலிக்க வேண்டும், அதன் மூலம் சுவாமிகளின் புகழ் உலகம் முழுவதும் பரவ வேண்டும். என்று தலைமை உரை ஆற்றினார், அதற்கேற்ற வகையில் ஆறுமுகப் பெருமான் அருளால் ஆறே ஆண்டுகளில் நிறைவேறியது.

 21.03.2019 அன்று தவத்திரு குருமகாசந்நிதானங்கள் அவர்கள் ஜெனிவாவில் உள்ள ஐ.நா.சபையில் உலக வீழ்நிலை மனவோட்ட நாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.

ஐ.நா.சபையில் பெரும்பாலும் 01.30 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்படும். ஆனால் சுவாமிகளுக்கு 10 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டது. அவ்வுரையில் கௌமாரம் பிரசாந்தி சிறப்புப் பள்ளியின் சிறப்புப் பற்றியும், நமது மடாலயம் மேற்கொள்ளும் சமய சமுதாயப் பணிகள் பற்றியும், எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் விரிவாகத் தாய்மொழியாகிய தமிழில் உரையாற்றினார். சுவாமிகள் தம் சிறப்புரையில்,

 மாண்புமிகு சான்றோர்களே, சர்வதேச ஒருங்கிணைப்பின் மதிப்பிற்குரியவர்களே! வீழ்நிலை மனவோட்டம் இயக்கத்தின் உறுப்பினர்களே! எனதருமை பாரதநாட்டுக் குடிமக்களே! வணக்கத்திற்குரிய சகோதர, சகோதரிகளே.

 இந்திய நிரந்தர இயக்கமும், ஆசிய பசிபிக் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில், வீழ்நிலை மனவோட்ட நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்குப் பெருமையும், பணிவும், நிறைவும் தருகிறது.

 இந்தியாவில், தமிழகத்தில், கோவை மாநகரில் உள்ள கௌமார மடம், வீழ்நிலை மனவோட்டத்தை மேம்படுத்த ஆற்றிவரும் பணிகளை அந்த மடத்தின் தலைவர் என்ற முறையில் இங்கு வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 கௌமார மடம் நூறாண்டுக்கு முன்பு 1907இல் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழகத்தின் மேற்குப் பகுதியாகிய கொங்கு மண்டலத்தில் சமயம், சமூகம், இலக்கியம், கல்வி சார்ந்து மடம் பல பணிகளை ஆற்றி வருகிறது. நகர்ப்பகுதி, பேரூர்ப் பகுதி, சிற்றூர்ப் பகுதி எனப் பிரிந்துள்ள இந்த மண்டலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தப் பணிகள் அமைந்துள்ளன.

 இந்தியா பரந்தநாடு; வேறுபட்ட மக்களினம் கொண்டது. 1.25 மில்லியன் மக்கள் தொகை கொண்டது. இவர்கள் நகரம், பேரூர், சிற்றூர்களில் வாழ்கிறார்கள். இதில் நாடு முழுவதும் சிறிதளவு மக்கள் வீழ்நிலை மனவோட்டம் கொண்டவர்களாக உள்ளனர். வீழ்நிலை மனவோட்டம் கூட்டமைப்பு நன்கு செயல்படுகிறது. மேற்கண்ட குறைபாட்டினை எடுத்துரைப்பதிலும் அவர்களுக்கு உதவும் வகையில் இந்தியா முழுமையும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு சிறு பகுதியாகக் கௌமாரமடமும் கௌமாரம் பிரசாந்தி அறக்கட்டளை நடத்தும் கௌமாரம் பிரசாந்தி அகாடமியும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

 வீழ்நிலை மனவோட்டம் உட்பட குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு கௌமாரம் பிரசாந்தி அகாடமி முக்கியத்துவம் தருகிறது. இந்தக் குழந்தைகளின் உள்ளேயும் பல திறமைகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தனிப்பட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அறிவு, உடல், மனம் சார்ந்து இவை குழந்தைகளைப் பண்படுத்துகின்றன. புதியதொரு வாழ்வு இந்தக் குழந்தைகளுக்குக் கிடைகிறது. இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனி நபர்; ஒவ்வொருவருக்கு உள்ளேயும் தனிப்பட்ட சிறப்பியல்புகள் இருக்கும். அகாடமி அவற்றை வளர்க்கவும் வெளிக்கொணர்வுமான பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு அளிக்கிறது.

 இந்தப்பள்ளி (அகாடமி) கௌமார மடத்துத் திருக்கோயிலை ஒட்டி, தெய்வ மணம் கமழும் சூழலில் விளையாட்டு மைதானம் உள்ள திறந்த வெளியில் பலவசதிகளைக் கொண்டதாகக் குழந்தைகளின் தேவையை நிறைவு செய்வதாக உள்ளது. அறநெறிகள், விழுமியங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பாடத்திட்டத்தில் குழந்தையின் முழு ஆளுமையும் வளர்ந்து நிறையும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

 இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாமல் வெளியிலிருந்தும் தக்க தேர்ந்த வல்லுநர்களையும் அழைத்துச் சொற்பொழிவுகளும் நடத்தப்படுகின்றன. பணிசார்ந்த பயிற்சி மருத்துவர்கள், சிறப்புநிலைக்கற்பிப்போர், பேச்சுப் பயிற்சியாளர், இயற்கை மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர், உடற்பயிற்சி ஆசிரியர், உடற்பயிற்சி மருத்துவர், இசைப்பயிற்சியாளர், கலைப்பயிற்சியாளர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அல்லாமல் தொழில்சார்ந்த பயிற்சிகள் கணினி இணையதளம் மூலம் கற்பிக்கப்படுகின்றன. உடலசைவுகள், உறுப்பு அசைவுகள் போன்றவையும் அந்தந்த வல்லுநர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டுக் குழந்தைகள் ஆளுமை வளரத் துணை செய்யப்படுகிறது.

 இவையல்லாமல் வேறு ஒரு சிறப்பு நோக்கமும் அகாடமியின் பயிற்சியில் உள்ளது. உடல், உளம், அறிவு சார்ந்த அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து பயிற்சிகள் மூலம் வளர்த்தி அவர்களுக்குள்ளே மறைந்து கிடக்கும் தனித் திறைமைகளைத் தூண்டி மற்ற மாணவர்கள் படிக்கும் பள்ளியில் அதே பாடத்திட்டத்தில் அமரவைத்துப் படிக்கச்செய்வதே ஆகும். எவ்விதச் சமுதாயப் புறக்கணிப்புக்கும் அவர்கள் ஆளாகக்கூடாது என்பதே அடிப்படை. இயல்பான மற்ற மாணவர்களுக்குச் சமமாகத் தம்மாலும் படிக்கவும் சாதிக்கவும் முடியும் என்ற நம்பிக்கை இந்த மாணவர்களுக்குக் கிடைக்கிறது.

     இது நிறைவேறும் வகையில் குழந்தை பிறந்ததிலிருந்து அதன் வளர்ச்சியைக் கண்டறிந்து பெற்றோருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கேற்ற முறைகளைக் கற்பித்து வருகிறோம். முன்பு சொன்னது போல, கல்வி சார்ந்தும் சிறப்பு மருத்துவ முறைகள் சார்ந்ததுமான போதனைகள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் இந்தக் குழந்தையும் தொடர்பு கொள்ள வழிவகுக்கிறது.

     இவை சரியே ஆனால் அகாடமியின் இன்னொரு நோக்கம் இன்னும் சிறப்பானது. இந்த குழந்தைகள் யாரையும் சார்ந்திராமல் தங்கள் வேலைகளைத் தாமே செய்து கொள்ளும் பரிபூர்ண சுதந்திரம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். கூடவே தம் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பணம் சம்பாதிக்கும் வழியையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதனால் கற்றுக்கொள்வதில் மேல் சொன்ன படிநிலைகளைக் கடந்தவர்கள் அல்லது  முறையான கல்வி கற்கும் வயது தாண்டியவர்கள் பயன்பெறும் வகையில் அவரவர் திறைமைக்கேற்பத் தொழில் சார்ந்த பயிற்சி தரப்படுகிறது. இதுவரை அவர்கள் பாடங்களாகப் படித்தவை தொழில்களாக மாற்றப்படுகின்றன.

 இவை தவிர, தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துதல், பயன்பாட்டுக் கணிதம், மொழித்திறன் வளர்த்தல், விற்பனைத் திறன் வளர்த்தல், பணம் சார்ந்த செய்திகள், செய்தித் தொடர்பு இவை போன்று சமுதாயம் தொடர்பான பிரிவுகளில் பயிற்சி முடித்த மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப் பெறுகிறார்கள்.

 கூடிய விரைவில் அகாடமி சார்ந்து தனியாகவே ஒரு வணிகமையம் திறக்கக்கப்பட உள்ளது. குழந்தைகள் செயல்பட்டுப் பொருளாதார நிலையில் முழு நிறைவு பெறுவார்கள். இதே போல் சற்று வயது மூத்த குழந்தைகளுக்குச் சமையல், வீட்டைச் சுத்தம் செய்தல், கடைக்குப் போய் பொருள்கள் வாங்கி வருதல் போன்றவற்றில் பயிற்சி தந்து, தங்கள் குடும்பப் பொறுப்பைத் தாங்களே ஏற்கும் திறமை பெறச் செய்வதும் நோக்கம்.

 ஆர்வமுள்ள மாணவருக்குத் தட்டச்சு, கணினியில் விபரம் பதித்தல், ஒளிஅச்சு எடுத்தல், தாள் வழவழப்பாக்கல் போன்றவையும் கற்பிக்கப்படுகின்றன. அலுவலகம் சார்ந்த பணிகளை அவர்கள் வெற்றியுடன் செய்ய இது வாய்ப்பு தரும்.

 யோகா பயிற்சி நாளும் செய்தால் குழந்தைகள் மனதில் தெளிவு தோன்றும். தசைத் திறன், ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவித்திறன், கவனக் கூர்மை இவை பெருகும். செரிமானம் நன்றாக நடைபெறும். நோய்தடுப்புச் சக்தி கூடும். கூடவே அளவான எடையில் உடம்பு பொலியும். கௌமார பிரசாந்தி அகாடமி பஞ்ச கர்மா, மூலிகை மருந்து, நீர் மருத்துவம் போன்ற பிற பயிற்சிகளையும் அளிக்கிறது.

 படங்களைப் பார்த்துச் செய்தித் தொடர்பு கொள்ளுதல், குரல், ஒலித்தல் மூலம் ஐபேடு பயன்படுத்திப் பட அட்டைகள் மூலம் தானாகவே பேசிப்பழகிச் செய்தித் தொடர்பு ஏற்படுத்த வழி செய்வதில் அகாடமி வழிகாட்டுகிறது.

 பேச வராமை ஒரு நோய் போன்றது. இதற்கான காரணத்தைக் கண்டறியும் நிபுணர் - பேச்சு மருத்துவர் - இப்படிப்பட்ட குழந்தைகளிடம் தனித்தனியாகப் பழகி, அவர்களின் இயலாமையை அறிந்து கொள்கிறார். பின்பு அவரவர் குறைக்கு ஏற்பத் தனியான பயிற்சி முறையை வகுத்து மெல்ல மெல்ல அவர்களைப் பேச வைக்கிறார்.

 அகாடமியில் இசையின் பயன்பாடு இரண்டு வகையானது. ஒன்று அதை மருத்துவமாகக் கொள்வது. இன்னொன்று அதைக் கலையின் வெளிப்பாடாகக் குழந்தைக்கு ஆர்வமூட்டுவது.

 இசையை மருத்துவமாகப் பயன்படுத்தும் போது பெரும்பாலும் வாய்ப்பாட்டாகக் கற்றுத் தரப்படுகிறது. எல்லாரும் ஒன்றாகக் கூடிப் பாடும்போது மன அமைதி ஏற்பட்டுக் குழந்தைகள் நடத்தையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இவை தவிர இசைப்பெட்டி, தோல் கருவிகள் வாசிக்கவும் பழகுகிறார்கள்.

 கௌமாரம் பிரசாந்தி அகாடமி ஆசிரியர்கள் குழந்தைகளின் மற்ற ஆர்வங்கள் வெளிப்படத் தூண்டு கோலாகவும் இருக்கிறார்கள். தானியங்களுடன் நாட்டுச்சர்க்கரைச் சேர்த்து விதவிதமாக தின்பண்டங்கள் செய்வது, காகிதப் பைகள் தயாரிப்பது போன்ற சுயதொழில் பயிற்சியும் மாணவர்களுக்குக் கிடைக்கிறது. வாசல்படி விரிப்புகள், மாலைகள், காகித உரைகள், பலவிதமான பைகள் போன்றவையும் மாணவர்களால் இங்கு செய்யப்படுகின்றன. தொடர்ந்து அகாடமி காட்டும் ஈடுபாடும் தரும் பயிற்சியும், அக்கறையும் இவற்றுக்குக் காரணங்கள்.

 எதிர்காலத்தில் கௌமாரம் பிரசாந்தி அகாடமி, குழந்தைகளுக்காகவும், அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் கூட்டாகச் சேர்ந்து வாழும் ஒரு அமைப்பை உருவாக்க உள்ளது. இந்தக்குடும்பங்களுக்கு ஏற்றவாறு வீடுகளும், பொழுது போக்கு வசதிகளும் செய்து தரப்படும். குழந்தைகள் பள்ளிச் சூழ்நிலையைத் தாண்டி வாழவும், பணிபுரியவுமான சூழலை இந்தக் கூட்டுச் சமுதாய அமைப்பு உருவாக்கி உதவும். ஒருவர்க்கொருவர் அன்புடையவர்கள், ஒருவர் மீது ஒருவர் உரிமையுடையவர்கள் என்பது போலக் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் ஒரு தனித்த பார்வை கிடைக்கும்.

 நிறைவாக, கௌமார மடமும், கௌமாரம் பிரசாந்தி அகாடமியும் வீழ்நிலை மனவோட்டம் சார்ந்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீழ்நிலை மனவோட்டம் இயக்கத்திற்கு முழு ஆதரவும் தருவோம் என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 இந்த வாய்ப்பு அளித்த இவ்வமைப்பிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் ஹிந்த்.

bottom of page