
சமுதாயப்பணி
ஜி.ஆர்.ஜி. மகளிர் பாலிடெக்னிக் சமுதாயப் பாடத்தின் வழிக் கௌமார மடாலயத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள பெண்களுக்குத் தையல் (டெய்லரிங்) பூத்தையல் (எம்ப்ராய்டரி), தட்டச்சு (டைப்பிங்), வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுது பார்த்தல் (ரேடியோ, டி.வி, ரிபேரிங்) ஆகிய பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டன. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் பயனடைந்தனர்.
தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின்வழி வீட்டிற்குரிய அழகுப் பொருள்கள் தயாரித்தல், பூவேலைப்பாடுகள், வண்ணம் தீட்டுதல், சமையல் கலை, மசாலாப் பொருட்கள் தயாரித்தல், புகைப்படங்கள் ஓவியம் முதலியவற்றிற்குக் கண்ணாடித்தாள் உறை இடுதல் (போடோ லேமினேஷன்) போன்ற பலவகைப்பட்ட தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டது. இலவசமாக அளிக்கப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், கல்லூரி முதல்வர், வங்கி அலுவலர் சிறுதொழில் மையத்தின் திட்ட அலுவலர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்தப் பயிற்சி வகுப்பின் நிறைவில் பயிற்சி பெற்ற அறுபதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
துடியலூர் மணியன்குலம் காளியம்மன் அறக்கட்டளை
2013 ஆம் ஆண்டில் துடியலூர் மணியன்குலம் காளியம்மன் அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது. இவ்வறக்கட்டளையைத் துடியலூர் மணியகாரர் குமாரசாமி கவுண்டர் ஏற்படுத்தியுள்ளார். இது தவத்திரு. குருமகா சந்நிதானங்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. அறக்கட்டளையின் மூலமாக கல்வி, மருத்துவம், திருக்கோயில் திருப்பணி, திருமண உதவி, விளையாட்டு ஆகியவற்றுக்காக நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ரூ.1,76,82,850 (ரூபாய் ஒரு கோடியே எழுபத்து ஆறு இலட்சத்து எண்பத்து இரண்டாயிரத்து எண்ணுற்று ஐம்பது)ஐ பொருளாதாரத்தில் பின்தங்கிய 422 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் நடும் விழா
திருமடம், திருக்கோயில்கள், கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் முதலில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறும். தவத்திரு குருமகாசந்நிதாங்களின் நாண்மங்கல விழாவின் பொழுது ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் நடப்படும். சுவாமிகளின் 50 ஆவது நாண் மங்கல தொடக்க விழாவில் 50 வகையான மரக் கன்றுகள் வகைக்கு 2 ஆக 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
27 நட்சத்திரத்திற்கும் உரிய 27 வகையான நட்சத்திர மரக்கன்றுகள் வைக்கப்பட்டு அவைகள் நன்கு வளர்ந்து அற்புதக் காட்சியளிக்கின்றன. திருமடம், திருக்கோயில், பள்ளி வளாகம் முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமைப் படர்ந்திருக்கும் இடமாகக் காட்சியளிக்கின்றன. இவைதவிர மூலிகைத் தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளைப் பாதுகாத்தல்
திருமடத்திற்கு அருகிலுள்ள சின்னவேடம்பட்டி ஏரியை தூர்வாரிச் சுத்தம் செய்து நீரைச் சேமிப்பதற்கு வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து இப்பணி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. நீராதாரத்தை பெருக்க அரியவகை மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது.
கோவில்பாளையத்தில் உள்ள கௌசிகா நதியும் சிங்காநல்லூர் குளமும் இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் தவத்திரு. குருமகாசந்நிதானங்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இணையவழி நல்லுரை
தவத்திரு. கஜபூசைச் சுந்தரசுவாமிகள் தமிழாய்வு மையம் சார்பில் தீ நுண்மி காலத்தில் இணையவழி நல்லுரை நிகழ்ச்சி 21-05-2020 அன்று தொடங்கப்பட்டது. பேராசிரியர்களும், தமிழறிஞர்களும், ஆசிரியர்களும், கலைஞர்களும் சிறப்புரையாற்றினார்கள். இதுவரை 100 அமர்வுகள் இணையவழி நல்லுரையில் நடைபெற்றுள்ளது.
கௌமார மடாலய ஊடகப்பிரிவு மடாலயப்பள்ளி மாணாக்கர்களுக்குத் தேசபக்திப்பாடல்கள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றைப் பாட வைத்து வலையொளி, காணொளி மூலமாக ஒலி பரப்பப்பட்டு வருகின்றது. மேலும் ஆன்மீகம், இலக்கியம், தேசபக்தி, நாட்டிற்கு உழைத்த நல்லவர்கள் பற்றி சிறப்புரையாற்றி வருகின்றனர். திருமடத்தின் நிகழ்ச்சிகள், மாணாக்கர்கள் பாடும் பாடல்கள், பேச்சுக்களை உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கானோர் பார்த்தும், கேட்டும் பாராட்டி வருகின்றனர்.
இணையவழி பேச்சுப்போட்டிகள்
தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகள் தமிழாய்வு மையத்தின் சார்பில் காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணாக்கர்களுக்கு காமராசரைப் பற்றி 10 தலைப்புகள் கொடுத்து போட்டி நடத்தப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் இணைய வழியில் கலந்து கொண்டு காணொளிகளை அனுப்பி வைத்தனர். 20 மாணாக்கர்களுக்குச் சான்றிதழும், பரிசும் அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கப்பட்டது.
15-08-2020 அன்று சுதந்திர தினவிழாவையொட்டி தமிழக விடுதலைப் போராட்ட வீரர்கள் 20 பேர்களைப் பற்றிய தலைப்புகள் கொடுக்கப்பட்டன. உலகம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.
சமூகத் தொண்டு (தீ நுண்மி)
கௌமார மடாலயத்தில் தீ நுண்மி காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை குருமகா சந்நிதானங்கள் தொடங்கி வைத்தார்கள். சின்னவேடம்பட்டி பகுதியில் தங்கியிருக்கும் 100 வடமாநிலக் குடும்பங்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய் முதலான குடும்பத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும், உணவும் மே 2020 இல் வழங்கப்பட்டது.
இராமானந்த அடிகளார் கல்வி அறக்கட்டளை, நல்லறம் அறக்கட்டளை, துடியலூர் மணியன்குலம் காளியம்மன் அறக்கட்டளை சார்பில் கிராமக்கோயில் பூசாரிகளுக்கு ஜூன் 2020 இல் ரூ.2,50,000/- நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஏப்ரல், மே 2020 இல் 20 நாட்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ளவர்களுக்குத் தினமும் 500 பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
தீ நுண்மியிலிருந்து விடுபட உலகப்பெருவேள்வி
குருமகாசந்நிதானங்கள் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீ நுண்மி கிருமியிடமிருந்து மக்களைக் காக்கவும், சுகவாழ்வு பெறவும் உலக நலன் வேண்டி 22-07-2020 முதல் 24-07-2020 முடிய மூன்று நாட்கள் ஆறுகால வேள்வியை கௌமார மடாலயத்தில் நடத்தினார்கள்.
வேள்வி செய்வோர், ஓதுவாமூர்த்திகள் பலரும் பங்கேற்று சிறப்பாக நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் அட்ட வீரட்டானத் தலங்களின் பதிகப் பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டு நிறைவில் பேரொளி வழிபாடு செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் கந்தசஷ்டி பாராயணம்
சிரவை ஆதீனம், பேரூர் ஆதீனம் இணைந்து நடத்திய உலகம் முழுவதும் கந்த சஷ்டி பாராயணம் ஆடி 25 ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்துகொண்டனர். வள்ளி கும்மி, ஒயில் கும்மி, சலங்கையாட்டம், காவடியாட்டம், திருவிளக்கு வழிபாடு எனப்பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆதீனங்கள், அருளாளர்கள், அடியார்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர்.
சிரவையாதீன அருங்காட்சியகம்
தவத்திரு.குருமகாசந்நிதானங்களின் திருவுளப் பாங்கின் வண்ணம் சிரவையாதீன அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது.
அருங்காட்சியகத்தில் தவத்திரு. தண்டபாணி சுவாமிகள், தவத்திரு.இராமானந்த சுவாமிகள், தவத்திரு.கந்தசாமி சுவாமிகள், தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகள், தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் திருவுருவப்படங்கள், தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள் படங்களும், ஆங்கிலக் கவிஞர்கள், அறிஞர்கள் படங்களும், கணிதவியல் அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், வரலாற்று அறிஞர்கள், இசைப் பேரறிஞர்கள், உலகப் புகழ்ப்பெற்ற ஓவியக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பறவைகள், பூக்கள், மரங்கள், ஆறுகள், விலங்குகள், சித்தமருத்துவம், ஹோமியோபதி, அலோபதி மருத்துவம் என இருநூறு படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் படங்களும், அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. இருநூறு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விரிவான செய்திகளை அறிந்து கொள்ள விரைவுக் குறி (QR) கோடும் கொடுக்கப்பட்டு காணொளி காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தினமணி தமிழ்மணி 2008 முதல் 2020 வரை வைக்கப்பட்டுள்ளது. 2015 முதல் இளைஞர்மணி, மகளிர் மணி, வெள்ளி மணி, சிறுவர் மணி, 2011 முதல் கொண்டாட்டம் ஆகியவை தனித்தனியாக ஆண்டுவாரியாக பைண்டிங் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகத் தமிழ் நாளேடுகளின் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்கள் 21.06.2010 முதல் 27.06.2010 வரை தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. தினமணி நாளிதழ் தொகுப்பினை கௌமார மடாலயப் பள்ளித் தலைமையாசிரியர் செய்து வைத்தார்.
கணிதம் சம்பந்தப்பட்டவைகளும், அறிவியல் கண்டுபிடிப்புகள், கைவினைப் பொருட்கள், திருமடத்தின் வெளியீட்டு நூல்கள் என காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்து அருங்காட்சியத்தில் வரலாற்று நிகழ்வுகள், நீர்நிலைகள், சுற்றப்புறச் சூழல் பற்றிய கருத்துகள் என வைக்க குரு சந்நிதானங்கள் திருவுளம் கொண்டுள்ளார்கள். அவை இனிவரும் காலங்களில் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மிகச் சிறப்பான அருங்காட்சியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆங்கில வழிக்கல்வி
தவத்திரு. இராமானந்த அடிகளார் மேல்நிலைப்பள்ளி தமிழ்வழியில் மட்டும் செயல்பட்டு வந்தது. 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் அரசு அனுமதி பெற்று 6 முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும் மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. பள்ளியின் செயலாளர் தவத்திரு. குமரகுருபர சுவாமிகளின் சீரிய முயற்சியால் அரசிடம் இருந்து அனுமதி பெற்று சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டதால் மாணாக்கர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.