top of page
மாநில முருகபக்தர்கள் பேரவை அறக்கட்டளை

முருக வழிபாடு தமிழகத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாக மட்டும் அன்றி நோய் தீர்க்கும் மருத்துவனாகவும், வருபொருள் உரைக்கும் நிமித்திகனாகவும், போர்களில் வெற்றியைத் தேடித்தரும் வேலனாகவும் முருகப்பெருமான் போற்றப்படுகிறார். அது மட்டுமல்ல; தமிழ்த் தெய்வம் என்பதற்கேற்பத் தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவனாகவும் புகழப்படுகிறார். சிவனார் மனங்குளிர உபதேச மந்திரம் இரு செவிமீதினும் பகர்ந்து தகப்பன் சாமியாகிய ஞானபண்டிதன்தான் பாகுகனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளனாகவும் விளங்கி உலகியல் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் குருநாதன் அவரே என முன்னிலைப் படுத்தப்படுகிறார்.

 இத்தகைய தண்டமிழ்க் கடவுளாம் சுடர்மிகும் வேலவனின் வழிபாட்டை ஏராளமானவர்கள் பற்பல வகைகளில் பக்தியுடன் கடைப்பிடித்து உறுதியான நற்பயனைப் பெற்று வருகின்றனர். இத்தகைய அன்பர்கள் பலர் தமக்குள் பயனுள்ள அமைப்புக்களை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த அடியார் பெருமக்கள் எல்லாம் கௌமாரர்களே. இவ்வாறு மாநிலம் முழுவதும் பரவி முருகவேளைப் பரவும் அமைப்புக்களைப் பற்றி அறிந்து கொண்டு அத்திருப்பணிகளை இணைக்கும் ஒரு பாலமாகத் திகழ்கிறது மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை.

      இத்தகைய ஒரு சமய அமைப்பு இருந்தால் நலம் என்னும் கருத்து உருவான உடனே முதல் நடவடிக்கையாகக் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கௌமார அன்பர்களைக் கூட்டி 1988 இல் கௌமார மடத்தில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இதில் இந்தப் பேரவையின் இன்றியமையாமை நன்கு உணரப்பட்டது. சோதனை அடிப்படையில் முதலில் கோவில்பாளையம் வட்டார முருக பக்தர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது. போற்றுதலுக்குரிய தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அவர்களைச் சிறப்புத் தலைவராகவும், திரு.வீ. ஆறுமுகம் அவர்களைச் செயலாளராகவும் கொண்டு 21.12.1990 அன்று சங்கம் முறையாகச் செயல்படத் தொடங்கியது.

 இதன் அடுத்த நிலையாகத் தமிழகம் முழுவதிலும் உள்ள முருக பக்த அமைப்புக்களை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு 1991 இல் உருவானது தான் மாநில முருகபக்தர்கள் பேரவை. இதில் இன்றுவரை முந்நூற்றுக்கு மேற்பட்ட முருகவழிபாட்டு அமைப்புக்கள் பதில் செய்யப்பட்டுள்ளன.

 இப்பேரவையின் முதல் மாநில மாநாடு 1992 ஜனவரியில் பழனியில் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஜனவரியில் மதுரையில் பாண்டி மண்டல மாநாடு இனிதே நிகழ்ந்தேறியது. பேரவையின் சிறப்புத் தலைவராக இருந்து வழிகாட்டிக் கொண்டிருந்த தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் 1994 ஆம் ஆண்டு தம் குருநாதரின் திருவடி நீழலை அடைந்தார். சிரவையாதீன கர்த்தர் அவர்களே பேரவையின் சிறப்புத் தலைவர் என்னும் நடைமுறைக்கேற்ப இப்பொழுது தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்கள் சிறப்புத் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்திச் செல்கிறார். திரு.வீ. ஆறுமுகம் அவர்களே ஊக்கம் மிக்க செயலாளராகத் திறம்படச் செயலாற்றி வருகிறார்.

 2000 ஆம் ஆண்டு மே மாதம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் முருகபக்தர் பேரவை மாநாடு பழனியில் நன்கு நடைபெற்றது. அதே ஆண்டு டிசம்பர்த் திங்கள் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய ஆறுமாவட்ட மாநாடு ஈரோட்டில் மிக விமரிசையாக நிகழ்ந்தேறியது. பேரவையின் சிறப்புத்தலைவரும் சிரவையாதீனகர்த்தரும் ஆகிய தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் அருளாட்சி ஏற்பு தவிர்க்க முடியாத காரணங்களால் திருப்பழனி அருள்மிகு தண்டாயுதக் கடவுளின் சந்நிதியில் நடைபெறவில்லையே என்னும் ஓர் ஏக்கம் பக்தர்களின் உள்ளத்தில் இருந்துகொண்டே இருந்தது. இந்த மனக்குறை நீங்கச் சுவாமிகள் பட்டமேற்ற ஏழாவது ஆண்டு நிறைவேறுவதை அருளாட்சி விழாவாகப் பழனியில் நடத்த வேண்டும் என இறைவன் திருவருளையும் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகளின் குருவருளையும் முன்னிட்டு முடிவு செய்யப்பட்டது. இந்தப் பெரும் பொறுப்பை மாநில முருகபக்தர்கள் பேரவை ஏற்றுக்கொண்டு 2001 டிசம்பர்த் திங்கள் திருப்பழனியில் வெகு சிறப்பாக நடத்தி ஆதீன அன்பர்களின் மனக்குறையை நீக்கி மகிழ்வித்தது.

 2009 ஆம் ஆண்டு சிரவையாதீனத்தின் நூற்றாண்டு விழா ஆண்டாக அமைந்தது. அதனையொட்டி மடாலய ஆலயங்கள் அனைத்திலும் பெரிய அளவில் கண்கவர் திருப்பணிகள் செய்யப்பட்டன. கிடைத்தற்கரிய இந்த நல்வாய்ப்பைப் பேரவை பயன்படுத்திக் கொள்ள விழைந்ததன் விளைவுதான் இரண்டாவது மாநில மாநாடு. இது 2009ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கௌமார மடலாயத்தில் பெரும் சிறப்புடன் நிறைவேறியது.

 முருகபக்தர்கள் பேரவை மாநாடு என்றால் அதில் சந்நிதானங்களின் அருளுரைகள், இலக்கியச் சொற்பொழிவுகள், திருமுறை திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சிகள், எழுச்சி மிக்க ஊர்வலம், நினைவுமலர் வெளியீடு முதலிய பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய கூறுகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். இவற்றிற்கிடையில் பேரவையின் நிர்வாகிகள் கூடித் தீர்மானங்களைப் பரிசீலித்து நிறைவேற்றுவர். தமிழக அரசு இந்தத் தீர்மானங்களைப் பரிவுடன் பரிசீலித்துப் பெரும்பாலும் நிறைவேற்றுகிறது. இதற்காகத் தமிழக அரசிற்கும் குறிப்பாக இந்து சமய அறநிலை ஆட்சித்துறைக்கும் பேரவை தன் நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறது. இந்த மாநாடுகளில் வெளியிடப்படும் நினைவு மலர்கள் கட்டுரைகள், கவிதைகள், கௌமார இலக்கிய அறிமுகம், முருக வழிபாட்டு வகைகள் முதலியவற்றை உள்ளடக்கியக் கருவூலமாக கண்கவர் தெய்வீகப் படங்களுடன் அமைகின்றன. முருகனடியார்களுக்கு மட்டுமல்லாமல் சமயத்தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்குமே பேரவை மலர்கள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு செய்திச் சுரங்கமாக உள்ளன.

 மாநில முருக பக்தர்கள் பேரவை 26.11.2010 அன்று கோவை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஓர் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளையின் பதிவு எண் 1226/2010 ஆகும். இனி இது அதிகார பூர்வமான இடங்கள் எல்லாவற்றிலும் மாநில முருக பக்தர் பேரவை அறக்கட்டளை என்றே வழங்கப்படும். தமிழகம் மட்டுமல்லாமல் எங்கு முருக வழிபாட்டு அமைப்பாக இறைபணி புரிந்து வந்தாலும் அவை அனைத்தையும் இந்த அறக்கட்டளையின்வழி ஒன்றாக இணைத்துக் கௌமார நெறிக்கு ஓர் வலிமையான அரணை ஏற்படுத்த வேண்டும் என்பது சிரவையாதீனத்தின் சித்தம் ஆகும்.

 29, 30.12.2012 ஆம் ஆண்டு மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளையின் மூன்றாவது மாநில மாநாடு இரத்தனகிரி, பகீரதன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டு ஊர்வலம் இரத்தினகிரி, பாலமுருகன் கோவிலில் தொடங்கி மாநாட்டுப் பந்தலில் நிறைவு பெற்றது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 38 கட்டுரைகள் அடங்கிய சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

 20, 21.10.2018 மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளையின் நான்காவது மாநில மாநாடு திருநெல்வேலியிலுள்ள சங்கீத சபாவில் நடைபெற்றது. தாமிரபரணி புஷ்கரணி விழாவின் பொழுது 2 நாட்கள் மாநில மாநாடு நடைபெற்றதுச் சிறப்புக்குரியதாகும்.

 மாநாட்டு விழாவில் சிறப்பு மலரும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் நெல்லை இலக்கியங்கள் நூலும் வெளியிடப்பட்டன.

bottom of page