
கஜபூசைச் சுந்தர சுவாமிகள்
போற்றிகௌ மாரர்கள் புகலிட மான
புண்ணியத் திருவடி நண்ணிய பரனே
ஏற்றிசைக் கடலிடை எழுசுடர் போல
எழில் மயில் மிசைவரும் அழகிய குகனே
நாற்றிசை யவர்களும் போற்றிசைந் தேத்தும்
நந்தன வளர்சிர வணபுரத் தரசே
ஏற்றிசைப் பரன்விழி தோற்றிய புகழ்சால்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே.
- திருப்பள்ளி எழுச்சி
சிரவையாதீனத்தின் மூன்றாம் குருமகாசந்நிதானமாகப் பெரும்புகழுடன் விளங்கி, செயற்கரிய செயல்கள் பலவற்றைச் சிறப்பாக நிறைவேற்றி, திருப்பணி வேந்தர், அலங்காரச் சக்கரவர்த்தி, பெரியபுராணப் பேரறிஞர் எனப் பலவாறு போற்றப்படும் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் சீர்வளர்சீர் கந்தசாமி சுவாமிகளின் பூர்வாசிரமத் தம்பி திரு. வேலப்ப கவுண்டர், திருமதி. சின்னம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாக 29.11.1929 அன்று தோன்றினார். இது சுக்கில ஆண்டு கார்த்திகை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாக நட்சத்திரம் கூடிய நன்னாள் ஆகும்.
சிரவணம்பட்டிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரைக் கல்வி கற்ற பிறகு கந்தசாமி சுவாமிகளிடம் தமிழ்ப் பயிற்சியும் சமயப் பயிற்சியும் பெற்றார். ஒருமுறை கேட்ட அளவில் செய்திகளையும் செய்யுள்களையும் நன்கு நினைவில் பதித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார். தமக்குத் தெரிந்ததைப் பிறருக்குத் தெளிவாக உணர்த்தும் வல்லமை அவருக்கு இயல்பாகவே வாய்ந்திருந்தது.
நம் சுவாமிகள் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியின் முதல் மாணவராகப் பயின்று 1957ஆம் வருடம் தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றார். தாம் பயின்ற கல்லூரியிலேயே சில காலம் ஆசிரியப் பணியையும் ஏற்றார். சந்நிதானங்களின் முதுமை நிலையிலும் சமாதியடைந்த பிறகும் திருமடத்தில் இருந்த மூத்த துறவிகளோடு கலந்தாலோசித்து மடாலயப் பொறுப்புக்களையும் செம்மையாக நிர்வகித்து வந்தார்.
தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் 9.2.1964 அன்று சிரவையாதீனத்தின் மூன்றாவது குருமகாசந்நிதானமாகத் திருப்பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் அருளாட்சி ஏற்றார். அந்த நாளைச் சிரவையாதீன வரலாற்றின் பொற்காலத் தொடக்கநாள் எனலாம். அவர் தொடங்கிவைத்த கௌமார மடாலயத்தண்டபாணி கோவில் திருப்பணியும் மற்ற அறச்செயல்களும் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே வருகின்றன. கஜபூசைச் சுவாமிகளின் நல்லாசியால் இது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்கு ஐயமே இல்லை .
சிரவணபுரம் கௌமார மடாலயம் தண்டபாணிக்கடவுள் திருக்கோவிலில் முன்மண்டபம், விமானம், மடப்பள்ளி, தெற்குப் பிரகார மண்டபம் ஆகியன கட்டப்பெற்றன. இந்தக் குடமுழுக்கு 1.6.1966 அன்று நடைபெற்றது. அடுத்து 1971 இல் இராஜகோபுரம் எழுந்தது. 25.1.1978 புதன்கிழமை அன்று ஆலய வளாகத்தில் கட்டப்பட்ட புதிய சரவணப்பொய்கைச் செய்குளத்தில் முதல் முறையாகத் தெப்பத் திருவிழா நடைபெற்றது. 1978 இல் அவிநாசிலிங்கேசுவர் கற்றளியும் 1982இல் பாண்டுரங்கர் ஆலயமும் எழுந்த வரலாறு தனியாக விதந்துரைக்கத்தக்கவை.
கோவையில் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்து பிறகு நீதிஅரசராக விளங்கிய அறிஞர் திரு. ஆர். செங்கோட்டு வேலன் அவர்களும் இவ்வரலாற்றாசிரியரும் வேறு ஒரு கள ஆய்விற்காகப் பிரமியம், சிலம்பகவுண்டன்வலசு ஆகிய சிற்றூர்களின் சிவாலயங்களைப் பார்வையிடுவதற்காக 6.6.1977 அன்று சென்றிருந்தனர். அப்போது சிலம்ப - கவுண்டன்வலசில் இருந்த திருக்கோவில் வழிபாடின்றி பழுதடைந்திருந்ததைக் கண்டனர். அந்த ஆலயத்தை அப்படியே ஏதாவது ஒரு பெரிய கோவிலுக்கு அளித்துவிட அதன் உரிமையாளர் நினைப்பதையும் அறிந்தனர். அந்தக் கற்றளியைக் கௌமார மடாலயத்திற்குக் கொண்டுவந்துவிடலாம் என்னும் வேட்கை இந்த வரலாற்றாசிரியருக்கு எழுந்தது. வழக்கறிஞரோடு இதுபற்றி உரையாடிய போதும் இச்செயல் செய்து முடிக்கமுடியாத ஒன்று என்றே தோன்றியது.
அந்த அவிநாசிலிங்கேசுரர் கற்றளி காங்கயத்தை அடுத்த சிலம்பகவுண்டன் வலசில் திரு. வெங்கடரமணக் கவுண்டர் அவர்களால் தம் தோட்டத்தில் 1919ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முழுவதும் கருங்கற்களாலாகிய அந்த ஆலயம் அளவானதாகவும் மிக்க அழகானதாகவும் அமைந்திருந்தது. கோவில் எழுந்து சில காலம் பூசை, விழாக்கள் எல்லாம் சிறப்பாக நடைபெற்று வந்தன. பின்பு தவிர்க்க முடியாத காரணங்களால் வழிபாடுகள் நின்று கோவிலும் கவனிப்பாரற்றுப் போயிற்று. ஆலயத்தின் சிறுபகுதியும், கருணாம்பிகையம்மன் திருமேனியும் பழுதடைந்துவிட்டன. மூலவராகிய சிவலிங்கத் திருமேனி சற்றும் பழுதுபடாமல் நன்றாக இருந்தது.
இந்தக் கற்றளியைப்பற்றிய செய்தியும், கௌமார மடாலயத்தில் கொணர்ந்து நிறுவலாம் என்னும் கருதுகோளும் தவத்திரு சுந்தரசுவாமிகளிடம் ஏழாம் தேதியன்று இவ்வரலாற்றாசிரியரால் தெரிவிக்கப்பட்டன. தவத்திரு. சுவாமிகள் இவ்வரலாற்றாசிரியரையும் அழைத்துக்கொண்டு போய் 11.6.1977 அன்று ஆலயத்தைப் பார்வையிட்டார். வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் அந்தக் கற்றளியைப் பெயர்த்தெடுத்துவந்து அங்கிருக்கும் அமைப்பு சற்றும் மாறாமல் அப்படியே கௌமார மடாலயத்தில் நிறுவ வேண்டும் எனத் தீர்மானித்து விட்டார்.
அவிநாசிலிங்கேசுவரர் கற்றளியை எழுப்பிய திரு. வெங்கடரமணசாமிக் கவுண்டரின் பேரரும், அதன் உரிமையாளருமாகிய திரு.என்.எஸ். இராமசாமிக் கவுண்டர் அந்தச் சிவாலயத்தைப் பிரிந்துத் திருமடத்தில் நிறுவ முழுமனதுடன் ஒப்புதல் அளித்தார். என்றாலும் எல்லோருடைய மனதிலும் இது இயலக்கூடிய ஒன்றா என்ற சந்தேகம் ஆழமாகப் பதிந்திருந்தது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்
என்னும் தமிழ்மறைக்கு ஏற்ப 1977ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆலயத்தைச் சற்றும் சிதைவில்லாமல் பிரித்தெடுக்கும் பணி தொடங்கியது. கற்களுக்கு முதலில் வரிசை எண்கள் இடப்பட்டன. பிறகு அவற்றிற்குச் சற்றும் சிதைவு ஏற்படாமல் பிரித்தெடுக்கப்பட்டன. 6 அல்லது 7 அடி நீளம், 1 1/2 அடி அகலம், 1 அடி கனம் உள்ளவை அக்கற்கள். தீபஸ்தம்பம் 23 அடி உயரம். விளக்குத் தூணுக்கும் நந்திக்கும் சிறுசிறு தனி மண்டபங்கள். இவையாவும் பழுதுபடாமல் பிரித்து எடுத்துச் சரக்குந்துகளின் வழிப்பத்திரமாகக் கௌமார மடாலயத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன.
கௌமார மடாலயத்தின் முதன்மைக் கோவிலாகிய தண்டபாணிக் கடவுள் ஆலயத்திற்கு வடக்கே, மேற்குமுகமாக அந்த அவிநாசிலிங்கேசுவரர் சந்நதியை நிறுவும்போது, எல்லாக் கற்களையும் பலமுனையிட்டும், செதுக்கியும், இணைத்துச் செம்மைப்படுத்தி மூன்றே மூன்று மாதங்களில் திருப்பணிகள் சிறப்பாக நிறைவுற்றன. அன்றைய நிலையில் இது செயற்கரும் செயல் ஆகும். 23.1.1978 அன்று திருக்குடமுழுக்கும் பார்த்தவர்கள் அனைவரும் வியப்புற நடைபெற்றது. பழைய ஆலயத்திலிருந்த அம்பிகையின் திருவுருவம் சிதைந்திருந்ததாதலின் புதிய கற்சிலை செய்து எழுந்தருளுவிக்கப்பட்டது. இப்பொழுது இந்த ஆலய வழிபாட்டிற்கு ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் மகா சிவராத்திரியன்றும் ஏராளமான பக்தர்கள் கூடுகிறார்கள்.
சிரவை ஆதீனத்திற்கும் திருமாலின் ஒரு வடிவமாகிய பாண்டுரங்கப் பெருமானுக்கும் உள்ள தொடர்பு பழமையானது. என்றாலும் மடலாயத்தில் பாண்டுரங்கர் கோவில் எழுந்த வரலாறு ஒரு சோகமான பின்னணியை உடையது.
தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் பக்தமான்மியப் பெருநூல் பாண்டுரங்க விட்டலனின் பெருமையைப் போற்றுவது. இந்நூலின் அரங்கேற்றம் 24.5.1928 முதல் 5.6.1928 வரை நடைபெற்றது. அரங்கேற்றத்தின் பத்தாவது நாள் ஆன 2.6.1928 அன்று மாலை ஞானேசுர கதி முடிவுற்றது. மறுநாள் துக்காராமரின் வரலாற்றை அரங்கேற்றுவதாகக் கூறிக் கந்தசாமி சுவாமிகள் அன்றைய நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அப்போது விளாங்குறிச்சி என்னும் ஊர்க் கோவிலுக்காகச் செய்யப்பெற்ற உருக்குமணி சத்தியபாமையோடு கூடிய வேணுகோபால சுவாமியின் ஐம்பொற்சிலைகள் சிலநாள் மடாலயத்தில் இருக்கட்டும் என்னும் எண்ணத்துடன் அவ்வூர் அன்பர்கள் எடுத்துக்கொண்டு வந்தனர். சற்றும் எதிர்பாராமல் பக்தமான்மிய அரங்கேற்றத்தில் திருமாலின் பூரண அவதாரம் எனப்படும் கண்ண பெருமானின் அர்ச்சாவதார மூர்த்தியின் வருகை அன்பர்களை அகமகிழச்செய்தது. இந்த நிகழ்ச்சியைத் திருவாமாத்தூர் திரு. தி.மு. செந்தினாயக ஐயா,
சிரவணபு ரத்தில்அருட் சீர்க்கந்த சாமி
பரவுபக்த மான்மியத்தின் பண்பை - விரவும்
பலர்க்கும் உணர்த்தஎழில் பாண்டுரங்கன் அன்பால்
துலக்கமுற்றான் விம்பஉருத் தோய்ந்து
என அப்போதே பதிவு செய்துள்ளார். அடுத்த நாள் வரலாறாகிய துக்காராமர் கதியில் அவருடைய முன்னோருள் ஒருவராகிய விசுவம்பரருக்குத் திருமால் கனவில் சொன்னபடி, மாந்தோப்பு ஒன்றில் உருக்குமணியுடன் சேர்ந்து பாண்டுரங்கரின் சிலை கிட்டியது என்னும் வரலாறு (செய்யுள் 11-15) இடம் பெற்றது. துக்காராமர் தொடர்பான அந்தப் பழைய நிகழ்ச்சி பக்தமான்மிய அரங்கேற்றத்தின் போது மறுபடியும் நிகழ்ந்த தெய்வீகத்தை நினைந்து பக்தர்கள் பரவசமுற்றனர். விளாங்குறிச்சியிலிருந்து வந்த அந்தத் திருவுருவங்கள் இன்றுவரைக் கௌமார மடாலயத்திலேயே நிலையாக உள்ளன. அவற்றை வேணுகோபாலர் என்று சொல்லாமல் பாண்டுரங்கர் என்று வழங்குவதே சிரவையாதீன மரபு. இவ்வாறு வேணுகோபலனாக மாறுவேடம் பூண்டு 1928 இல் கௌமார மடாலயத்திற்கு எழுந்தருளிய பாண்டுரங்கப் பெருமான் சரியாக 54 ஆண்டுகள் கழித்துத் தன் சொந்த வடிவிலேயே முறையாக அர்ச்சாவதாரம் எடுத்துத் திருக்கோவில் கொண்டுவிட்டார் என்பதே உண்மை . இதற்காக அவர் செய்த திருவிளையாடல் உலகியல் நோக்கில் சோகமயமானது தான்.
கோவையில் புகழ்பெற்ற ஆபரண உற்பத்தி நிறுவனம் உதயம் மேனுபேக்சரிங் ஜூவல்லரி. திருமிகு. கே.ஆர். பாண்டுரங்கம் செட்டியார் என்னும் பெருவள்ளல் இதன் உரிமையாளர். அவருக்குச் செல்வி. உதயசுந்தரி என்னும் ஒரு மகள் இருந்தாள். உரிய பருவத்தில் அவளுக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு முன்பே அம்மகள் இறையடி சேர்ந்துவிட்டாள். அதனால் துயரக்கடலில் ஆழ்ந்த பாண்டுரங்கம் செட்டியார் இணையர் ஒருவாறு தம்மைத் தேற்றிக்கொண்டு தம் மகள் நினைவாக ஏதாவது ஒரு நிலைத்த அறம் செய்யவேண்டும் என உறுதி பூண்டனர்.
அம்முடிவின்படி 1982இல் உதயசுந்தரியின் பத்தாவது ஆண்டு நினைவாகக் கௌமார மடாலயத்தில் பண்டரிபுரத்தில் உள்ள ஆலய விமான அமைப்புடன் பளிங்குக் கற்களாலான இரகுமாயி உடனமர் பாண்டுரங்கர் கோவில் ஒன்றை எழுப்பத் தவத்திரு சுந்தர சுவாமிகளின் ஒப்புதலை வேண்டினர். சுவாமிகள் அனுமதி அளித்ததால் ஆலயம் எழுந்தது. இந்த ஆலயத்தின் திருக்குட நீராட்டுப் பெருவிழா 7.4.1982 அன்று நடைபெற்றது.
பண்டரிபுரத்தில் உள்ளது போன்ற அமைப்பிலேயே பாண்டுரங்கப் பெருமானும், தனிச் சந்நிதியில் இரகுமாயித்தாயாரும் சேவை சாதிக்கின்றனர். மண்டபத் தூண்களில் பெரிய திருவடி, சிறிய திருவடி ஆகியவர்களோடு பாண்டுரங்கனைப் பாடிப் பரவிய அடியவர்களின் சுதை உருவங்களும் செல்வி. உதயசுந்தரியின் உருவமும் இடம்பெற்றுள்ளன. பாண்டுரங்கர் திருவுண்ணாழியின் (கருப்பக்கிரகம்) திருக்கதவு பாகவதர் வரலாறுகளைத் தம்முட் சித்திரங்களாகக் கொண்ட பொற்றகடு வேயப்பட்டு விளங்குகின்றன. பண்டரியில் போலவே இங்கும் அடியார்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று பெருமாளின் திருவடிகளில் தலைவத்து வணங்கலாம். தவத்திரு . கஜபூசைச் சுந்தர சுவாமிகளின் அருளாட்சியில் நிகழ்ந்த அருஞ்செயல்களுள் இது குறிப்பிடத்தக்கது ஆகும்.
கோவை பாரதி பிரஸ் உரிமையாளர் திரு.ஜி.கே.ரங்கசாமிக்கவுண்டர் அவர்களும் கணபதி திரு.பி.குப்புசாமிக் கவுண்டர் அவர்களும் இணைந்து சௌர சமயத்தின் தலைமைத் தெய்வமாகிய சூரிய பகவானுக்குக் கௌமார மடாலய வளாகத்தில் ஓர் அழகிய எண்கோண வடிவக் கோவிலை எழுப்பியுள்ளனர். இங்கு மூலவராக ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சாரதியோடு அமர்ந்தவராகக் காட்சிதரும் சூரிய பகவானின் திருவுருவம் சிறப்பானது. இங்குச் சித்திரை முதல் தேதியன்று சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. 4.4.1982 அன்று திருக்குட நீராட்டப் பெற்றது. சூரியனை வழிபடும் அடியார்களுக்கு இதயம், கண், தோல் தொடர்பான நோய்கள் ஏற்படாது எனப் பழைய நூல்கள் கூறுகின்றன.
மடாலயத்தின் தலைமைக் கோவிலாகிய தண்டபாணிக் கடவுள் ஆலயத்தை ஆதீன முதல்வர் அளவாகச் செங்கல் திருப்பணியாகச் செய்திருந்தார். இரண்டாம் பட்டம் சுவாமிகள் தம் காலத்தில் இதைக் கற்றளியாக்க விரும்பினார். மூன்றாம் பட்டம் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் தம் குருநாதரின் விருப்பத்தை 1985 இல் நிறைவேற்றினார். இந்தத் திருப்பணி சாதாரணமான ஒன்று அல்ல. 12 அடி நீளம் 3 அடி அகலம் 2 1/2 அடி உயரம் உள்ள மூன்று பெரிய கற்களால் அடிமட்டம் வரையான கோவில் உருவாகியுள்ளது. 7 அடி உயரம் 4 அடி அகலம் 1 1/2 அடி உயரம் உள்ள பதினோரு கற்களால் மூன்று சுவர்கள், நிலவு ஆகியன அமைந்துள்ளன. இதற்கு மேலான கோவில் கட்டுமானம் 37 பெரிய கற்களால் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு இத்திருக்கோவில் 51 பெரிய கற்களால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்தக் கற்கள் தருமபுரி, பங்களாபுதூர் ஆகிய ஊர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மிகக் கெட்டியான கருங்கற்கள் ஆகும்.
கோவிலின் கழுத்துப்பகுதி (க்ரீவம்), அர்த்த மண்டபம் ஆகிய இரண்டும் மராட்டிய மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட செவ்வண்ணக் கற்களால் ஆனவை. கௌமார மடாலயத்தின் நூறாண்டுக்கால வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் நடந்த திருப்பணி (ஏறத்தாழ இரண்டரை ஆண்டு ) இதுதான். இக்கட்டுமானத்தில் பளுதூக்கி இயந்திரங்கள் முதலியன முதல் முறையாகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.
கருவறை விமானம் தஞ்சைப் பெரிய கோவில் தட்சிணமேரு விமானத்தின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. பல அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கலைப்படைப்பாகக் கஜபூசைச் சுவாமிகள் தண்டபாணிக் கடவுள் கோவிலை உருவாக்கியிருக்கிறார். இங்குள்ள கோமுகம், இராசிச் சக்கரம், மயில், கொடி மண்டபம் முதலியன சிறப்பானவை. இந்த மகத்தான திருப்பணியைச் செம்மையாக நிறைவேற்றிய சுவாமிகள் 2.9.1985 அன்று திருக்குட முழுக்காட்டினார். இப்பொழுது கொங்கு நாட்டில் உள்ள கலைச்சிறப்பு வாய்ந்த முருகன் கோவில்களுள் கௌமார மடலாயத்தின் தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.
சிரவணம்பட்டி பெரிய தோட்டம் திரு. சுப்பணகவுண்டர் கனவில் கூறியவாறு அவர் மகன் திரு. தருமண கவுண்டர் குடும்பத்தார் கௌமார மடாலயத்தில் தனியாக ஒரு அழகான சனீஸ்வரன் கோவிலை அமைத்துள்ளனர். எழில் மிக்க பீடத்தில் கம்பீரமாகச் சனிபகவான் நிற்கும் காட்சி கண்களைக் கவரக் கூடியது. இந்த ஆலயத் திருக்குட முழுக்கு 16.9.1989 அன்று நிறைவேறியது. இங்கு நடைபெறும் சனிப்பெயர்ச்சிச் சிறப்பு வழிபாட்டில் மக்கள் பல்லாயிரக் கணக்கில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பலர் வழிபாட்டுக்கு வருகின்றனர். கௌமார மடாலயக் கோவில்வளாகத்தில் மிகுதியான மக்களை ஈர்க்கும் சந்நிதியாக இது உள்ளது எனலாம்.
இவ்வாறாகக் கஜபூசைச் சுந்தர சுவாமிகளின் அருளாட்சிச் காலத்தில் கௌமார மடாலயத்தின் திருக்கோவில் வளாகம் அறுசமயக் கடவுளர்களையும் தன்பாற் கொண்டு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் சமய, சமரச, சமயாதீத வழிபாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கத் தொடங்கியது.
ஓர் ஆலயத்தின் சிறப்பு அதில் இடையறாமல் நிகழும் திருவிழாக்கள் ஆகும். விழவுமலி மூதூர் என்பது சங்கத்தமிழ்த் தொடர். இங்கும் மாதக்கிருத்திகை, சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித் திருவோணம், ஆடித் தெப்பம், ஆவணி விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசிக் கந்தசஷ்டி, கார்த்திகைத் தீபம், மார்கழிப் பாவைப் பூசை, வைகுண்ட ஏகாதசி, தைப்பூசம், மாசிச் சிவராத்திரி, பங்குனி உத்தரம் என மாதம் தவறாமல் சிறப்பு வழிபாடுகள் நடைபெறத் தொடங்கி அவைமேலும் மேலும் வளர்ந்து வருகின்றன.
திருக்கோயில்களில் வழிபாடுகள் தாய்மொழியில் நடைபெற்றால் மக்கள் அனைவரும் மனம் ஒன்றி, ஓரளவு புரிந்து கொண்டு, வழிபட முடியும் என்னும் கருத்தால் தமிழகத்தில் தமிழ் வழிபாட்டு இயக்கம் தோன்றியது. அதன் தொடக்க நிலையிலேயே தவத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிகர் என்னும் குன்றக்குடி அடிகளார், திருப்பேரூர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஆகியோருடன் இணைந்து தமிழ்வழிபாட்டைப் பரப்பத் தொடங்கினார். முதலில் 24.6.1953 அன்று தமிழ் அருச்சனையாகத் தொடங்கி 1954 இல் கணபதி விநாயகர் கோயிலில் தமிழ்க் குட முழுக்கையே நடத்திக் காட்டினார். அப்போது தொடங்கித் தமிழகத்தில் - குறிப்பாகக் கொங்கு நாட்டில் - ஆலய வழிபாடுகளும் வீடுகளில் வாழ்வியல் நிகழ்ச்சிகளும் தமிழிலேயே பெருமளவில் நடைபெற்று வருகின்றன. இதற்கு முழுமுதற்காரணம் சிரவையாதீனம் பேரூராதீனம் ஆகிய இந்தத் திருமடங்களின் பெருமுயற்சி தான் எனில் மிகையன்று.
கஜபூசைச் சுந்தர சுவாமிகளின் தலைமையிலும் வழிகாட்டுதலின்படியும் ஏராளமான திருக்கோயில்களில் திருப்பணிகளும் திருக்குடமுழுக்கும் நிகழ்ந்தன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை திருப்புக்கொளியூர் அவிநாசிலிங்கேசுவரர் ஆலயம், திருப்பெருந்துறை ஆத்மநாதர் ஆலயம், வெஞ்சமாக்கூடல் விகிர்தீஸ்வரர் ஆலயம், அமெரிக்க நாட்டு வர்ஜீனியா நகரின் தாமரைக் கோயில் ஆகியன ஆகும்.
ஆலயத்திருப்பணிகளோடு நூல்முறைக்கேற்றபடி தேர்களைச் செய்வதிலும் கஜபூசைச் சுவாமிகள் ஆர்வம் காட்டினார். சிரவையாதீனம் தண்டபாணிக் கடவுள் சித்திரத்தேர், வெள்ளித்தேர், அவிநாசித் தேர், திருப்பெருந்துறைத் தேர் ஆகியன இவரால் புதியனவாகச் செய்யப்பட்டனவாகும்.
நம் கஜபூசைச் சுவாமிகள் நல்ல சொற்பொழிவாளர். குறிப்பாகச் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்தில் பேரீடுபாடும் நிறைபுலமையும் கொண்டவர். நுட்பமான சாத்திரச் செய்திகளையும், இலக்கிய நயங்களையும் கேட்பவர்கள் அனைவரும் நன்கு புரிந்துகொண்டு மகிழும்படி உரையாற்றுவதில் பெருவல்லமை படைத்தவர்.
சுவாமிகள் பெரியபுராணத்தில் கொண்டிருந்த ஈடுபாடு மிக மிக அதிகம். திருமதி சொர்ணம்மாள் அறக்கட்டளை சார்பில் 1978 ஆம் ஆண்டு நிகழ்த்திய பெரிய புராணம் ஆய்வுச் சொற்பொழிவினை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தினார். பெரியபுராணத்தில் கவி நலம், பெரியபுராணத்தில் பக்திச் சுவை, பெரிய புராணத்தில் சமுதாயநோக்கு என மூன்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்.
தவத்திரு கஜபூசைச் சுவாமிகள் திருத்தல வழிபாட்டில் பேரீடுபாடு கொண்டவர். பல பணிகளுக்கிடையேயும் எப்படியாவது நேரத்தை ஒதுக்கி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாற்பது ஐம்பது அன்பர்களுடன் நான்கு ஐந்து நாட்கள் தல யாத்திரைக்கு ஏற்பாடு செய்துவிடுவார். ஒரு தலத்திற்குச் செல்லும் முன்பு அத்தலத்தின் சிறப்பைப் பற்றிப் பேருந்தில் ஒரு சொற்பொழிவே செய்துவிடுவார். தலயாத்திரையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் ஓதுவாமூர்த்திகள் வழிபாட்டையடுத்துத் தலபுராணத்தை விண்ணப்பம் செய்வார். சுவாமிகள் மேற்கொண்ட இத்தகைய திருத்தலப் பயணங்கள் சுவாமிகளையும் அவருடைய திருமடத்தையும் தமிழ்நாடு முழுவதும் அறிந்து கொள்ளத் துணைசெய்தது.
சுவாமிகளுக்கு யாப்பறிந்து பாப்புனையும் ஆற்றல் சிறப்பாக இருந்தபோதிலும் அவருடைய பல்வேறுபட்ட பணிகளின் பளுவால் இலக்கியங்களைப் படைக்க நேரம் கிடைக்கவில்லை. எனினும் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முப்பதுக்கும் மேற்பட்ட கோவில்களுக்குப் பதிகங்களைப் பாடியுள்ளார். இவரால் இயற்றப்பட்டுள்ள தோத்திரப் பதிகங்கள் அனைத்தும் ஒரே நூலாகச் சுந்தரர் சொற்றமிழ் என வெளியிடப்பட்டுள்ளது. இதில் சற்றேறக் குறைய 800 செய்யுள்கள் உள்ளன.
கஜபூசைச் சுந்தர சுவாமிகளின் படைப்புக்களுள் இலக்கிய வகையாகப் பார்க்கும்போது கந்தசாமி சுவாமிகள் வாழ்க்கை வரலாற்று வண்ணம் ஒப்புயர்வற்றது. எண்கலை வண்ண யாப்பு இயற்றுவதற்கு அரியது. அதிலும் ஒரு வாழ்க்கை வரலாறு என்றால் ஊர்ப்பெயர், மக்கட்பெயர் முதலிய இயற்பெயர்களை எடுத்துக்கொண்ட வண்ணக் குழிப்பில் அடக்குவது மிகக் கடினம். ஏராளமான சொற்களை விகாரப்படுத்த நேரும். அப்படியில்லாமல் ஆற்றொழுக்கான நடையில் அமைந்துள்ள இந்த வண்ணம் சுவாமிகளின் படைப்பாற்றலுக்குக் கட்டியம் கூறுகிறது. அவர் விரும்பியிருந்தால் மாலை, அந்தாதி, கலம்பகம் எனச் சிற்றிலக்கிய வகைகளைப் பொழிந்திருக்க முடியும் என்பதற்கு இந்த வண்ணமே சான்று.
தவத்திரு கஜபூசைச் சுவாமிகள் பழகுவதற்கு மிக இனியவர். அவரோடு தொடர்பு கொள்பவர்கள் எல்லோருமே சுவாமிகள் தம்மீது தனியான ஓர் அன்பு செலுத்துகிறார் என்றே கருதும்படிப் பழகுவார். அவர் நல்ல உழைப்பாளி. உடல் உழைப்பிற்கும் அஞ்சாதவர். அறிஞர்களை வரிசையறிந்து பாராட்ட வல்லவர். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் அவர்மீது அன்பு கொண்டிருந்தனர் என்பது அவருடைய தனிச்சிறப்பு.
பெரியமனை மாளிகைஎ டுத்து மனை புகுவிழாப்
பிரபலம தாப்புரிகு வோர்
பிரசமலர் அனைய நும் பாத முதல் வைத்திடப்
பிரியமொடு வரவழைப்பார்
அரியதொழி லாதிபர்கள் தாம்தொடங் குந்தொழில்கள்
ஆக்கமுட னே பெருகவே
ஆகிவரும் நும்கரத் தால்த் தொடங்கப் பெறுதல்
ஆசையொடு வரவழைப்பார்
உரியபல ஆலயப் பணி தேர்செய் நற்பணியும்
உம்திருவுளப் பாங்கினில்
உருவாக வேண்டும் எனவே, திருப்பணி மன்றம்
உள அன்பர் வரவழைப்பார்
கரிய முகில் நிறமாயன் அனைய ஒரு குருசாமி!
கருணை உருவே! வருகவே!
கவுமார நெறி, மடா லயநாத குறையாத
கலைஞான மதி வருகவே!
- தவத்திரு மருதாசல சுவாமிகள் (எ) தம்பி சுவாமிகள்
கௌமார மடாலயத்தின் உற்சவர் ஆகிய குமரகுருபரக் கடவுளைக் கிருத்திகை, தைப்பூசம் போன்ற சிறப்பு நாள்களில் நம் சுவாமிகள் திருமஞ்சனம் செய்து, நல்லாடை அணிவித்து, பூச்சூட்டி, காப்பிட்டு, திரு உலாக் கண்டு மகிழும் ஆத்மாநுபவத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றவர்கள் அதை மறக்கவே முடியாது.
கந்தா வருக! பரிமளச் செங்
கடம்பா வருக! யான் அடையும்
கதியே வருக! சிவபெருமான்
கண்ணில் தோன்றும் திருவருட் சம்
பந்தா வருக! ஒப்பு அருமெய்ப்
பரமா வருக! குறவர் மடப்
பாவை அமரர் பூவையர் தம்
பாகா வருக! குக்குடம் ஆம்
சிந்தா வருக! தேவர் தொழும்
தேவா வருக! சிமைய நடச்
சேந்தா வருக! இளைய அருள்(ச்)
செல்விக்கு உவகைப் பெருக்கு அளிக்கும்
மைந்தா வருக! வெற்றி மய
வடிவேல் அரசே! வருகவே!
மகிமை சிரவைத் தெய்வச்சிகா
மணியே! வருக! வருகவே!
- தவத்திரு கந்தசாமி சுவாமிகள்
குமரகுருபரரின் தெய்வத் திருமேனி கஜபூசைச் சுவாமிகளைக் கண்டு பேசும், சிரிக்கும், கேட்கும், மிரட்டும், கட்டளையிடும் என்னும் பேருண்மையை அருகில் இருப்பவர்கள் சுவாமிகளின் முகபாவங்களிலிருந்து எளிதில் உணர முடியும். சுவாமிகளின் வழிபாடு வரட்டுச் சரியை கிரியைகள் அன்று; உரிமை கலந்த உறவு ஆகும்.
நம் சுவாமிகள் உள்ளம், அறிவு, உடல் ஆகிய மூன்றிலும் உறுதி வாய்ந்தவர்தான். எனினும் சர்க்கரை நோய் சிறிய அளவில் இருந்து வந்தது. சுவாமிகள் தம் உடலைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து சமயப் பணிகளை ஆற்றிவந்தார்கள். இதனால் 1978ஆம் ஆண்டு நம் சுவாமிகளுக்கு மாரடைப்பால் நெஞ்சுவலி ஏற்பட்டது. கோவை கே.ஜி. மருத்துவமனையில் டாக்டர். ஜி. பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் மருத்துவர் குழுவும் மருத்துவமனை உதவியாளர்களும் மிகக் கவனமாகச் சுவாமிகளுக்குச் சிகிச்சையளித்து முழுமையாகக் குணப்படுத்தினர். சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த சுவாமிகள் திருமடம் திரும்பினார்.
24.1.1984 சிரவையாதீன அன்பர்களுக்குப் பேரச்சத்தைத் தந்த ஒரு நாள் . நம் கஜபூசைச் சுவாமிகள் அன்று இரவு தருமபுரியில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளோடு ஒரு நிகழ்ச்சியில் அருளாசி வழங்கிவிட்டு மகிழுந்தில் திருமடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கௌமார மடாலயத்தில் அனைவருடைய அன்பிற்கும் பாத்திரமான செல்வன் இராஜன் என்பவர் வண்டியைச் செலுத்தி வந்தார். சுவாமிகள் பின் இருக்கையில் இருந்தார்.
இரவு 1.30 மணிக்கு மகிழுந்து அவிநாசிப் பெருவழியில் பெருமாநல்லூரைத் தாண்டிக் கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த சரக்குந்து ஒன்றின் அச்சாணி முறிந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறிச் சுவாமிகளின் கார்மீது மோதிவிட்டது. வண்டியில் இருந்த சுவாமிகள் உள்ளிட்ட மூவரும் (ஆதீன எழுத்தர் திரு. ஆறுக்குட்டி மூன்றாமவர்) வெளியே தூக்கி எறியப் பட்டனர். சுவாமிகளுக்கு வலது காலில் மிகப் பலத்த அடி; நகரவே இயலவில்லை. திரு ஆறுக்குட்டி அவர்களுக்குச் சிறிது அடியும் பெருத்த அதிர்ச்சியும். வெளியே தெரியுமளவு பெரிய காயங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் செல்வன் இராஜன் குருநாதர் சேவையில் இறைவன் திருவடியை அடைந்து விட்டார்.
தன்னந்தனியான சாலையின் தன் அடியவரைத் தவிக்கவிடுவானா பழனியாண்டவன்?. தற்செயலாக அந்த வழியில் வந்து கொண்டிருந்த திருச்செங்கோடு திரு. பழனிசாமி அவர்கள் அவிநாசி திரு. கந்தசாமி கவுண்டர் அவர்கள் வீட்டிற்குத் தகவல் தெரிவிக்க அவர் மகன் திரு. பொன்னுசாமி உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு வந்து, சந்தர் மருத்துவமனை டாக்டர் பாலச்சந்திரன் அவர்களைக் கொண்டு செய்ய வேண்டிய முதலுதவி முதலியவற்றைச் செய்தார். அடுத்துச் சுவாமிகள் கோவை கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்இரவு 3.30 மணிக்குச் சுவாமிகள் மருத்துவமனைக்கு வந்ததை அறிந்த டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் உடனே வந்துவிட்டார். பல நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். சுவாமிகளுக்குத் தேவையான அனைத்துச் சிகிச்சைகளும் செய்யப்பட்டன. தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறந்த எலும்பு சிகிச்சை நிபுணர் ஆகிய சென்னை டாக்டர் மோகன்தாஸ் அவர்களைக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்யலாம் எனப் பிரமுகர்கள் பலரும் கூடி முடிவெடுத்தனர். அவருடன் இலண்டனைச் சேர்ந்த எலும்பியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் கொரானா அவர்களும் வந்து 31.4.84 அன்று மாலை 6 மணிக்கு நவீன முறையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடு பொருத்தும் அறுவைச் சிகிச்சை தொடங்கி இரவு 9 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேறியது. தீவிரமான கண்காணிப்பில் தேவையான பயிற்சிகள், பரிசோதனைகள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு தவத்திரு கஜபூசைச் சுவாமிகள் 25.2.84 அன்று கே.ஜி. மருத்துவமனையில் இருந்து முழு நலம் பெற்றுத் திருமடத்திற்குத் திரும்பி வந்தார். தமிழகம் முழுவதிலும் உள்ள சமய ஆர்வலர்களையும் தமிழ் அறிஞர்களையும் சுவாமிகளுக்கு ஏற்பட்ட சாலை விபத்து ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது என்றால் மிகையாகாது. இவ்வளவு பெரிய விபத்துக்குப் பிறகும் தவத்திரு சுவாமிகள் தம் உடலைப் பேணிக் கொள்வதில் சிறப்புக் கவனம் காட்டாமல் எப்பொழுதும் போலவே முழுமூச்சுடன் சமயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் நெஞ்சுவலி கண்டு 14.6.1994 வைகாசி வளர்பிறைச் சட்டி திதியும் மக நட்சத்திரமும் கூடிய புண்ணிய நாளில் பரமகுருநாதரின் திருவடித் தாமரைகளில் இரண்டறக் கலந்தார்.
செல்வச் சிரவையா தீனபதி சுந்தரராம்
நல்ல கஜபூசை நாயகனை, - சொல்லின்
கனத்தானை, அன்பர் கணத்தானை, உள்ளில்
நினைத்தாலே இன்பம் நிசம்
நன்னெறியை நாடும் அடியார்களை உய்விப்பதற்காக இறைவனால் ஏற்றிவைக்கப்படும் ஞானதீபங்கள் என்றும் அணைவதே இல்லை; ஒருவடிவம் மறைந்தாலும் அத்திருவிளக்கில் ஏற்றப்பட்ட அடுத்த திருமேனி ஒளிவீசத் தொடங்கி விடுகிறது. இவ்வாறான ஞானபரம்பரையில் வாழையடி வாழையாகக் கௌமார மடாலயத்தின் சமயநெறிகளைக் கட்டிக் காத்து அண்டினோருக்கு ஆன்மீக அறிவைப் புகட்டச் சிரவையாதீனத்தின் நான்காம் பட்டமாக தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அருளாட்சி ஏற்றுள்ளார்.