top of page
தவத்திரு.கந்தசாமி சுவாமிகள்

திருவிளங்கு முகமதியும் கருணைபொழி விழியும்
செங்குமுத மலர்முறுல் சிறந்தகனி வாயும்  
மருவிளங்கும் கடப்பமலர்த் தொடைப்புயமும் அபய
வரதம் அயிற் படைசூலம் வச்சிரம்சேர் கரமும் 
உருவிளங்கும் துவர்வடிவும் கமலபதத் துணையும்
ஒளிர்தர அன்னையர் நாப்பண் ஓங்கும் மயில் பரிமேல் 
குருவிளங்கும் காட்சிநல்காய் சிரவணமா புரத்தில் 
குஞ்சரிவள் ளிக்கொடிதோய் குமரகுரு பரனே
                      - தவத்திரு கந்தசாமி சுவாமிகள் 
சிரவையாதீன நிறுவுநர் ஆகிய சந்நிதானங்களின் பூர்வாசிரம இளவல் வெங்கடாசலக் கவுண்டர் என்பவர் ஆவார். அவருடைய மனைவியின் பெயர் குட்டியம்மை. இவர்களுக்குப் பூவாத்தாள் என ஒரு மகள் இருந்தாள். எனினும் தங்களுக்கு ஆண்மகவு ஒன்று வேண்டிச் சுவாமிகளிடம் விண்ணப்பித்தனர். சுவாமிகள் தம் பூசையில் வைத்திருந்த திருநீற்றைக் கொடுத்து ஆசி வழங்கினார். உரிய காலத்தில் குட்டியம்மை கருவுற்று 18-4-1892 திங்கட்கிழமையன்று ஆண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்குச் சுவாமிகள் கந்தசாமி எனப் பெயர் சூட்டினார். குழந்தை நன்கு வளர்ந்து வந்தது. சிறுவன் கந்தசாமி தன் ஐந்தாம் வயதில் சிரவணம்பட்டியில் திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்து நடத்திக் கொண்டிருந்த திரு.தொட்டைய கவுண்டரின் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். இவர் கல்வியை நன்கு கற்று ஆசிரியரால் மிகப்பாராட்டப்பட்டார். இவர் அத்திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்து முடித்தார்.
கந்தசாமியின் பெற்றோர்கள் அவருடைய இளமையிலேயே இறைவன் திருவடியை அடைந்துவிட்டனர். அதனால் அவர் தம் தமக்கையாரின் ஆதரவிலேயே வளர்ந்துவந்தார். அவர் செல்வச் செழிப்புடன் இருந்தாலும், கல்வியில் சிறந்து விளங்கினாலும் இளமையிலேயே தம் பெற்றோர்களை இழந்துவிட்டதால் உலகின் நிலையாமை அவர் உள்ளத்தில் ஆழப்பதிந்துவிட்டது. இதன் விளைவாகச் சிறுவயதிலேயே ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுவிட்டார். இவர் தம் பன்னிரண்டாவது வயதில் கௌமார மடாலயத்திற்கே வந்துவிட்டார்.
ஒருநாள் கந்தசாமி திருவண்ணாமலைக் கிழக்குக் கோபுரத்திற்குத் தாம் சென்றதாகவும், அங்கு மாடத்தில் முருகப்பெருமான் இராமானந்த சுவாமிகளின் வடிவத்தில் காட்சியளித்து ஆறெழுத்தருமறையை உபதேசித்ததாகவும் கனவு கண்டார். இதனைக் கந்தசாமி சந்நிதானங்களுக்குத் தெரிவித்தார். கேட்ட குருநாதர் மனம் மகிழ்ந்து வாழ்த்தினார். (இந்தச் செய்தியும் இது போன்ற பிறவும் தவத்திரு. கந்தசாமி சுவாமிகளால் இயற்றப்பட்டுள்ள ஸ்ரீ இராமானந்த விஜயம் என்னும் பாட்டிடையிட்ட உரைநடை நூலில் கையெழுத்துப் படியில் உள்ளது; இது இன்றுவரை அச்சாகவில்லை.)
கந்தசாமி, "அதுமுதல் தியான ஜெபார்ச்சன நமஸ்காராதி நியம ஒழுக்கம் கொண்டும், உத்தம சாத்திர உட்பொருள் அனைத்தும் நித்தமும் தெரிந்தும், நிலைபெறு தண்டபாணி, ஐங்கரத்துப் பண்ணவன் பூசனை அன்பு பொருந்தி நடத்தியும் விளங்கியிருந்தனர்." (மேற்படி கையெழுத்துப்படி)
இப்படிச் சமயவாழ்வில் முற்றிலும் மூழ்கியிருந்த கந்தசாமி சுவாமிகள் கௌமார மடாலயத்தில் எழில்மிகுந்த மலர்ச்சோலை ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டார். அப்பூங்கா நன்கு செழித்து வளர்ந்து பேரழகோடு விளங்கியது.
கௌமார மடாலயத்திற்கு வந்தபிறகு கந்தசாமி சுவாமிகள் எந்த ஆசிரியரிடமும் முறையாகக் கல்வி பயின்றதாகத் தெரியவில்லை. வண்ணச்சரபரின் மைந்தர் திரு. செந்தினாயக ஐயா அக்காலத்தில் அடிக்கடி திருவாமாத்தூரிலிருந்து வந்து இங்குப் பல வாரங்கள் தங்கியிருப்பார். அவருடன் பழகியதால் இவர் யாப்பிலக்கணம், சிற்றிலக்கிய வகைகள் முதலியவற்றை அறிந்து கொண்டார். அப்படியே வடமொழிவாணருடன் கலந்து அம்மொழியிலும் போதுமான அறிவு பெற்றார். மலையாள மொழியைத் தாமே சொந்த முயற்சியால் கற்றுக் கொண்டார். 
"யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் 
தாமே பெற வேலவர் தந்ததனால்"
என்னும் அருணகிரிநாதரின் அமுதவாக்கு இவருக்கும் சித்தியாகிவிட்டது எனலாம். வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல் இவருடைய முருக உபாசனையால், 
"சேயைச் சந்ததம் சிந்தனை செய்பவர் 
வாயை மீறியும் வண்டமிழ் வருமே”
என்பதற்கிணங்க எளிதில் புதிய செய்யுள்களை இயற்றும் படைப்பாற்றலும் இவர்பால் இயல்பாகவே அமைந்துவிட்டது.
இந்நிலையில் கந்தசாமி சுவாமிகள் தம் தந்தைவழி உடைமையாகக் கிடைத்த நிலபுலங்களை எல்லாம் திருமடத்திற்கே எழுதி வைத்துவிட்டார். 22.1.1918 அன்று முறையாகப் பத்திரம் எழுதிப் பதிவுசெய்து தம் உடைமைகள் அனைத்தையும் கௌமார மடத்திற்கு உரியன ஆக்கிவிட்டார். அப்போது அவருடைய வயது இருபத்து ஆறுதான்.
கந்தசாமி சுவாமிகள் இருபத்தொன்பது வயது நிறைவதற்கு முன்னரே யமகம், திருப்புகழ், வண்ணம் போன்ற அரிய செய்யுள் வகைகளை இயற்றத் தொடங்கிவிட்டார். கணபதி யமக வந்தாதி, சிரவை யமக வந்தாதி, இரத்தினாசல யமக வந்தாதி, மருதாசல யமக வந்தாதி, மருதமலை அலங்காரம் முதலியன இவருடைய தொடக்கக் கால நூல்களாம்.
திருஅளிக்கும் பெரும் கல்வியும் நல்கிடும் சேண் உலகார் 
தருஅளிக்கும் பதம் யாவையும் ஈந்திடும் தன்அணைய
உருஅளிக்கும் தொண்டர் எண்ணிய யாவும் உடன்அளிக்கும் 
மருஅளிக்கும் பொழில்சூல் மருதாசலன் வண்பதமே.
-மருதமலை அலங்காரம்
இவருடைய செய்யுள்மழை கடைசிக் காலம்வரை ஓயாது பொழிந்துகொண்டே இருந்தது.
சந்நிதானங்கள் 1923ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சிறிது நாள் பழனியில் தங்கியிருந்தார். அப்போது கந்தசாமி சுவாமிகளுக்குத் துறவும் ஆதீனத் தலைமையும் வழங்கத் திருவுளம் பற்றினர். அதன்படி 29.1.1923 திங்கட்கிழமையன்று கந்தசாமி சுவாமிகளுக்குத் துறவும் ஆதீன அருளாட்சியும் வழங்கப்பட்டன. அப்பொழுது முதல் கௌமார மடாலயத்தின் தலைவராகத் தம் பணிகளைப் பொறுப்புடன் நிர்வகித்து வந்தார்.
சந்நிதானங்களை எல்லோரும் எளிதில் தரிசித்துவிட முடியாது. அதனால் திருமடத்திற்கு வரும் அடியார்களின் குறைகளையும் விருப்பங்களையும் கேட்டு அவற்றை முடித்துத்தரும் பெரும்பொறுப்பு கந்தசாமி சுவாமிகளுடையதாகவே இருந்தது. பல ஆலயங்களின் தொடர்பாக வருபவர்களும், தம் ஊருக்குப் பிரபந்தம் பாடித்தர வேண்டும் எனக் கேட்பவர்களும், கோயில் தரிசனத்திற்காக வருபவர்களும் என எப்பொழுதும் அன்பர் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. இவர் அனைவரையும் இன்முகம் கொண்டு வாழ்த்தியருளி அவர்களுக்கு ஆவன செய்து வந்தார்.
மேலும் கௌமார சபையில் வெள்ளிக்கிழமை தோறும் கந்தபுராணம், பெரிய புராணம் பற்றி விரிவுரை நிகழ்த்தி வந்தார். 5.10.1926 அன்று சந்நிதானங்கள் ஒரு கடிதத்தின்வழி கந்தசாமி சுவாமிகளுக்கு வண்ணச்சரபம் சுவாமிகளின் வரலாற்றை வண்ணமாகப் பாடும்படிக் கட்டளையிட்டார். அதற்கிணங்கக் கந்தசாமி சுவாமிகள் வண்ணச்சரபர்பற்றி மூன்று வண்ணப்பாக்களைப் பாடினார்.
சந்நிதானங்கள் ஒருமுறை கேரளம் சென்றிருந்தபோது அங்கு பக்தமாலா என்னும் மலையாள உரைநடை நூலைப் பார்க்க நேர்ந்தது. அது சந்திரதத்தரால் இயற்றப்பெற்ற வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். அந்நூலில் திருமாலின் அடியவர்கள், தேவியின் தாசர்கள், சிவபக்தர்கள் என மூன்று வகையினரின் வரலாறுகள் உள்ளன.
அவற்றுள் வைணவ அடியார்கள் 103 பேரின் வரலாறும் அடங்கும். இந்த நூலைத் தமிழில் ஒரு நல்ல காவியமாக மொழி பெயர்த்தால் அடியார்கள் பயன்பெறுவர் எனச் சந்நிதானங்கள் எண்ணினார். தமிழில் இக்காப்பியத்தை இயற்றுமாறு தம் சீடருக்கு அருளாணை வழங்கினார்.
ஞானதேசிகரின் கட்டளைக்கிணங்கக் கந்தசாமி சுவாமிகள் பக்தமாலாவைப் பக்தமான்மியம் என்னும் பெயரில் ஒரு காப்பியமாக உருவாக்கினார். அக்காப்பியத்தின் மொத்தச் செய்யுள் எண்ணிக்கை 7373 ஆகும். இந்தப் பக்தமான்மிய அரங்கேற்றம் 24.5.1928 முதல் 5.6.1928வரை பதின்மூன்று நாட்கள் மிக விமர்சையாக நிறைவேறியது. இந்த அரங்கேற்றச் சிறப்பைத் திரு. தி.செ. முருகதாச ஐயா அவர்கள் 153 செய்யுள்களைக் கொண்ட ஒரு குறுங்காப்பியமாகப் பக்தமான்மிய அரங்கேற்றல் வைபவம் என்னும் பெயரில் இயற்றியுள்ளார்.
நம் சுவாமிகளின் கவிபுனை ஆற்றல் அளப்பரியது. மிகக் குறுகிய காலத்தில் சொல் நயமும் பொருள் நயமும் மிகுந்த செய்யுள்களை இயற்றிப் பழைய பாடல்களை உருப்போட்டு ஒப்புவிப்பதைப் போல வாரி வழங்க வல்லவர் அவர். இவருடைய பாடல்கள் செறிவானவை; பொருளாழம் மிக்கவை; தொனி நயம் கொண்டவை. யமகம், திரிபு போன்ற மிறைக்கவிகளையும் வண்ணப்பாக்களையும் மிக விரைவில் இயற்றி அருகில் இருப்போரை வியக்க வைக்கும் அரும் திறன் மிக்கவர். அவிநாசித் தலத்திற்குரிய பெருங்கருணாம்பிகை மாலை என்னும் 102 கட்டளைக் கலித்துறைகளால் ஆன சிற்றிலக்கியம் ஒன்றை இவர் ஓர் இரவுக்குள் பாடி முடித்தார்.
காரைமடை ரங்கநாதர் மாலை என்பது 103 விருத்தங்களால் ஆன ஓர் இலக்கியம். 2.2.1945 அன்று அதை அரங்கேற்றுவதற்காகக் காரைமடை செல்லும் போது அதன் கையெழுத்துப்படி திருமடத்திலேயே தங்கிவிட்டது. அதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாத கந்தசாமி சுவாமிகள் மேடை ஏறி வேறு புதிய விருத்தங்களை இயற்றி அரங்கேற்றிவிட்டார். இதனால் இவர் மிக எளிதாகவும் விரைவாகவும் கவிபுனையும் ஆற்றல் மிக்கவர் என்பது தெளிவாகிறது.
கந்தசாமி சுவாமிகள் தமிழ், வடமொழி, மலையாளம் ஆகிய மும்மொழிப் புலமை வாய்ந்தவர். தம் தாய்மொழியாகிய தெய்வத்தமிழ் மீது பேரன்பு கொண்டவர். புலவர் புராணத்தையும் தமிழலங்காரத்தையும் எழுத்தெண்ணிக் கற்றவர். எனினும் பிறமொழி வெறுப்பு என்பது இவர்பால் மருந்துக்குக் கூடக் காணப்படவில்லை.
நம் சுவாமிகள் முழுமையான வைராக்கிய சீலராக இருந்தமையால் அவர் உலகியல் பற்றிய சிந்தனைகளில் சற்றும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. சமூகத்தைப் பொறுத்தவரையில் இவர் நாட்டம் கொண்டது இரண்டே இரண்டு விஷயங்கள் தான். மக்கள் எல்லோரும் தவறாமல் கொலை புலையை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பது முதன்மையும் தலைமையும் வாய்ந்த கோட்பாடு. வழிபாடு, மருத்துவம், உணவு என எக்காரணம் கொண்டும் கொலை செய்யக்கூடாது என வற்புறுத்துவதில் உறுதியாக நின்றார். மக்கள் அனைவரும் ஆலய வழிபாட்டைக் கைக்கொண்டு தொடர்ந்து செய்துவரவேண்டும் என்பது இரண்டாவது கொள்கை. இந்த இரண்டையும் பட்டிதொட்டி எல்லாம் பரப்புவதற்காகவே அவர் கோவை மாவட்டம் முழுவதும் சிற்றூர்கள் தோறும் நிகழும் கோயில் விழாக்களில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றி வந்தார்.
பல கிராமங்களில் கோயில்களில் பலி இடுவதற்காகப் பிறரால் விலைக்கு வாங்கப்பட்டிருந்த ஆடு, கோழி முதலிய உயிரினங்களைச் சுவாமிகள் மடத்துப் பணத்தைக் கொடுத்து வாங்கி விடுவித்துவிடுவது உண்டு எனக் கூறப்படுகிறது. கொலைப் பூசை நடைபெறும் இடத்திற்குத் தான் செல்வது இல்லை என மிக்க உறுதியுடன் இருந்ததால் சிற்சில கோயில்களில் உயிர்ப்பலி முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது எனத் திருவாமாத்தூர் திரு. தி.செ. முருகதாச அய்யா அடிக்கடி கூறுவார்.
கந்தசாமி சுவாமிகள் சிறந்த சமயச் சொற்பொழிவாளராகவும் விளங்கினார். நூல் அரங்கேற்ற உரைகள், வெள்ளிக்கிழமைச் சொற்பொழிவுகள், பல கோவில் விழாக்களில் பேருரைகள் என ஏராளமான சமயப் பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். அவற்றைக் கேட்டவர்கள் பலரும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
சுவாமிகள் குறிப்பிட்ட சிலருக்குத் தமிழ் மொழியைக் கற்பித்துப் போதகாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். அவர்களுள் சிரவையாதீனம் மூன்றாம்பட்டம் கஜபூசைச் சுந்தர சுவாமிகள், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், தம்பி சுவாமிகள் என வழங்கப்பட்ட சிரவை. மருதாசல சுவாமிகள், கவியரசு கு. நடேச கவுண்டர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் இருவினைப் பயன்களைத் துய்த்து, பிராரத்த வினை தீர்ந்தஉடன் உடலை நீத்துவிட வேண்டியதுதான். இதற்கு விதிவிலக்கே இல்லை. அதனால் தான் பரம ஞான வைராக்கியம் படைத்திருந்த போதிலும் நம் சுவாமிகளுக்கும் நீரிழிவு நோய் தோன்றியது. வலது காலில் புண் ஒன்று வந்து குணமாகாமல் வருத்திக் கொண்டே இருந்தது. வலது காலை முழங்காலுக்குச் சற்று மேலே துண்டித்துவிடுவதைத் தவிர வேறு வழி இல்லை என மருத்துவர்கள் முடிவு செய்துவிட்டனர். 9.12.1948அன்று அறுவை சிகிச்சை செய்து வலது கால் எடுக்கப் பெற்றது. சுவாமிகள் பிழைத்துவிடுவார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நடந்தது வேறு. அடுத்த நாளே அதாவது 10.12.1948 வெள்ளிக்கிழமை ரேவதி நட்சத்திரத்தன்று தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் தம் பூத உடலை நீங்கிப் பிரணவ சரீரம் பெற்று இறைவன் திருவடி நீழலில் இரண்டறக் கலந்து விட்டார்.
இவ்வாறாகச் சிரவையாதீனத் தாபகரும் முதல் குருநாதரும் ஆகிய சந்நிதானங்களின் காலத்திலேயே இரண்டாவது பட்டம் சுவாமிகள் சமாதி அடைந்துவிட்டார். கௌமார சபைக் கட்டடத்தில் முன்பே அமைக்கப் பெற்றிருந்த குகையின் ஒருபக்கத்தில் சுவாமிகளின் திருமேனி சமாதி செய்யப்பெற்றது. பிறகு 1956 இல் குருவருளில் கலந்த சந்நிதானங்களின் திருமேனியும் இக்குகையின் மறுபக்கம் சமாதி செய்யப்பெற்றது.
தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் சமாதிக்குப் பிறகு மோட்சதீபம் முதலிய சமயச் சடங்குகள் நிறைவேறின. அந்நிலையத்தில் நாள் வழிபாடும் அவதார விழா, குருபூஜை விழா ஆகிய சிறப்பு வழிபாடுகளும் தவறாமல் முறையாக நடைபெற்று வருகின்றன. தவத்திரு சுவாமிகளின் பருஉடல் அதன் ஐம்பத்தாறாம் வயதில் மறைந்தாலும் அவரால் இயற்றப் பெற்ற தகைசால் தண்டமிழ் நூல்களின் வடிவில் அவர் இன்றும் வாழ்கிறார்; என்றும் வாழ்வார் என்பது திண்ணம்.

bottom of page