
தவத்திரு. குமரகுருபர சுவாமிகள்
உலகியலில் வாழ்க்கைவளம் ஓங்கினால் மட்டுமே
ஒழுக்கம் நிலை நிற்கும் என்றும்
உண்மையாய் அதை அடைய உயர்தரக் கல்வியே
உபகாரம் ஆகும் என்றும்
கலைவலார் கூறும் மொழி கருத்தினில் இருத்தியே
கல்விதரு கோவில்களையும்
கடவுள் ஆலயத்தோடு கண்எனக் காக்கும்ஒரு
கடமையைக் கைக்கொண்டிடும்
தலைவனாய்ச் சமுதாய வளர்ச்சியாம் வேள்வியில்
தளராத ஊக்கமுடனே
சந்தமும் முயல்கின்ற கவுமார வழியொழுகு
தண்டமிழ் முனைவராகக்
குலவும்ஒரு துறவி எனவாழ்கின்ற பண்பாளர்
குறைவு இலாச்சீர் அடைந்தே
குவலயம் போற்றவளர் சிரவையாதீனகுரு
குமரகுருபரர் வாழியே!
- பெரும்புலவர் ப.வெ.நாகராஜன்
தவத்திரு குமரகுருபர சுவாமிகள் கஜபூசைச் சுவாமிகளின் பூர்வாசிரமத் தம்பி திரு. நடராசக் கவுண்டர், அவர் துணைவி திருமதி. வள்ளியம்மை ஆகிய இணையருக்கு மூன்றாவது மகவாக 6.8.1970 அன்று (சாதாரண ஆண்டு ஆடி 22 உத்திர நட்சத்திரம்) பிறந்தார். பத்தாம் வகுப்புவரை திருமடத்தின் உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியைப் பீளமேடு சர்வஜனா மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார். அறிவியலில் இளநிலைப்பட்டம் (பி.எஸ்ஸி) பெற்றபிறகு கஜபூசைச்சுவாமிகளின் அணுக்கத் தொண்டராகத் திருமடத்திலேயே இருந்து பணி புரிந்து வந்தார்.
சாதாரண ஆடியில் பிறந்தவராயினும் உலகியலில் ஏனையோரைப் போலச் சாதாரணமாக ஆடித்திரியக் குருவருள் இவரை விடவில்லை . 14.6.1994 அன்று கஜபூசைச் சுவாமிகள் ஆகய ஞானதீபத்தில் ஏற்றப்பட்ட அடுத்த சுடர் விளக்காக ஆகவிட்டார். ஆம்! அன்றே துறவு பூண்டு நான்காவது குருமகா சந்நிதானமாக அருளாட்சி ஏற்றார். அப்போது இவருக்கு வயது இருபத்துநான்குதான்.
செல்வம், நிறுவனங்களின் நிர்வாகம், கடமைகள், சில மரபுகள் ஆகியவற்றைக் கொண்ட ஓர் அமைப்பில் தலைமை மாற்றம் ஏற்படும்போது சில தொடக்க காலப் பிரச்சினைகள் எழுவது எங்கும் இயல்பானதுதான். அவற்றை விரிப்பதால் பெறும் பயனோ பெரும் பயனோ ஏதும் இல்லை . தவத்திரு குமரகுருபர சுவாமிகள் இவ்வாறு ஏற்பட்ட இடையூறுகளைத் தம் பொறுமையாலும், நுண்ணறிவாலும், குருவருளாலும் திறமையாகச் செயல்பட்டுத் தகர்த்தெறிந்து இப்போது ஆதினத் திருப்பணிகளைச் செம்மையாக நிறைவேற்றி வருகிறார். இவருடைய சீரிய தலைமையில் சிரவை ஆதீனம் தவத்திரு கஜபூசைச் சுவாமிகள் காட்டிய வழியில் பீடுநடை போட்டு வருகிறது என்பதுதான் தேவையான செய்தி.
மரபு வழியாக மட்டும் அல்லாமல் பல்கலைக்கழகப் பாடத் திட்ட முறையிலும் தமிழறிவு பெறவேண்டும் என்பதற்கான தமிழ் முதுகலைத் தேர்வில் வெற்றி பெற்றதோடு சிரவைக் கந்தசாமி சுவாமிகளின் இலக்கியங்களில் திருப்பேரூர்ப் பனுவல்கள் குறித்து ஆய்வேட்டைச் சமர்பித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார். அதனை ஒட்டி பெருவிழா நாயகருக்குப் பாராட்டுவிழா திருவருளும் குருவருளும் கூட்டி வைத்த வண்ணம் திருவள்ளுவராண்டு 2044 தைத்திங்கள் 21 ஆம் நாள் 03-02-2013 அன்று உலகப் பெருவேள்வி மண்டபத்தில் நடைபெற்றது.
பள்ளி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் திரு.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் எழுச்சி மலர் நூல் வெளியிடப்பட்டது, சுவாமிகளின் இப்படிப்பு ஆதீனத்தின் இலக்கிய ஆய்வு, நூற்பதிப்பு, கருத்தரங்கங்கள் முதலிய தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.
தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் கல்விப்பணி, தமிழ் இலக்கியப் பணி, சமுதாயப் பணி பற்றிய செய்திகள் உரிய இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் சமய வரலாற்றில் சிரவையாதீனம் மிக உன்னதமான ஓர் இடத்தைப் பிடிக்கும் நாள்வெகு தொலைவில் இல்லை என்பது திண்ணம்.
வண்ணச் சரபகுரு, மாண்புயர்ந்த சந்நிதானம்,
தண்ணத் தமிழ்க் கந்த சாமியொடு - அண்ணல் அருட்
சுந்தரர்தம் மாமரபின் தோன்றல் கவு மாரருக்குச்
சொந்தம்உள தேசிகனாம் சொல்