
தவத்திரு.இராமானந்த சுவாமிகள்
தேவருக் கிடையூ றுயாவும்
தீர்த்தமெய்த் தேவா போற்றி
மூவருக் கரச ளித்த
முதன்மைநற் பொருளே போற்றி
சேவடிக் கடிமை யாக்கிச்
சிறியனேன் தன்னைக் காப்பாய்
மேவிய புகழ் படைத்த
விக்கின ராச போற்றி
- தவத்திரு இராமானந்த
சுவாமிகள்
கோவை மாநகருக்கு வடக்கே சத்தியமங்கலப் பெருவழியில் ஏறக்குறைய ஏழு கிலோமீட்டர் தொலைவில் சிரவணம்பட்டி என்னும் தொழில் வளம் மிக்க ஊர் ஒன்று உள்ளது. செவ்வண்ணன்பட்டி என்னும் பழைய தமிழ்ப் பெயர் வடமொழித் தாக்கத்தால் சிரவணம்பட்டி என மாறியது. சிரவை என்பது இதன் மரூஉப்பெயர். ஊருக்கு அருகில் சிரவணம்பட்டிக் கரடு அல்லது இரத்தினாசலம் என வழங்குகின்ற அழகிய மலை முருகக் கடவுளின் குன்று தோறாடல் தலமாக விளங்குகிறது.
இந்தச் சிரவணம்பட்டியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பழனியப்பக் கவுண்டர் என்னும் காடைகுலச் செல்வர் ஒருவர் இருந்தார். அவர் மிகுந்த செல்வம் உடையவராக விளங்கினார். அவர் வீடு ஊரில் பெரிய வீடு என்றே வழங்கப்பட்டது. அவருக்கு மக்கள் ஐவர். அவர்களுள் மூன்றாவது மைந்தரின் பெயர் வேலப்பக்கவுண்டர். வேலப்பக் கவுண்டரின் துணைவியார் பெயர் ஆண்டாளம்மை. இவர்களுக்குத் திருமணம் ஆகி நீண்ட நாள் மக்கட் செல்வம் வாய்க்கவில்லை. அதனால் மிக்க வருத்தமடைந்த இவர்கள் தமக்கு மகப்பேறு வழங்க வேண்டிப் பக்கத்தில் உள்ள இரத்தினாசல முருகனை மனம் உருகி வழிபட்டு வந்தனர்.
இரத்தினாசல வேலன் திருவருளால் இந்த இணையருக்குக் கலியுகாதி 4960 ஆம் வருடமாகிய காளயுக்தி ஆண்டு புரட்டாசித் திங்கள் 26ம் நாள் ஞாயிற்றுக் கிழமை வளர்பிறைச் சதுர்த்தியும் விசாக நட்சத்திரமும் கூடிய நன்னாளில் ஓர் ஆண்மகவு உதித்தது. ஆங்கிலக் காலக்கணிப்பின்படி இந்நாள் 10-10-1857 ஆகும். பிறப்பு ஆண்டாளம்மையின் தாய்வீடாகிய கணபதியில் நிகழ்ந்தது.
பெற்றோர்கள் இக்குழந்தைக்கு இராமகுட்டிக் கவுண்டர் எனப் பெயர் சூட்டினர். மகவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் சிறப்பாக வளர்ந்துவந்தது. வாராது வந்த மாமணி ஆகக் கிடைத்த குழந்தைச் செல்வத்தைப் பெற்றோர் கண்டு பெருமகிழ்ச்சியுடன் பொன்னே போல் பேணிப் போற்றினர். அவ்வப்பொழுது ஆற்ற வேண்டிய குழந்தைச் சடங்குகளை எல்லாம் செய்து களித்தனர்.
கந்தர் நாடி சாதகம் என்னும் நாடி சோதிட நூலில் இராமானந்தர் அகத்திய முனிவரின் அமிசமாக உலகில் உதித்தவர் என்னும் குறிப்பு உள்ளது. இச்செய்தியைப் பேரூர் தெற்கு நந்தவனம் சுந்தர சுவாமிகள் தாம் இயற்றியுள்ள இராமானந்தப் பிரதாபம் என்னும் வரலாற்று நூலில் விளக்கி,
“என்றுசொல்லும் வேதாங்கம் என்னும்கணிதத் திருநூலாத்
துன்றுகந்த நாடியின்மெய்த் தொனிக்கஇப்புத் தகத்திருஏடு
இன்றுதங்க வேல்ப்பெயர்கொண்டு இலங்குசோதிடப் புலவன்
நன்றுகொடுத்தனன்; அவிதம் நான் இதனில் நவின்றேனே"
(பூருவ நிலைச் சுருக்கம் 21)
என ஆதாரத்தையும் காட்டுகிறார். (இந்தக் கந்தர் நாடி நூல் சிரவைக் கௌமார மடாலயத்தால் 1930 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஸ்ரீலஸ்ரீ இராமானந்த சுவாமிகளது ஜாதகத்திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது).
செல்வன் இராமகுட்டிக்கு ஐந்து வயதானபோது சிரவணம்பட்டியில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். இவர் சற்றும் சிரமப்படாமல் விளையாட்டாகப் பயின்றார் என மேற்கூறிய இராமானந்தப் பிரதாபம் குறிப்பிடுகிறது. இளவயதிலிருந்தே இவர் மற்ற சிறுவர்களிலிருந்து வித்தியாசமாக இருந்தார். விளையாடுதல், குறும்பு செய்தல் என இல்லாமல் சுவாமிகள் அதிகாலையிலேயே நீராடுதல், கடவுள் வழிபாடு, துதி நூல்களைப் படித்தல், தனியாக ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்திருத்தல் என்பன போன்ற செயல்களைக் கொண்டிருந்தார். இவற்றைப் பார்த்து அதிசயித்த அக்கம்பக்கத்தார் இராமகுட்டியைச் “சாமீ” என அழைக்கலுற்றனர். இனி நாமும் இவரைச் சுவாமிகள் என்றே குறிப்பிடுவோம்.
சிரவணம்பட்டியில் சிவலிங்க வடிவில் விளங்கும் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. நம் சுவாமிகள் அந்த ஆலயத்திற்குத் தவறாமல் சென்று, மாலைகள் கட்டிக் கொடுத்து, வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்பொழுதே கனவில் சில அற்புதக் காட்சிகளைக் கண்டார். சைவ வைணவ வேறுபாடு சற்றும் இல்லாத சமய சமரச மனப்பான்மை கைவரப் பெற்றார்; பல ஆன்மீக அநுபூதிகளும் ஏற்பட்டன.
உலகியல் நெறியில் தம் தந்தையாரின் மேற்பார்வையில் விவசாயம் முதலிய குடும்ப அலுவல்களைச் செய்துவந்தார். இவருடைய பத்தொன்பதாம் வயதில் பெற்றோர் சின்னம்மாள் என்பவரைத் திருமணம் செய்து வைத்தனர். சுவாமிகளின் உள்ளம் இல்லறத்தில் ஒன்றவில்லை. தம் முப்பத்திரண்டாம் வயதில் உற்றார் உறவினர் வேண்டுகோளுக்கு இணங்கி நஞ்சம்மாள் என்பவரை இரண்டாவது மனைவியாக ஏற்றார். முதல் மனைவிக்கு இரண்டு ஆண்மக்களும் இரண்டாம் மனைவிக்குப் பெண் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. பொதுவாக அவருடைய இல்லற வாழ்க்கையை விட ஆன்மீக வேட்கையும் வெற்றியுமே நாம் காண வேண்டுவன ஆகும்.
விவசாயத்தில் ஈடுபட்டிருந்த நம் சுவாமிகள் ஒருநாள்
"ஏழையின் மீது இன்னம் வாது செய்திடில்
என்னைக் காப்பவரை ஓது”
என்னும் பல்லவியை உடைய கீர்த்தனையை இயற்றினார். அன்று அவர் கனவில் சிரவைச் சிவகணேசன் தோன்றித் திருச்செந்தூருக்கு வருமாறு கட்டளையிட்டார். அதன்படி ஒரு நாள் இரவில் யாருக்கும் தெரியாமல் புறப்பட்டுவிட்டார். சில நாள் செந்திலில் தங்கி வழிபட்ட பிறகு ஊர் திரும்பினார். சில நாள் கழித்துப் பழனிக்குச் சென்றார். தண்டாயுதபாணியைத் தரிசித்துப் பிடித்த பதிகம் என்னும் தோத்திரத்தை இயற்றினார். நம் சுவாமிகள் ஆண்டுதோறும் தவறாமல் தைப் பூசத்திருவிழாவிற்குப் பழனி செல்வதை ஒரு வழக்கமாகக் கொண்டார்.
இந்தச் சமயத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பழனி அடிவாரத்தில் ஒரு மடம் அமைத்துத் தங்கியிருந்தார். அவருக்கும் சாமக்குளம் என்னும் ஊரைச் சேர்ந்த வெங்கடரமணதாசர் என்பவருக்கும் தொடர்பு இருந்தது. அந்த அன்பரின்வழி நம் சுவாமிகள் வண்ணச்சரபரைப்பற்றி அறிந்ததுடன் தியானாநுபூதி என்னும் நூலையும் பெற்று, ஆழ்ந்து படித்தார். அப்போது நம் சுவாமிகள் சண்முக மாலை என்னும் துதியை இயற்றிக்கொண்டிருந்தார். அப்பனுவலின் 89ஆவது பாடலில் தனக்குக் குருதரிசனம் கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொண்ட நிலையில் வண்ணச்சரபரைப் பற்றிய செய்தி கிடைத்தது.
தியானாநுபூதி என்னும் அனுபவ சாத்திரத்தை இயற்றியவரையே தம் குருநாதராகக் கொள்ள வேண்டும் என உறுதி பூண்டார். பழனியில் வண்ணச்சரபரைத் தரிசித்துச் சீடனாக ஆட்கொள்ள வேண்டினார். அவரும் மனமுவந்து ஏற்று உபதேசம் புரிந்தார். பிறகு வண்ணச்சரபர் நம் சுவாமிகளுக்கு ஆறுமுக உருத்திராக்கமும், திருநீற்றுக் கோயிலும் வழங்கித் தம்மை நாடிவரும் அன்பர்களுக்கு உபதேசம் புரிந்து வாழையடிவாழையாகக் கௌமாரத்தைப் பரப்புமாறு ஆணையிட்டார். உபதேசம் பெற்ற நம் சுவாமிகள் மிக்க உவகையுடன் தம் ஊர் திரும்பினார்.
குருநாதரின் கட்டளைப்படியே அதிகாலையில் எழுந்து, நீராடி, சின்னங்களைத் தரித்து, சூரியனை வணங்கி, பழனியாண்டவர் படத்திற்கு முறைப்படி பூசை செய்து, ஆறெழுத்துச் செபம், தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவார். தம் தந்தையாரின் விருப்பப்படி விவசாயத்தையும் கவனித்துவந்தார். இந்நிலையில் நம் சுவாமிகள்பால் ஓர் அருளாற்றல் ஏற்பட்டுப் பலருக்கு நேர்ந்த துன்பங்களைப் போக்கி அருள்புரியலானார். இப்போது தம் வழிபாட்டில் தண்டாயுதபாணியின் படத்தோடு வண்ணச்சரபரின் புகைப்படத்தையும் இணைத்துக்கொண்டார். 26.6.1888 அன்று வண்ணச்சரபர் ஸ்ரீரங்கத்தில் தம் திருவரங்கத் திருவாயிரத்தை அரங்கேற்றியபோது நம் சுவாமிகளும் கலந்து கொண்டார். அப்போது நம் சுவாமிகளுக்குப் பெரிய திருவடி ஆகிய கருடாழ்வரின் தரிசனம் கிடைத்தது.
சில நாட்களில் இவருடைய தந்தை வேலப்ப கவுண்டர் இயற்கை எய்தினார். குடும்பப் பொறுப்பு ஏற்பட்ட நிலையிலும் பற்றற்று இருந்தார். இவரால் நீண்டகாலம் உலகியலோடு ஒத்துப்போக முடியவில்லை. அதனால் தம் ஊருக்கு அருகில் உள்ள சின்னவேடம்பட்டியில் ஒரு சிறு தவச்சாலை அமைத்து வழிபாட்டிலும் தியானத்திலும் மூழ்கியிருந்தார். தம் அடியார்கள் முறையான வழிபாடியற்றி உய்யவேண்டும் என்னும் கருணையால் விநாயகருக்கும் முருகப் பெருமானுக்கும் ஆலயங்கள் அமைக்க உளங்கொண்டார். அதன்படி சித்திமகோற்கட விநாயகருக்கும் தண்டபாணிக் கடவுளுக்கும் அழகிய திருக்கோவில்கள் எழுந்தன. அவற்றில் நாள், சிறப்பு வழிபாடுகளுக்குத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்தத் தருணத்தில் நம் சுவாமிகள் துறவுக் கோலம் கொள்ள விழைந்தார். குருவருளில் கலந்துவிட்ட சற்குருநாதராம் வண்ணச்சரபரை நீள நினைந்து தம் வழிபடுகடவுளின் எதிரில் துறவுக் கோலம் பூண்டார். இயற்பெயராகிய இராமக்குட்டிக் கவுண்டர் என்பதையும் துறந்து இராமானந்தர் என்னும் தீட்சா நாமத்தை ஏற்றார்.
படித்து அறிய மாட்டாத பாவி ஆனேன்
பாருலகில் ஒருவர்இலை எனைப்போல் மூடர்
மடித்து உயிரைக் குடித்திடவே காலன் வந்தால்
வகை ஒன்றும் அறிந்திலனே உனை அல்லாது;
முடித்தகுழல் வள்ளிபங்கா! முருகா! கந்தா!
முகுந்தன் உரித்துஆம் மருகா! முதல்வா! நின்னைப்
பிடித்தபிடி இனிநழுவ விடவும் மாட்டேன்;
விட்டாலும் பிழைபொறுக்கப் பிதாநீதானே.
- பிடித்த பதிகம்
தம் யோக நிட்டை அனுபவங்களை அடியார்களும் அறிந்து கடைப்பிடிக்க வாய்ப்பாக ஆறாதார விளக்கம், பஞ்சபூத அண்ட விளக்கம், முக்குண விளக்கம், சகலாண்ட புவன விளக்கம் என்னும் நான்கு தத்துவ விளக்க வண்ணப் படங்களை வரைந்து வைத்தருளினார்.
தத்துவ விளக்கம்
திருமடத்தில் இருந்தபோது தம்யோக நிட்டை அனுபவங்களை எல்லாம் “உலகத்தில் எதிர்காலத்து அமையும் பக்குவத்தொண்டர் பார்த்தும், நம்பியும், சிந்தித்தும், வந்தித்தும், வாசித்தும், நேசித்தும் பயன்பெற்று ஈடேறுதல் வேண்டும் என்னும் பரம கருணையினால் வண்ணப் படங்களாக வரைந்து வைத்தருளினார். அவ்வாறு எழுதப்பட்ட படங்கள் நான்கு.
முதலாவது ஆறாதார விளக்கப்படம். இதில் மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களையும் யோக சாத்திர முறையில் விளக்கி, அந்தந்த ஆதாரங்களின் அளவுகள் அதிதேவதைகள், மந்திரங்கள், அவற்றின் பெயர்கள் ஆகியவற்றையும் இவற்றிற்கு அப்பாற்பட்ட பரவெளியின் நுழைவாயிலாகிய ஏழாவது தானத்தில் பராசக்தி விளங்குகின்ற ஆயிரத்தெட்டிதழ்த் தாமரை முதலியவற்றையும் காட்டுவது இப்படம்.
இரண்டாவது பஞ்சபூத அண்ட விளக்கப்படம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களின் நிறவேறுபாடு ஒவ்வொன்றிற்குமிடையிலுள்ள தொடர்பு, இவற்றைக் கடந்த பரவெளி நில உலகின் கீழ்ப்பாகம், இப்பூதங்களை ஊடுருவி நிற்கும் மேருத்தம்பம், சூரியன் பன்னிரண்டு மாதங்களிலும் இயங்கும் விவரம் ஆகியவற்றை விளக்குகின்றது.
மூன்றாவது முக்குண விளக்கப்படம் சத்துவம், ராஜஸம், தாமதம் என்னும் முக்குணங்களின் இயல்புகளையும், ஒவ்வொன்றிலும் மற்ற குணங்களும் கலந்து மும்மூன்று பிரிவாகும் விவரத்தையும் சித்தரிக்கின்றது.
நான்காவது படத்தில் திருவைந்தெழுத்தில் நகரம் முதலான எழுத்துக்களின் உட்பொருளாகிய பிரம்மன், திருமால், மகேசன், சதாசிவன் என்னும் ஐம்பெரும் தலைவர்களின் இடமாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி என்னும் ஐந்து அண்டங்களில் இறைவி இறைவனோடுள்ள விளக்கமும். அவற்றைத் தாங்கிய பெருவெளி, மேல் உலகம் ஏழு, கீழ்உலகம் ஏழு, சூரிய, சந்திரர்களின் தோற்றம் மறைவுகளும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்தவத்தை நிலைகளும் விளக்கப்பட்டுள்ளன. இது சகலாண்டபுவன விளக்கப்படம்.
இவருக்குப் பல சீடர்கள் அமைந்தனர், அன்பர்களும் பெருகினர். அதனால் சுவாமிகளின் செபதபங்களுக்கும் தியானத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. அதற்காகத் தாம் தங்கவும் தவம் முதலியன செய்யவும் வாய்ப்பாகப் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. 1933, 34ஆம் ஆண்டுகளில் பத்துமாத காலம் பிடித்த திருப்பணி இது. இதற்கு இரும்புத் தண்டவாளங்கள் வந்தவாசியிலிருந்து வரவழைக்கப் பட்டனவாம். முன்பு மேலைத் திருமடம் என வழங்கப்பட்ட இந்தக் கட்டடம்தான் இன்று ஆதீனத்தின் தலைமை இடமாகவும் மூவர் சமாதி ஆலயவளாகமாகவும் விளங்குகிறது.
சுவாமிகள் ஒரு சமயம் மேலைத் திருமடத்தின் (அம்மன்கோயில் என வழங்கப்படும்) தெற்கு அறையில் பன்னிரண்டு நாள்கள் உணவு இல்லாமல் நிட்டையில் இருந்தார். அப்போது அம்பிகை ஒரு சுமங்கலியாக மூன்றுவயதுக் குழந்தையாக முருகவேளை எடுத்துக்கொண்டு காட்சியளித்தாள். அம்மை குழந்தையைக் கீழே விட முருகப்பெருமான் நடன தரிசனம் அளித்தார். இந்த அருள் அனுபவத்தைச் சுவாமிகள்,
குமரன் குழந்தை உருவாய்க் குலவி
அமரரும் காண்டற்கு அரிதாய்த் - திமிரம் அறச்
செய்த திருநடம்என் சிந்தை அறியும் அன்றிப்
பொய்யர் அறியாப் புகழ்
எனப் பதிவு செய்துள்ளார்.
திருவாமாத்தூரில் வண்ணச்சரபரின் சமாதியின்மீது தண்டபாணியின் திருவுருவை நிறுவி 22-4-1916 அன்று திருக்குட முழுக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுவாமிகள் தம் மடாலயத்தில் வழிபாட்டில் இருந்த பெரிய வேல் ஒன்றை எடுத்துக் கொண்டுபோய்க் குருகாணிக்கையாகச் சமர்ப்பித்தார்.
இந்தத் திருக்குட முழுக்குக்கு முன்பே,"திருவாமாத்தூர் மடாலயத்திற்கு நாள் முறையில் அமைந்திருந்த பொருட்கடன் முழுதும் தாம் நேரில் கொடுத்து நிவிர்த்தித்தும், ஆலய பூசை நிவேதனங்களுக்கு வேண்டிய பூமிகள் வாங்கி ஸ்தாபித்தும், கும்பாபிஷேக பூர்வாங்கங்கள் இனிது அமையக்கண்டும், வருகின்ற பல நாட்டுப் பல பக்தர்கள் புலவர்களிடம் சம்பாஷித்தும், அம்மையவர்களின் (வண்ணச்சரபரின் மனைவி சுந்தரத்தம்மை) அருள்மொழிகளைச் செவியார வினவியும், சற்குருநாதர் திருவடிகளை மனமாரச் சிந்தித்தும் இருந்தனர்"
(ஸ்ரீ இராமானந்த விஜயம் - கையெழுத்துப்படி - பக்.231)
திருக்குட முழுக்கு நிறைவேறிச் சிலநாள் கழித்துச் சுவாமிகள் தம் திருமடத்திற்குத் திரும்பினார்.
இந்தக் காலகட்டத்தில் சிரவைக் கந்தசாமி சுவாமிகள், சிரவைச் சபாபதி சுவாமிகள், கணபதி சின்னசாமி சுவாமிகள், எறிபத்த சுவாமிகள், சேக்கிழார் சுவாமிகள், சௌரிபாளையம் இராமலிங்கத் தேவர் ஐயா, கீரநத்தம் மருதாசல சுவாமிகள், வெள்ளக்கிணறு முருகானந்த சுவாமிகள் போன்ற பல சீடர்கள் உருவாயினர். இவர்களுள் சிலர் தங்கள் பகுதியில் தனியாகக் கோவில்கட்டி வழிபட்டு வந்தனர். தலைமைச்சீடர் ஆகிய தவத்திரு. சிரவைக் கந்தசாமி சுவாமிகள் பிறகு ஆதீனத்தின் இரண்டாம் பட்டமாக நியமிக்கப்பட்டார்.
சந்நிதானங்கள் தம் குருநாதராகிய வண்ணச்சரபரின் தியானாநுபூதி, நானிலைச் சதகம், கௌமார முறைமை முதலிய சாத்திர நூல்களை ஓலைச் சுவடிகளிலிருந்து தம் கைப்படப் பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு தாம் படித்துவந்ததுடன் தக்கவர் கற்றுணர்ந்து பயன்பெற வழங்கியும் வந்தார். இவருடைய வாழ்வும் வாக்கும் அந்தச் சாத்திரங்களின் இலக்கியமாகவே மிளிர்ந்தன. வெள்ளிக்கிழமை தோறும் கௌமாரர்கள் கூடித் தத்துவத் தெளிவு பெறுமாறு, நாமரூப பேதத்தால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சமயக் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் சமரச உணர்வை ஊட்டுவதற்காகச் சுவாமிகள் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
உலக வாழ்வதனை ஓர் பொழு தேனும்
உள்ளத்தில் வேண்டிடில் வீண்சஞ்
சலம்அது அலாமல் உற்று நோக்கிடில் என்
சாற்றிட வகை இதில் உண்டோ?
மலரினும் மெலிய நினதடி நினைக்கின்
மகிழ்ச்சி ஆம்; வினைஇருள் அகலும்
தலைமை வேலவனே! என்னை ஆண்டருள்வாய்
சரவணானந்த சண்முகனே!
-சண்முக மாலை.
தாம் பல வெள்ளிக்கிழமைகளில் பேசிய பிறகு (பின்னாள் பேரூர் தெற்கு நந்தவனம்) சுந்தர சுவாமிகளைப் பேச வைத்துக் கேட்டு வந்தார். இந்த வெள்ளிக்கிழமைச் சொற்பொழிவு அரங்கமே அமைப்பு ரீதியான ஓர் அவையாக மலர்ந்தது. அந்த அமைப்பு சதுர்வேத சித்தாந்த சண்மத சமயாதீத அத்துவித கௌமார சபை என மிகவும் விளக்கமான பெயரில் பதிவு செய்யப்பட்டது.
இத்தகைய கெளமார சபையை உருவாக்கிய பிறகு சுவாமிகள் தம் ஏகாந்தத் தவத்துக்கென்று கனக சபை என்னும் ஒரு கட்டடத்தை உருவாக்கினார். இதில் நிலமட்டத்திற்கு அடியில் மையப் பகுதியில் பரமயோக சமாதிக்கு உரிய சுரங்கக்குகையும், நான்கு பக்கமும் வாயில்களும், பெரிய அறைகளும், மேல்மாடியில் குருநாதரை வழிபடத் தனி மாடமும், உச்சியில் மூன்று கலசங்களும் அமைந்துள்ளன. 20.8.1920 வெள்ளிக்கிழமையன்று சுவாமிகள் இக்கனகசபைக்குள் பிரவேசித்து வழிபாடாற்றினார். பிறகு கனகசபையிலேயே தவம் செய்து கொண்டிருந்தார். நம் சுவாமிகள் அவ்வப்பொழுது பழனி, மதுரை, திருப்பரங்குன்றம், நெல்லை, குறுக்குத்துறை, திருச்செந்தூர், பாபநாசம், திருச்சி, சிதம்பரம், திருவாமாத்தூர், மயிலம், சென்னை ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரையாகச் சென்று வந்தார்.
சுவாமிகளுக்குத் தொண்ணூற்றொன்பதாவது வயது நடந்து கொண்டிருக்கும் போது தவத்திரு (கஜபூசைச்) சுந்தர சுவாமிகள் உள்ளிட்ட அன்பர்கள் பலரும் நூற்றாண்டு விழாவை மிகப்பெரிய அளவில் கொண்டாடப் பேரார்வத்துடன் காத்திருந்தனர். அப்போது உயர்நிலைப் பள்ளி ஒன்றைத் தொடங்க எண்ணியிருந்தனர். ஆனால் அவை ஒன்றும் நிறைவேறவில்லை.
துன்முகி ஆண்டு மார்கழி ஏழாம் தேதி வெள்ளிக்கிழமைக்குச் சரியான 21-12-1956 அன்று மாலை ஐந்து மணியளவில் யாரும் சற்றும் எதிர்பார்க்காதவாறு கனகசபையில் நாற்காலியில் இருந்தபடியே தமது மனம் ஒடுங்கிய நிட்டையில் கூடிப் பரவெளியில் தமது ஆன்மாவை ஒன்றுபடுத்திச் சற்குருநாதர் திருவருளோடு ஒன்றிவிட்டார். அருகில் இருந்தவர்களாலும் இதை அறியமுடியவில்லை.
கௌமாரசபைக் கோயிலின் மூலத்தானத்தின்கீழ் முன்னமே அமைக்கப்பட்டிருந்த குகையில் சுவாமிகளின் திருமேனி நல்லடக்கம் செய்யப்பெற்று உரிய வழிபாடுகள் முறையாகச் செய்யப்பெற்றன. இன்றுவரை மகா சந்நிதானங்களாகிய தவத்திரு இராமானந்த சுவாமிகளின் சமாதிக்கு நாள் வழிபாடும், அவதார விழா குருபூசை விழா ஆகிய சிறப்பு வழிபாடுகளும் தவறாமல் முறையாக நடைபெற்று வருகின்றன.