top of page
வண்ணச்சரபம்
தவத்திரு. தண்டபாணி சுவாமிகள்

பரிதி ஈசன் பராசக்தி மாயவன் 
கரிமுகன் குகன் என்னக் கவின்தரு 
பெரிய சற்குரு பொற்பதம் பேணுவார் 
அரிய தாள் மகரந்தம் அணித்துய்வாம்
-வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
திருநெல்வேலியில் சைவ வேளாள மரபினராகிய செந்தினாயகம் பிள்ளை என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் நெற்கட்டும்செவ்வல் ஜமீனில் தானாபதியாக இருந்தார். இவருடைய மனைவியார் பேச்சிமுத்து அம்மையார். இவர்களின் முதல் மைந்தனாக 28-11-1839 அன்று நம் சுவாமிகள் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சங்கரலிங்கம் எனப் பெயர் சூட்டினர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரபுத்திர பிள்ளை எனத் தம்பி ஒருவரும் பிறந்தார்.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட சுவாமிகள் கல்வியில் ஊக்கமுடையவராக இருந்தார். இவருடைய ஏழாவது வயதில் தந்தையார் காலமானார். மந்திரசித்தி கைவரப் பெற்ற சீதாராம நாயுடு என்பவர் தந்தையாரின் நண்பர். அவர் நம் சுவாமிகளுக்கு மிக்க இளமையிலேயே விநாயக, இலட்சுமி, ஆறெழுத்து மந்திரங்களை முறைப்படி உபதேசித்துச் செப, பூசை முறைகளைக் கற்பித்தார். இவர் அவற்றைத் தவறாமல் கடைப்பிடித்துவந்தார்.
தந்தையார் காலமானபின் இவர் தென்காசியையடுத்த சுரண்டையில் தன் பெரிய தாயாரின் வீட்டில் வளர்ந்து வந்தார். அவ்வூர்க் கோவில் இறைவியின் பெயர் பூமிகாத்தாள் என்பது. இப்பெயர்க் காரணம்பற்றி இவர் வெண்பா ஒன்றைக் கூறினார். இதுதான் இவருடைய முதல் செய்யுள். அப்போது இவருக்கு வயது 9. சுரண்டையில் சில காலம் கழித்தபின் மீண்டும் நெல்லை சென்றார். மீண்டும் சீதாராம நாயுடு அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. இவருடைய பதின்மூன்றாவது வயதில் தம் ஆழ்ந்த முருக பக்தியால் மக்களால் முருகதாசன் என வழங்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கும் சீதாராம நாயுடு அவர்களுக்கும் ஆன்மீக விஷயங்களில் சில கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன.
சில ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாசர் வள்ளியூர் மலைக்குச் சென்று தாமே கல்லாடையணிந்து துறவுக்கோலம் பூண்டார். யாரும் இவருக்கு முறைப்படித் தீட்சையளித்துத் துறவியாக்கவில்லை. ஒருமுறை நெல்லையின் அருகில் உள்ள திருமலை என்னும் தலத்தில் முருகப்பெருமான் நேரில் காட்சியளிக்கவில்லை என்பதற்காக மலையிலிருந்து கீழே உருண்டார். இடது தோளில் ஒரு புண் ஏற்பட்டதைத் தவிரச் சுவாமிகளுக்குப் பெரிய தீங்கு எதுவும் நேரவில்லை. பிறகு நெல்லையில் தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்று தொடங்கித் தம் தம்பி சித்திரபுத்திர பிள்ளை உள்ளிட்ட பலருக்குக் கல்வி புகட்டினார். தம்பிக்கு உரிய காலத்தில் திருமணம் செய்து வைத்தார்.
சுவாமிகள் தமக்குத் திருவருள் துணை மிகுதியாக இருப்பதை உள்ளுணர்வால் உணரத் தொடங்கினார். இவர் தம் சுயசரிதையான குருபரதத்துவம் என்னும் காவியத்தில் தாம் கண்ட கனவுகள், மனவெளிக் காட்சிகள் எனப் பலவற்றைக் குறிப்பிடுகிறார். முருக பக்தராகவும் தமிழ்ப் புலவராகவும் இவர் புகழ்பெருகிற்று. அதனால் சீதாராம நாயுடுவின் புதல்வர் முத்துகிருஷ்ணன் என்பவர் இவர்பால் அழுக்காறடைந்தார். அவர் தம் தந்தையோடு சேர்ந்து முருகதாசருக்கு மாந்திரீக முறையில் தீமை புரிய முயன்றார். ஆனால் அம்முயற்சிகள் வீணாயின.
உடல் முழுதும் திருநீறு பூசிக் கையில் ஒரு தண்டினைத் தாங்கியிருந்ததால் தண்டபாணி சுவாமிகள் என்றும், பெருமளவில் திருப்புகழ்ப் பாக்களை இயற்றியதால் திருப்புகழ்ச் சுவாமிகள் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட முருகதாசரின் இயற்பெயராகிய சங்கரலிங்கம் என்பது வழங்கப்பெறவே இல்லை. அரிய வண்ணக் கவிகளை விரைவில் பாடும் ஆற்றலால் வண்ணச்சரபம் என்னும் சிறப்புப்பட்டம் இவரை வந்தடைந்தது.
சுவாமிகளின் இருபத்திரண்டாவது வயதில் தலயாத்திரை தொடங்கி மதுரை, சிதம்பரம் வழியாகச் சென்னை சென்றார். அங்குக் கந்தகோட்டத்து முருகன் பிள்ளைத்தமிழ் இயற்றி கோவிலில் அரங்கேற்றினார். அதில் காஞ்சீபுரம் மகாவித்வான் சபாபதி முதலியார், புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் போன்ற பெரும்புலவர்கள் பங்கேற்றனர். அப்போது எழுப்பப்பட்ட சில தடைகளுக்குத் தக்க விளக்கங்களை அளித்து அரங்கேற்றத்தை இனிதே நிறைவேற்றினார்.
அடுத்துச் சுவாமிகள் இராயவேலூர் சென்றார். அவ்வூரில் அந்தணர் ஒருவரும் வேளாளர் ஒருவரும் சேர்ந்து இவரிடம் உலக மொழிகள் அனைத்திலும் வடமொழியே சிறந்தது என்றும் தமிழுக்கொரு தனிச்சிறப்பும் கிடையாது என்றும் வாதிட்டனர். இவர் அவர்களை எதிர்த்து ஒருநாள் மாலையிலிருந்து இரவு நெடுநேரம்வரை வாதிட்டார். விவாதம் முடிவின்றி வளர்ந்துகொண்டே போயிற்று; கருத்தொற்றுமை ஏற்படவில்லை. பிறகு இருதரப்பினரும் திருவுளச்சீட்டுப் போட்டு விவாதத்தை முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டனர். பலவிதமாக ஏழு சீட்டுகள் எழுதிப் போடப்பட்டு ஒரு சிறுமியால் எடுக்கப்பட்ட சீட்டில் தமிழே உயர்வு என்ற சீட்டு வந்தது. உணர்ச்சிவசப்பட்ட வண்ணச்சரபர் அச்சீட்டைக் கண்களில் ஒற்றிக்கொண்டு வாயிலிட்டுமென்று தின்றுவிட்டார். உடனே, “தமிழே உயர்ச்சி என்ற சீட்டுக் கொடுத்த பெருமாளே” எனத் திருப்புகழ் ஒன்றும், தமிழ்த்துதிப் பதிகம் ஒன்றும், தமிழலங்காரம் என்னும் நூறு செய்யுள்களாலான நூல் ஒன்றும் இயற்றினார்.
"தமிழ் மொழிக்கு உயர்மொழி தரணியில் உளது எனில் 
வெகுளியற்று இருப்போன் வெறும் புலவோனே"
என்பது இவருடைய அறுவகை இலக்கண நூற்பா.
தலப்பயணத்தின்போது புதுச்சேரி வேலாயுதம் பிள்ளை திருமலையம்மை என்னும் இணையருக்கு மூன்றாவது மகளாகப் பிறந்த சுந்தரம்மை என்பவரை மயிலம் முருகன் ஆலயத்தில் உருத்திராக்கம் ஒன்றை மங்கல அணியாக அணிவித்து வாழ்க்கைத் துணையாக ஏற்றார். பிறகு தம் சொந்த ஊராகிய நெல்லையைச் சென்றடைந்தார்.
வண்ணச்சரபர் பலமுறை தலயாத்திரை மேற்கொண்டார். கடைசியாக விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூரில் எல்லைதாண்டா விரதத்தை மேற்கொண்டு அங்கேயே குடும்பத்துடன் வாழ்ந்திருந்தார். அவருக்குச் செந்தினாயகம் பிள்ளை என ஒரு மகனும் ஈசுவர வடிவு என ஒரு மகளும் தோன்றினர். அந்த வம்சபரம்பரை இன்னமும் சிறப்புற வளர்ந்து வருகிறது. சுவாமிகள் தமது 59 ஆவது வயதில் 5-7-1898 அன்று திருவாமாத்தூரிலேயே சமாதி அடைந்தார். அவருடைய சமாதி ஆலயம் இன்றுவரை நன்கு பேணப்பட்டு நாள் வழிபாடும், குருபூசையும் நடைபெற்று வருகின்றன. சுவாமிகளின் பேரரின் மைந்தன் ஆகிய முருக. தண்டபாணி ஐயா அவர்கள் திருவாமாத்தூர் மடாலயத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
வண்ணச்சரபரின் சமயக்கொள்கைகள்
சுவாமிகளின் தத்துவக் கருத்துக்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. இவர் உபதேசிக்கும் கௌமாரம் என்னும் குறியீடு முருக வழிபாடு என்னும் மேற்போக்கான பொருளோடு நின்றுவிடுவது அல்ல. அது ஆழமான தத்துவச் செறிவு மிக்க ஒரு மெய்யியற் கோட்பாடு ஆகும். இவர்தம் தத்துவக் கோட்பாடுகளை விளக்கப் பன்னிரண்டு சாத்திர நூல்களை இயற்றியுள்ளார். இவை மொழிபெயர்ப்போ தழுவலோ அல்லாத தமிழ் முதல் நூல்கள் ஆகும். இவற்றுள் இன்றுவரை ஆறு அச்சேறி உள்ளன. அவற்றுள் கௌமார முறைமை, தியானாநுபூதி, நானிலைச் சதகம் என்னும் மூன்று மட்டுமே பெயரளவில் சிலரால் அறியப்பட்டுள்ளன. ஏனைய வருமாறு: 1.கௌமார தீபம், 2.கௌமார நூல், 3. கௌமார லகரி, 4. கௌமார விநோதம், 5. சதக உந்தி, 6. சுப்பிரமணிய நூல், 7. ஞான அந்தாதி, 8. பதிக உந்தி, 9.பிரணவாநுபூதி.
வண்ணச்சரபர் வழிபாட்டு நெறியில் முருகக் கடவுளைத் தம் வழிபடு கடவுளாகக் கொண்ட கௌமாரர். மெய்யியல் நிலையில் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்தைப் பெரும்பான்மையாகவும் சங்கரரின் அத்துவிதத்தைச் சில இடங்களிலும் ஏற்றுக் கொள்பவர். சூரியன் முதலிய அறுசமய வடிவங்களும் ஒரே பரம்பொருளின் பல்வேறு பண்புகளை உருவகப்படுத்தும் கற்பனைகள் என்பதுவும், இவற்றுள் எதனை வழிபட்டாலும் அவ்வழிபாட்டை ஏற்றுப் பயன்தரும் பரம்பொருள் ஒன்றே என்பதுவும், அது தனக்கெனத் தனிப் பெயரோ வடிவமோ இல்லாத ஒன்று என்பதுவும் இவருடைய அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். உருவ வழிபாட்டோடு ஒரே தெய்வ உபாசனையில் உறுதியாக நின்றால் சமரசம், சமயாதீதம் ஆகிய மேல்நிலைகள் தாமே இயல்பாக அவன்மாட்டு வரும் என்பது சுவாமிகளின் கொள்கை.
ஒருவன் தன்னால் வழிபடப்படுகின்ற உருவத்தையும் பெயரையும் உடைய தெய்வம் ஒன்றுதான் உண்மையானதும் மேலானதும் ஆகும் எனவும், மற்ற தெய்வங்கள் யாவும் பொய்யானவை அல்லது இழிந்தவை எனவும் கருதுவதுதான் தீவிரமான சமயவாழ்க்கையின் பொதுவான தொடக்க நிலை ஆகும். இதனை வண்ணச்சரபம் சுவாமிகள் இளம்பக்குவம் என்பார். இது பக்குவ நிலைதான் என்பது உளம் கொள்ளத்தக்கது. இந்த நிலையில் பக்தியோடு வழிபாடு ஆழங்கால் படப்பட அநுபவ முதிர்ச்சி ஏற்படும். அந்நிலையில் தன் வழிபடு தெய்வம்தான் பிற சமய வழிபாடுகளையும் ஏற்று அருள் வழங்குகிறது என்னும் எண்ணம் உண்டாகும். அப்போது பிற தெய்வ வடிவங்களையோ சமயங்களையோ பழிக்காத தன்மை தோன்றும். தன் ஆன்ம நாயகரிடம் பக்தி இருப்பினும் பிற தெய்வ வெறுப்பு இருக்காது. இந்த நிலையைத்தான் வண்ணச்சரபம் சுவாமிகள் சமரசம் என்கிறார்.
எடுத்துக்காட்டாக, சக்தி வழிபாட்டில் பேரீடுபாடு கொண்ட தேவிஉபாசகன் ஒருவன், “அன்னையே பரம்பொருள்; வேறு தெய்வங்களே இல்லை; இருப்பினும் கீழானவை" என்று உறுதியாக நம்பிப் பக்தியுடன் வழிபடுவது இளம்பக்குவம் ஆகும். இந்தச் சக்தி வழிபாடே முதிரமுதிரத் தன்னால் வழிபடப்பெறும் தேவிதான் பிற சமயிகளுக்கும் அவர்கள் வேண்டியவாறு அருள்புரிகிறாள் என அவன் அநுபவ பூர்வமாக உணர்வது சமரசம் ஆகும்.
தன் சமயம் மட்டுமே மேலானது என்னும் நிலையைத் தாண்டி இவ்வாறு சமரச நிலையை அடைந்த ஒருவன் மேலும் சமய வாழ்க்கையில் அனுபவம் முதிரமுதிரப் பரம்பொருள் ஒன்றே என்றும், அந்தப் பரமே தன் வழிபடுதெய்வம் உள்ளிட்ட எல்லா வடிவங்களையும் பெயர்களையும் தாங்கி அருள்புரிகிறது என்றும் உணர்வான். இந்த இரண்டாவது படியே சமயாதீதம் எனப்படுகிறது. இதற்குச் சமயங்களைக் கடந்த நிலை என்பது பொருள். உபாசகன் ஒருவன் இந்த நிலையில் எல்லாச் சமயங்களையும் தாண்டி மேலே சென்றுவிடுவதால் அவன் பார்வையில் நன்மை தீமை உயர்வு தாழ்வு எதுவுமே இல்லை. இந்த நிலையிலிருந்து சொல்லும் போதுதான் எம்மதமும் சம்மதம் என்பது முழுமையான பொருள் பொதிந்த வார்த்தை ஆகும்.
எடுத்துக்காட்டாக மேலே காட்டப்பட்ட சாக்தேயன் தன் சமரச நிலை முதிர்ந்து, தான் வழிபடும் சக்தி வடிவமும் உருவமற்ற பரம்பொருள் ஒன்றின் கற்பனை வடிவமே என உணர்வது சமயாதீதம் ஆகும். சமரச, சமயாதீத நிலைகளை அடையாமல் கூறப்படுகின்ற “ஒருவனே தேவன்" என்னும் கூற்று பொருளற்ற வெற்றுக் கூப்பாடே என்பதை,
மெய்வளர் ஞானம் விளங்கியோர் போலத் 
தெய்வம் ஒன்று என்னச் செப்புவார் கோடி; 
ஐவர் அடங்க அரைக்கணமேனும்
செய்வது செய்து செயல் அறியாரே. (கௌமார லகரி 81) 
என வண்ணச்சரபர் அறிவுறுத்துகிறார்.
வண்ணச்சரபம் சுவாமிகள் வகுத்தளித்துள்ள தத்துவக் கோட்பாடாகிய கௌமாரம் மிக விரிவாகவும் தெளிவாகவும் மெய்யறிஞர்களிடையே பரப்பப்பட வேண்டிய ஒரு சிந்தனை ஆகும். வலுவும் பொலிவும் மிக்க சமயப் பொதுமை ஆகிய கௌமாரம் பூசலற்ற சமுதாயத்தைப் படைப்பது மட்டுமன்றி, அதன் அலகுகளாகிய தனி மனிதனின் இம்மை மறுமை நலங்களையும் உறுதி செய்வது ஆகும்.

bottom of page