
குருமரபு
இந்து சமயத் தத்துவங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஓர் ஆசிரியரால் தோற்றுவிக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுவர். எடுத்துக்காட்டாக அத்துவித வேதாந்தம் சங்கரராலும், விசிஷ்டாத்துவிதம் இராமாநுஜராலும், சைவ சித்தாந்தம் மெய்கண்டாராலும் தோற்றுவிக்கப்பட்டவை என்பர். இது உலகியல் நெறிக்கு ஓர் அளவு ஏற்புடையது தான். எனினும் அந்தந்தத் தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் அப்படிக் கூறுவது இல்லை. இவை முறையே (சதாசிவன், சதாசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம், திருமகள் கேள்வன் லக்ஷ்மீநாத சமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்), சிவபெருமான் (கயிலாய பரம்பரையில்) ஆகியோரால் முதன் முதலில் உணர்த்தப்பட்டு இந்தக் குருமார்களால் உலகத்தில் பரப்பப்பட்டது என்று சொல்வர். இது தான் சமய ஒழுகலாறு - சம்ப்ரதாயம்.
சைவசித்தாந்தம் முதன் முதலில் சிவபெருமான் நந்தியெம்பெருமானுக்கு உபதேசிக்க, அந்த உண்மைகள் சனற்குமார முனிவர் முதலிய முன்னோர் வழியாக மெய்கண்டாரை வந்தடைந்தது என்பதுதான் சைவ மரபு. இது இந்து சமயம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் தோன்றிய புத்தம், சமணம் ஆகிய புறச் சமயங்களும் கைக்கொள்ளும் மரபு ஆகும். கௌதம புத்தருக்கு முன்பே பல புத்தர்கள் இருந்தனர் என்றும், மகாவீரருக்கு முன்பே இருபத்து மூன்று தீர்த்தங்கரர்கள் இருந்தனர் என்றும் அந்தந்தச் சமய நூல்கள் கூறும். இந்த மரபைப் புராணப் புளுகு என்றோ, பெருமை ஏற்படுவதற்காகச் செய்யப்பட்ட கற்பனை என்றோ இகழ்ந்து ஒதுக்கிவிடுதல் அறிவுடைமை ஆகாது.
தத்துவக் கோட்பாடுகள் என்பன திடீரென்று ஒரு நாள் ஒருவரால் தன் விருப்பப்படி சொல்லப்படுவன அல்ல. அவை ஒரு சமூகத்தில் பல அறிஞர்கள் பல தலைமுறைகளாக உராய்ந்து முடிவு செய்யும் சிந்தனைத் தொகுப்புகளே ஆகும். இச்சிந்தனைகள் பல தலைமுறைகள் தமக்கென ஒரு பெயரோ அமைப்போ இல்லாமல் செவிவழியாகவே பரவும். இறுதியில் குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒருவரால் இறுதி வடிவம் பெற்று நூலாக நிலைபெறும். அவர் பெயர் மட்டுமே வரலாற்றுப் பதிவு பெறுகிறது. சமய மரபு என்பது தம் ஆசிரியர்களைப் போற்றி அவர்கட்கு உண்மையுடையவனாக இருத்தலைத் தலையாய ஒழுக்கமாகக் கொண்டுள்ளதால் முந்தையோர் குருமரபின் முன்னோர் ஆகக் கொள்ளப்படுகின்றனர். வைதிக சமயங்கள் யாவும் மறைகளிலிருந்து கிளைத்த சிந்தனைகள் தாம் என நம்பப்படுவதால் வேத முதல்வன் எனப்படும் சிவபிரான் அல்லது திருமால் இந்தச் சமயங்களுக்கு முதல் ஆசிரியராகக் கொள்ளப்படுகிறார்.
ஆசிரியர் மாணவர் என வாழையடி வாழையாக வரும் உபதேச நெறி சந்தானம் எனப்படும். இச்சொல் பொதுவகையில் ஒருவருடைய வம்சபரம்பரையையும், சிறப்பாகச் சீட பரம்பரையையும் குறிக்கும். மேலே கூறியபடி ஓர் ஆதீனத்தின் முதல் குருநாதராகிய தெய்வம் அகச்சந்தான முதல்வர் ஆவார். அகச்சந்தானம் பெரும்பாலும் கயிலையில் அல்லது வைகுந்தத்தில் தோன்றியதாகக் கூறப்படும். அடுத்து அத்தெய்வத்திடம் உபதேசம் பெற்ற ஆசிரியரிடத்திலிருந்து தொடரும் வழிமுறை புறச்சந்தானம் எனப்படும். புறச்சந்தானம் என்பது நில உலகில் தோன்றிய வழிமுறை எனலாம். புறச்சந்தான ஆசிரியரிடம் உபதேசம் பெற்ற ஒருவர் அந்தத் தத்துவக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ஒரு நிறுவனத்தைத் தோற்றுவிக்கிறார். அதுவே மடாலயம் அல்லது ஆதீனம் ஆகிறது. இந்த நிறுவனரிடம் உபதேசம் பெற்ற ஒருவர் அதன் இரண்டாவது தலைவர் ஆகிறார். அவருடைய சீடர் மூன்றாவது தலைவர், அவருடைய மாணவர் நான்காமவர் என ஆசிரியர் மாணவர் பரம்பரை தொடர்ந்து வருவதால் இவ்வழிமுறை உபதேச பரம்பரை எனப்படும்.
உபதேச பரம்பரையில் வரும் ஆதீனத் தலைவர்களைச் சந்நிதானங்கள் என்றும், பெரிய எனப் பொருள்தரும் முன்னொட்டைச் சேர்த்து மகா சந்நிதானங்கள் எனவும் குறிப்பிடுதல் மரபு. சுருக்கமாக ஆதீன கர்த்தர் எனவும் வழங்கப்படுகிறது.
இந்தச் சமய சம்ப்ரதாயப் பின்புலத்தில் இனிச் சிரவையாதீனத்தின் குருமரபைக் காண்போம்.
கெளமார நெறியின் முதன்மை வாய்ந்த வழிபடு கடவுள் முருகப்பெருமான். அவர் கடவுளர்களுக்குள் பெரியவர் ஆன சிவபெருமானுக்கும், முனிவர்களுக்குள் சிறந்தவர் ஆகிய அகத்தியருக்கும், மனிதர்களுக்குள் உயர்ந்தவர் ஆகிய அருணகிரிநாதருக்கும் ஞான உபதேசம் புரிந்தார். இவற்றுள் முதலாவது குருத்துவத்தின் மேன்மையை உணர்த்துவதற்காக இறைவன் புரிந்த திருவிளையாடல் என்றும், ஏனைய இரண்டும் மாணவர் ஒருவர் தக்க ஞானாசிரியரைத் தேடி அடைந்து வழிபட்டுக் குருவின் கருணையால் உபதேசம் பெறும் ஞானதீட்சை என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சிரவையாதீனத்திற்குப் பரம்பொருளின் தேசிகத் தன்மையை விளக்குகின்ற முருகக்கடவுள் அகச்சந்தான முதற்குரு ஆகிறார். இவர் கயிலாயவாசி (கந்தகிரி) கந்தவேளால் சும்மா இரு சொல் அற என நெறிப்படுத்தப்பட்டு, ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவிக்கப்பட்ட அருணகிரிநாதப் பெருமான் புறச்சந்தானத்தின் முதல் குருநாதர் ஆகிறார். இப்பெருமானின் அமிசமாக உதித்த தவத்திரு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இரண்டாவது குருநாதர் ஆகிறார். இப்படிச் சிரவையாதீனப் புறச்சந்தான குரவர்கள் இருவர் ஆகின்றனர். இவர்கள் நில உலகவாசிகள்.
வண்ணச்சரபரிடம் நேராக உபதேசம் பெற்றுச் சிரவணபுரத்தில் கௌமார மடாலயத்தைத் தோற்றுவித்த தவத்திரு இராமானந்த சுவாமிகளிலிருந்து உபதேச பரம்பரை தொடங்கி இன்றுவரை சிறப்பாக அருளாட்சி நடைபெற்று வருகிறது. இந்த உபதேச பரம்பரை பாரும் பரமன் பேரும் உள்ளமட்டும் நீடினிது செழித்தோங்கி வளர்வதாகுக! சந்நிதானங்களை அடுத்துத் தவத்திரு சிரவைக் கந்தசாமி சுவாமிகளும், தொடர்ந்து தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகளும் ஆதீனத் தலைமை ஏற்று அருட்செங்கோல் ஒச்சிப் பெரும்புகழ் பெற்று விளங்கினர். இப்போது போற்றுதலுக்குரிய தவத்திரு குமரகுருபர சுவாமிகள் நான்காம் பட்டமாக ஆதீனத்தைச் செம்மையாகப் பரிபாலித்து வருகிறார்.
சிரவையாதீனக் குருபரம்பரை
அகச்சந்தானம்
முருகக்கடவுள்
புறச்சந்தானம்
1. அருணகிரிநாதர்
6.தவத்திரு. குமரகுருபர சுவாமிகள்